கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< கவிஞன் யார் ? >> (தொடர்ச்சி) கவிதை -6 பாகம் -2

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Kahlil Gibran Paintings

The Super Mother

“இப்பெரும் (அமெரிக்க) தேசத்தை உருவாக்கிய மூலப் பிதாக்களிடம் நீங்கள் இப்படிச் சொல்லலாம் என்று நான் நம்புகிறேன், “இதோ நான் ஒரு வாலிபன், லெபனானிலிருந்து வந்த இளமை மரம் ! ஆயினும் எனது வேர் ஆழமாக இங்கு நுழைந்துள்ளது ! பயன்தரும் பழக்கனிகளை அளிக்க வல்லது.”

கலில் கிப்ரான்.

மலைச் சரிவுகளில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த வெண்ணிற மரங்களின் குளிர்ந்த நிழலில் அமர்ந்து பசுமைப் புல்வெளிகளில் அமைதியையும், மனச் சாந்தியும் பெறும் போது உன்னிதயம் மௌனமாய்ச் சொல்லட்டும் : “கடவுள் காரணத்துடன் படைத்துள்ளது என்று.”

புயல் அடிக்கும் போது, அசுரக் காற்று காட்டு வனத்தை அசைக்கும் போது, இடியும் மின்னலும் வான் மீது பேராதிக்கம் செலுத்தும் போது உன்னிதயம் அச்சமோடு சொல்லிக் கொள்ளட்டும் : “கடவுள் ஆங்காரத்தோடு உலவுகிறது என்று.”

கலில் கிப்ரான்.

<< கவிஞன் யார் ? >>
(தொடர்ச்சி)

ஈதோ இவன்தான் கவிஞன் !
இந்தப் பிறப்பில்
புறக்கணிக்கப் படுபவன்
மக்களால் !
வரவேற்கப் படுவான்
புவிக்கு
விடை கூறிப்
புறப்படும் போது,
மேலோ கத்தில் தனது
கால்களை வைக்க
மீளும் போது !

ஈதோ இவன்தான் கவிஞன் !
புன்முறுவல் தவிர வேறு
ஒன்றைக் கேளாதவன் !

ஈதோ இவன்தான் கவிஞன் !
அழகிய வாய்மொழிகள்
நிரம்பி
அதி உயரத்தில் எழும்
ஆன்மீகச் சிந்தனை வாதி !
ஆயினும்
அவனது ஒளிக்கதிர்
தம் மீது விழாமல்
தவிர்த்துக் கொள்வர்
புவிமக்கள் !

எதுவரைத் தூக்கத்தில் மனிதர்
ஒதுங்கிக் கிடப்பார் ?
காலப் போக்கின் அதிர்ஷ்டத்தால்
பெரும் புகழ் பெற்ற
மனிதரைத்
தொடர்ந்து போற்றுவது
எதுவரை ? மனிதரின்
ஆன்மீக எழில் மயத்தைக் காணத்
தூண்டும் கவிஞனை,
அமைதிக்கும், அன்பு மயத்துக்கும்
அடையாள மானவனைப்
புறக்கணிப்பது
எத்தனை
வருடங்கள் நீடிக்கும் ?

அறிவிலி கட்டு
ஒளியூட்டி,
ஒளிப் பாதைக்குத்
திசைகாட்டி
எரிந்து தின்னப் படும்
மெழுகு வர்த்தியாய்
உருகிப் போவோனை
ஒதுக்கி
இன்னல்கள் சூழ்ந்திட
வாழ்வோனைப்
பேணா
மனித இனம்
எதுவரை
மரித்தோரை மதித்து
வசிப்போரை மறக்கும் ?

கவிஞனே ! நீ
இந்த வாழ்வுக்கு உயிர் !
கடின இடர்கள்
இடைப் புகுந்தும்
முடிவில்
வென்று மீண்டவன் !

கவிஞனே !
நீ ஒரு நாள்
இந்த இதயங்களை
எல்லாம் கட்டுப் படுத்தி
ஆட்சி செய்வாய் !
எல்லை யற்றது
உந்தன் பேரரசு !

கவிஞனே ! சோதிப்பாய்
உந்தன்
முட் கிரீடத்தை !
மொட்டு
மலரோடு உள்ள
வெற்றி மாலை ஒன்று
அதனுள்
மறைந்து கிடப்பதைக்
காண்பாய் நீ !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 27, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts