பாப்லோ நெருடாவின் கவிதைகள் -33 << எல்லைக்குள் காதல் >>

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


வையம் போல் விரியும்
கைப்பிடி யில்லாக்
கிண்ணத்தில் உள்ள காதலையும்,
விண்மீன்களும் முட்களும்,
பின்னி யுள்ள காதலையும்
நான் உனக்கு அளித்தேன் !
ஆயினும்
குள்ளப் பாதத்தில்
நீயோ
குதியுயர்ந்த
அழுக்குப் பாத அணி மாட்டி
அக்கினி மேல் நடந்து
அணைத்து விட்டாய் !

அந்தோ உயர்ந்த காதல் !
ஆயினும் நீ
குள்ளக் காதலி !

போராட்டத்தில் நான்
பின்வாங்க விட வில்லை !
வாழ்வை நோக்கிப் போக
சமாதா னத்தை நாட
எல்லோ ருக்கும் உணவுத் தேடத்
தடை செய்ய வில்லை !
கரங்களில் தூக்கி உன்னை
முத்தமிட்டேன் இறுகக்
கட்டிக் கொண்டு !
மனிதக் கண்கள்
இதுவரைத்
துணியாத முறையில்
துருவிப் பார்த்தேன் உன்னை !

அந்தோ உயர்ந்த காதல் !
ஆயினும் நீ
குள்ளக் காதலி !

அப்போது என் தர உயர்வை
அளக்க வில்லை நீ !
உனக்காக உணவு, நீர்,
உதிரத்தை
உதாசீனம் செய்தவனைக்
குழப்பி விட்டாய்
உனது கீழ் உடுப்புக்குள்
ஒரு சிறு பூச்சி
உட்சென்ற போது !

அந்தோ உயர்ந்த காதல் !
ஆயினும் நீ
குள்ளக் காதலி !

தூரத்தி லிருந்து உன்னை நான்
திரும்பிப் பார்ப்பேன் என்று
எதிர்பார்க் காதே !
நின்று கொள் நான்
உனக்களித்த சீதனத்துடன் !
நடந்து போ நீ
நய வஞ்சகம் செய்யப் பட்ட
என் படத்துடன் !

தொடர்ந்து செல்லும் என் பயணம்
அகண்ட பாதைக்கு
வழி திறந்து
நிழலை எதிர்த்து
வையத்தை வழுவழுப் பாக்கி !
விண்மீனின் சுடரொளியை
பரப்பி வைப்பேன்
என்னை
வரவேற் பவர்க்கு !

நிற்க வேண்டும் பாதைக்குள் !
நெருங்கி விட்டது
இரவு வேளை !
பொழுது புலர்ந்ததும்
மறுபடியும்
ஒரு வேளை
சந்திக்கலாம் நாம்
ஒருவரை ஒருவர் !

அந்தோ உயர்ந்த காதல் !
ஆயினும் நீ
குள்ளக் காதலி !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 20, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts