ஓட்டம்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

கவிதா நோர்வே


நொடிகள்
துப்பாக்கி ரவைகளைப்போல்
என்னுள் பாய்ந்து
என் முதுகின் பின் மாய்கிறது

சில நொடிகளையாவது
பிடித்துவிடும் ஆர்வத்தில்
முன்நோக்கி நகர்கிறேன்

நிமிடங்களாய்
நாட்களாய்.. வருடங்களாய்
அத்தனை நொடிகளும்
என்னை உரசியபடி
என் பின்னால் மரணிக்கின்றன

என்னுடன் சேர்ந்து
பலரும் ஒடிக்கொண்டிருக்கின்றனர்
என் முன்னே ஓடியவர்கள்
யாரும் திரும்பவில்லை

வழிநெடுக பல சினேகிதர்கள்
தொலைந்து போயினர்
சிலர் அறிமுகமாயினர்

ஓடும் அவசரத்தில்
தடுக்கி விழும் பொருட்களை
அள்ள முடிந்ததை அள்ளி கொண்டு
நானும் ஓடுகிறேன்

சிலர் கைகளில் பூக்களும் புன்னகையும்
சிலர் கைகளில் துப்பாக்கி
பலர் வெடித்துச்சிதறுண்டு போயினர்
எனக்கு முன்னே ஓடிய சிலர்
மரணித்தும் போயினர்

ஓடுகையினூடு சிலரால் தென்றலையும்
சூர்யோதயத்தையும் தரிசிக்க முடிகிறது
குருதி தெறித்து,
மனித மாமிசம் முகத்தில் அறையும்
காற்றை முகர்ந்த படி
சில சமூகம் கதறியோடுகிறது

வாய்பிளந்து
அலற முயற்சிக்கிறேன்
எனக்கு மட்டுமாய் கேட்ட
சத்தம்…
யாருக்குமே கேட்காமல்
போன சில சப்தங்களோடு
அடங்கிவிடுகிறது…

தூக்கத்திலிருந்து நான்
துள்ளி எழுந்தாலும்

இது கனவல்ல.

Series Navigation

author

கவிதா நோர்வே

கவிதா நோர்வே

Similar Posts