பாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே ! >>

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



மூழ்கி விடுகிறாய் நீ சில வேளை
ஆழ்ந்த மௌனக் குழிக்குள்
வீழ்ந்து கொண்டு !
கர்வக் கோபத்தில்
தத்தளித்து நீ
மீண்டு வருவது அபூர்வம்
உன் பிறவி அடிப்படையின்
மிச்சங்கள்
இன்னும் மேலெழுந்து
வந்திடும் உனக்கு !

என்னருமைக் காதலி ! நீ
என்ன காண்கிறாய்
உன் மூடிய கிணற்றில் ?
கடற்பாசிகள்
சதுப்புநிலச் சேறு, பாறைகள் ?
கசப்போடு
காயப் பட்டு
குருட்டுக் கண்களில் நீ
காண்பது என்ன ?

காண முடியாது கண்மணி !
எதனையும்
தவறி நீ வீழ்ந்த
கிணற்றுக்குள் !
பனித்துளி மேவும்
மல்லிகைப் பூங்கொத்து,
பள்ளத்தை விட
ஆழ்ந்த ஒரு முத்தம்,
உனக்காக நான்
உயரத்தில் வைத்தேன் !

அஞ்ச வேண்டாம்
எனைக் கண்டு நீ !
வெறுப்புக் கிணற்றில் நீ
விழ வேண்டாம்
மறுபடியும் !
உலுக்கி விடு
உன்னைக் காயப் படுத்த
வந்திடும்
என் வார்த்தையை !
வெளியே றட்டும் அது திறந்த
பலகணி வழியாக !
வந்திடும் அது
என்னைக் காயப் படுத்த நீ
உந்தி அனுப்பாமல் !
கடுப்பூட்டும் அச்சொற்கள்
விடுவிப் படையும் என்
நெஞ்சை விட்டு !

புன்னகை புரி ஒளியோடு
என் வாய் உன்னைக்
காயப் படுத்தினால் !
தெய்வக்
கதைகளில் வந்திடும்
கதா நாயகன் போல்
ஆடுகள் மேய்க்கும்
நானொரு சாந்த
மானிடன் இல்லை !
நல்ல மரவெட்டி !
மண்ணை, காற்றை மற்றும்
மலைக்காடு முட்களை
பகிர்ந்து கொள்பவன்
உன்னோடு !

என்னை நேசிப்பாய் நீ !
புன்னகை புரி
என்னை நோக்கி !
உதவி செய் எனக்கு நான்
உத்தமனாக !
என்னுள் இருக்கும்
உன்னைக்
காயப் படுத்திக் கொள்ளாய் !
எனெனில்
ஏது பயனு மில்லை !
என்னையும்
காயப் படுத்திச் செல்லாய்
நீயும்
காயப் பட்டுக்
கொண்டதால் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 23, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts