பாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாதலி உன்னைச் சீர்குலைத்தது
ஒரு கேள்வி !
மீண்டும் வந்தேன் உன்னிடம்
முள்ளான ஐயமுடன் !
வாளைப் போல் நேராக நீ
வந்திட விழைகிறேன் !
அல்லது உன் பாதை நேராக
அமைய வேண்டும் !
ஆயினும் நான் விரும்பாத
ஓர் நிழலை
முடுக்கு மூலையில் நீ
வைத்திருக்க வற்புறுத்துவாய் !

என் கண்மணி !
புரிந்துகொள் என்னை
உன்னை முழுமையாய் நான்
காதலிக் கிறேன்
கண்கள் முதல் கால்கள் வரை
ஒளிச் சுடராய் வைத்துள்ள
உன் உள்ளழகை !

உன் கதவைத் தட்டுவது
நான்தான்
என் கண்மணி !
அது பேயில்லை !
உன்னை ஒரு சமயம்
ஜன்னல் வழியாய்த்
தடுத்து நிறுத்திய ஒன்றில்லை !
கதவை உடைத்துத்
தள்ளி விட்டுப்
புகுந்தேன் உன் வாழ்வில் !
உன் ஆத்மா வுக்குள் வாழக்
குடி புகுந்தேன் !
ஆனால் என்னோ டிசைந்து
வாழ முடிய வில்லை
உன்னால் !

ஒவ்வொரு கதவாக நீ
திறக்க வேண்டும்
என் ஆணைக்குக் கீழ்ப் படிந்து !
திறந்திடு உன் கண்களை !
தேட வேண்டும் நான்
அவற்றுக் குள்ளே !
தடதட வென்று ஒலிக்கும்
என் கால்
எட்டு வைப்புகள்
பாதை நெடுவே
எப்படி உள்ள தென
எட்டிப் பார்க்க வேண்டும் நீ !

அஞ்ச வேண்டாம் நீ
உனக்கு உரியவன் நான் !
ஆயினும் நானொரு
வழிப் போக்கன் அல்லன்
பிச்சை எடுப்பவனும் அல்லன் !
நீ காத்திருந்த
உன் எஜமானன் நான் !
இப்போது நான் நுழைகிறேன்
உன் வாழ்க்கையில் !
தேவை இல்லை வேறெதுவும்
காதலி ! காதலி ! காதலி !
அங்கு நான்
தங்குவதைத் தவிர !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 9, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts