நீ….!

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

தாஜ்மூர்க்கமாய் அது
துரத்திய போது
திசைக்கொருவரென
வானில் உந்திப் பறந்தோம்
கண் கொள்ளா ஜாலங்கள்
மனதில் தேங்க வட்டமிட்டு
அசை போட்டப் பொழுதில்
புவிஈர்ப்பிற்கு இசைந்து
தாழ இறங்கிப் பறந்தநேரம்
ஏதோவொரு புள்ளியில்
பேச்சுத் துணையென
கண்டு கொண்ட நாம்
காற்றில் ஆர்வமாய்
படபடத்தோம்
கடல் மலை வனாந்திரம்
சூறை இடி மின்னல் மழைச்சுட்டி
மண் அதிர்வுகளென பேசினாய்
நீயே பேசிய பேச்சில்
மிதந்து திரும்பிய வான்பரப்போ
கையகலத்திற்குமில்லை!
பூமியில் என் இருப்பும்
கடல் அலைக்குள் என்பதில்
நான் மௌனமான நேரம்
உன் சிறகுகளின் துகள்களை
வலி கொண்டு கொத்தி
காற்றின் திசையில் நெளியும்
கவிதைகள் படைக்கிறாய்… நீ!

**** *** ***

மழைக் காலத்திற்கு முன்
சிலிர்த்த அதே பொழுதுகளை
பின் தொடுவதெங்கே?
பொன்கதிர் பழுத்த கணத்தை
உச்சிப் பொழுதுகளில்
காண்பதெப்படி?
அந்த மலை முகட்டின்
மலர்ச் செறிவுகளை
வியந்த பொழுதுகளும்
தினத்தின் இருளுக்குள்தான்!
கோலப் பின்னலைக் கண்டு
இளைப்பாறுவதை விட்டு
வார்த்தைகளால் என்னை
துழாவுகிறாய்!
கோணம் அனைத்திலும்
தாவவிடும் பார்வை
தளரும் நேரமேனும்
பின்கிடக்கும்
நிழலைப் பார்த்தாயா… நீ!

**** *** ***

உன் தூரிகை உயிர்ப்பிக்கும்
கோட்டுச் சித்திரங்கள்
வார்த்தைகளின் அமைதி கொண்டவை
வானம் காட்டும் நீளக் கோட்டில்
சூரியன் சந்திரனும்
வஸ்தின்றி வேறில்லை உனக்கு
அடர்ந்து படர்ந்த கறுப்பு
கவிழ்ந்த இரவின் நிதர்சனம்
தூரத்து வெள்ளிப் புள்ளிகள்
நட்சத்திரங்களாக
உடையும் மனக்கசிவு
மூடிய வான்தூறலாய்
சந்தோஷத் தெறிப்புகள்
மின்னல் கீற்றுகளென
நிமிர்ந்து காண நிற்கிறாய்!
உற்ற ஜீவன்களை
கோட்டுக்குள் அடக்காமல்
பிசிறாய் நழுவவும் விடுகிறாய்
சிம்மாசனம் அரண்
அரண்மனை வழிமக்கள்
தாதிகளெனப் பாராது
தூக்கிப் பிடித்த தூரிகையால்
உன் இருப்பை
மண்ணில் புழுவாய்
நெளியவிடுகிறாய்… நீ!

**** ***** *****

உன் கரங்கள் உருவாக்கும்
பின்னல் ஆடையல்ல
காலம்!
பக்கங்கள் கொண்ட
ருத்திர கவிதை அது!
கழுத்தை சுற்றிய
பிடிகளைத் தளர்த்தி
இளைப்பாற முடியுமெனில்
காலாற நடப்போம்
கால விழிப்பில் வண்ணப்
பூக்கள் கொண்டாடும்
குதூகலத்தினூடே
அருவிப் பெருக்கும்
நதிகளின் சலனமும்
என் மௌனத்தைப் பேச
உலா வரும் தென்றல்
தழுவ உறுதி கூறலாம்!
குழந்தையாய் தேம்பும்
உன் அடத்தை
தூரத்து குயிலோசை
சாந்தப்படுத்தலாம்
ஒரு புள்ளியில்
உறைந்தவற்றை எல்லாம்
மலரும் பருவத்தில்
மீட்டுருவாக்கலாம்!
வசந்தத்தைப் போற்றுவோம்
சுழுக்கேறிய கழுத்துடன்
தலையசைக்க முடியுமா…. நீ?

*** **** ***
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

author

தாஜ்

தாஜ்

Similar Posts