எம்.ரிஷான் ஷெரீப்
நகர்ந்து வந்த கணங்கள்
சில பொழுதுகளில் அழகானவைதான்
புன்னகை தருபவைதான்
பெரும்பெரும் வலிநிறை
கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும்
நகர்ந்து வந்த கணங்கள்
சில பொழுதுகளில் அழகானவைதான்
புன்னகை தருபவைதான்
ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்
மேய்ச்சல் நிலத்திலிருந்த
கணங்களனைத்தையும் உன்னிரு
உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி
கீழே சிதறட்டுமென விடுகிறாய்
எல்லாம் பள்ளமென ஓடி
நினைவுகளுக்குள் புதைகிறது
மனது மீண்டும்
வண்டு ஏற்படுத்திச் சென்ற துளைகளுக்குள் காற்று நுழைந்து மூங்கிலை இசைபாடச் செய்தபடி நகர்ந்த அக்கணத்தில் எனக்குத் தெரியவில்லை. உனது அண்ணாதான் நீ வீட்டிலிருப்பதாகவும், உன் கைபேசியைக் காரில் தவறி விட்டுப் போனதாகவும் வீட்டுக்குப் போன உடனே உன்னிடம் ஒப்படைப்பதாகவும் சொன்னார். அழைத்து அழைத்துச் சோர்ந்து போன எனது மனப்பாரங்களுடன் சேர்த்து, நீ தவறவிட்ட எனது அழைப்புக்களையும் நீ உன் கைபேசியில் கண்டிருக்கக் கூடும். எனக்குத் தெரியும். நீ வேண்டுமென்றே அப்படிச் செய்பவனல்ல. என் மேல் உனக்குக் கோபமும் வெறுப்பும் மிகைத்திருக்கக் கூடும். இருப்பினும் எவ்வாறாயினும் நீ எனது அழைப்புக்களைத் துண்டிப்பவனல்ல. நீ நல்லவன். எனக்குத் தெரிந்த நல்லவர்களில், அன்பானவர்களில் நீ முதலாமவன். என் மதிப்புக்குரியவன். என்றைக்குமே என் விருப்புக்குரியவன்.
‘அப்படியானால், அது உண்மையானால் ஏன் என்னை விட்டுப் போனாய்?’ என்ற கேள்வி உனக்குள் எழக்கூடும். அன்றுனை அழ வைத்து, தேட வைத்து, வாட வைத்துக் கை விட்டுப் போன பின்னர் எதற்குனைத் திரும்ப அழைத்தேனென நீ எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். எனக்குள் சுட்ட சில யதார்த்தங்கள், நியாயங்கள், உனது குடும்பத்தைச் சூளைக்குள் எரியும் தணலாய்ப் பொசுங்க வைத்த எமது வாழ்வின் கொடிய கைகள் எனச் சில விடயங்கள் என்னை உன்னை விட்டும் ஒதுங்க வேண்டிச் செய்தன. உன்னிடம் சொல்லியிருக்கலாம்தான். வாழ்வின் இறுதி வரை என்ன கஷ்டமெனினும் கூட வருவேனெனச் சொல்லி அன்பைப் பொழிந்த உன்னைக் கஷ்டத்துக்குள்ளாக்க விரும்பவில்லை. அவ்வேளை நீயாவது, நீ மட்டுமாவது எங்கேனும் நன்றாக மகிழ்வோடு வாழ வேண்டுமென்றே உள்ளம் விரும்பியது. விரும்புகிறது.
இரு தினங்களுக்கு முன்னால் பணி புரிந்துவரும் நாட்டை விட்டு அம்மாவின் சுகவீனமுன்னை அவசரமாக வெளியேறச் செய்து, தாய்நாட்டை ஏகச் செய்தது. அம்மாவின் நலம் குறித்து உன் நண்பர்களிடம் விசாரித்ததில் சாதகமான எந்தப் பதிலும் கிட்டவில்லை. உனக்கே அழைப்பினை எடுத்தாலென்ன என்ற கேள்வி அப்பொழுதுதான் என்னுள் முளைத்திற்று. விட்டுப் போன என்னை, எனது குரலை எதிர்கொள்ளும் சங்கடத்தை உனக்கு எப்படித் தருவது என்ற தயக்கத்திலேயே பாதி நேரம் ஓடிற்று. உணவோ, உறக்கமோ எதிலும் நாட்டமற்ற மனம், எதைப்பற்றியும் எண்ணத்தூண்டாத வெறுமையை, பொறுமையை ஏற்றிருந்த மனம், உன்னிடம் பேசச் சொல்லி அடம்பிடித்தபடி அலைந்தது.
கடந்த காலங்களில் உன்னை விட்டுப் பிரிந்த நான், உனது விசாரிப்புக்களின் போது ஆனந்தமாகவும், எந்தக் கவலைகளுமற்றும் வாழ்வதாகக் காட்டிக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் போலி நடிப்புத்தானே என்னை வெறுக்கச் செய்து, உன்னிலிருந்து முழுவதுமாக என்னை அகற்றி உன்னை இன்று மகிழ்வானவனாக வாழச் செய்துகொண்டிருக்கிறது. இப்பொழுது சலனமற்று ஓடும் உன் அழகிய வாழ்வில், எனது குரலெனும் கல்லெறிந்து அலைகளையெழுப்ப விருப்பமற்று, உனக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவது குறித்து மனம் அல்லாடிக்கொண்டே இருந்தது.
இறுதியில் பெருந்தயக்கம் ஒதுக்கி உனக்குத் தொலைபேசினேன். காருக்குள் ஒளிந்திருந்த கைபேசி ‘என்னைக் கொஞ்சம் மாற்றி..’ ராகத்தை யாருமற்ற வெளியில் அதிர்வுகளைக் கிளப்பியபடி உன் பக்க அழைப்பின் குரலாக ஒலித்து ஒலித்து ஓய்ந்தது. பல மணித்தியால அழைப்பின் பிறகு, அண்ணன் கண்டெடுத்து, ஒரு தேவ கணத்தில் உனது குரல் எதிர்முனையில் தோன்றி என்னைச் சாந்தப்படுத்தியது.
முதலில் எனது குரல் உன்னில் அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை. என்னை நீ எதிர்பார்த்திருந்திருக்கவும் மாட்டாய். பெயரைச் சொன்ன பின்னால் உனது இதழ்கள் உதிர்த்த முதல் சொற்களில் கோபமும், வியப்பும் ஒரு சேர வழிந்ததை ஒரு கணம்தான் உணர்ந்தேன். பிறகு அம்மாவின் உடல்நலம் குறித்த ஆறுதலான வார்த்தைகளைத் தந்திட்டாய். உனது வேலைகள், கடமைகள் குறித்த விடயங்களைப் பகிர்ந்தாய். நல்லவேளை இறுதிவரை நீ என் நலம் விசாரிக்கவில்லை. வினவியிருந்தால் பல மாதங்களுக்குப் பிறகான நமது உரையாடலில், அந்தத் தொலைபேசி அழைப்பில் நலமெனச் சொல்லி என் குரல் ஒரு பொய்யை உரைத்திருக்கக் கூடும்.
அன்பானவனே, நானுன்னைப் பிரிந்த நாளின் காலைவேளை நினைவிருக்கிறதா உனக்கு ? நமக்குப் பிடித்த மழை, துளித்துளியாக முற்றவெளியெங்கும் இறங்கி தேகங்களைக் குளிரச் செய்திருந்தது. அந்தக் குளிர் உனக்குப் பிடித்தமானது. எவ்வளவு குளிரானாலும், அதிகாலையில் பச்சைத் தண்ணீரில் குளிப்பவன் நீ. இழுத்துப் போர்த்தி உறங்குமெனை உன் தலை சிலுப்பித் தெளிக்கும் நீர்ச் சொட்டுக்களாலேயே எழுப்புவாய். அன்றும் அப்படித்தான். எனினும் அன்றைக்கொரு மாற்றம். வார இறுதி விடுமுறைக்காக வந்திருந்த உனது நண்பர்களின் குழந்தைகள் நமது அறையில் பூக்களைப் போல உறங்கிக் கொண்டிருந்தனர். நாமிருவரும் ஓசையெழுப்பாத பூனைக் குட்டிகளாகி மேல் மாடியிலிருந்து கீழே வந்தோம்.
அன்று நாங்கள் மட்டும்தான் தாமதித்து எழுந்திருந்திருக்கிறோம். உனது நண்பர்கள், விருந்தினர்கள் ஆண்களும், பெண்களுமாகக் கூடத்தில் கலகலத்தபடி பேசிக் கொண்டிருந்தது பெரும் மகிழ்வினைத் தந்தது. ஏலக்காய் மணக்கும் உனது தேனீரின் சுவையை அறிந்த அவர்களில் சிலர் அக்குளிர் வேளையில் சுடச் சுடத் தேனீர் உன்னைக் கேட்டதற்கிணங்கி நீ சமையலறைக்குப் போக வேண்டியதாயிற்று. அவர்களின் மகிழ்வை, வாழ்வினை ஆனந்தமாகக் களிக்கும் விதத்தினை அவர்களது பேச்சில், சிரிப்பில் அன்று நான் அருகிலிருந்து கண்டேன். நீ அவர்களில் ஒருவன். அவர்களது வயதினை ஒத்தவன். நீயும் அப்படியே ஆனந்தமாக வாழவேண்டியவன். நானுன்னை அவர்களை விட்டும் தனியாகப் பிரித்துவிட்டேனோ என்ற எண்ணம் என்னில் கிளர்ந்து இதயம் முழுதும் பரவியது. ஒரு குற்ற உணர்வை என்னில் விதைத்தது.
என்னால் உனக்கு விரும்பியபடி பயணங்களில்லை. பணி புரியும் இடத்திலும் என்னைப் பற்றியே சிந்தனை. உனது எழுத்துக்களில், நேசத்தில், எல்லாவற்றிலுமே நான். நான். நான் மட்டுமே தான். திருமணம் கூடத் தேவையின்றி வாழ்நாள் முழுதும் என்னுடனேயே இருக்க வேண்டுமென்ற சிந்தனை கூட உன்னில் ஒளிந்திருந்தது. வீட்டிற்கு இளையவன் நீ. சகல வசதிகளும் வாய்ந்த செல்லப்பிள்ளை நீ. உன் சந்ததியைக் காண பெருவிருப்போடு இருக்கும் உனது முழுக் குடும்பத்தையும் எனக்காகப் பகைத்துக் கொள்பவனாக உன்னைக் காண எனக்குச் சக்தி இருக்கவில்லை. அன்றுதான் நீயறியாது நான் வெளியேறினேன்.
நீ எனக்காக அன்பினால் பார்த்துப் பார்த்துச் செய்த, நமது பிரியத்திற்குரிய அழகிய பெருவீட்டின் வாயிலைக் கடந்தேன். . கொட்டும் மழையில் என் கண்ணீரைத் தனியாகக் கண்டறிந்துகொள்ள யாருமிருக்கவில்லை. என் விழிகளிலிருந்து வழிந்த அனல், வெளியே படிந்திருந்த குளிரினை உருக்கியகற்றி எனக்கு வழி சமைத்துக் கொடுத்தது. உன் அன்பினை மட்டுமே வழித்துணையாய்க் கொண்டு என் எதிர்காலப் பாதையறியாப் பயணத்தைத் தொடர்ந்தேன்.
எல்லோரும் போய்விட்ட பின்பு அல்லது வீட்டில் உனது பணிகள் ஓய்ந்த பின்பு நீ என்னைத் தேடியிருப்பாய். எனது சுவாசம் நிறைத்த உனது அறையினில், வெளித் திண்ணை ஊஞ்சலில், மொட்டை மாடியில், நீச்சல் குளத்தில் ஏன் மழை பெய்திட்ட போதும் பன்னீர்ப் பூக்களைச் சிதறவிடும் அந்த அழகிய மரத்தைச் சுற்றியும் கூடத் தேடியிருப்பாய். நான் உன்னிடத்தில் என்னை விட்டு வெளியேறியிருந்தேன் என்பதை உணர முடியாமல் தவித்தபடி இருந்திருப்பாய். ஒரு காகிதத்தில் சிறுகுறிப்பையேனும் கிறுக்கி வைக்காமல், எனது எல்லைகளைக் கூட நீ எட்டாவண்ணம் நான் தொலைந்துபோனேன் அன்று. என்னைக் குறித்தான வெறுப்பு உன் மனதில் முளைக்கும்வரை அழுதபடி இருந்திருப்பாய்.
அழகனே, நீ எந்தக் குறைகளுமற்றவன். உன் இளவயதிற்கேற்ற நல்வாழ்க்கை, இல்வாழ்க்கை வாழவேண்டியவன். விபத்தொன்றில் சிக்கி, அநாதையாகத் தனித்துக் கிடந்தவனை உன் வீட்டுக்கு அழைத்து வந்து அன்பூட்டிக் குணப்படுத்தி, அரவணைத்துப் பார்த்துக் கொண்டதே போதும். இப்படிப்பட்ட ஊனமுற்றவனை நண்பனாகக் கொண்டு, இறுதி வரை எனக்காகவே அத்தனை தியாகங்களையும் செய்தபடி, என்னுடனேயே வாழ உனக்கென்ன விதி நண்பா ? என் போன்றோருக்கென பல விடுதிகள் உள்ளன. என் துயரங்கள் என்னுடனே மடியட்டும். உனது மகிழ்வான வாழ்வுக்கான அழகிய பிரார்த்தனைகளையும், முழு மனதுடனான என் தூய அன்பையும் உனக்கென மட்டுமே நான் என்றும் பேணிக் காப்பேன். அது போலவே என் வாழ்நாள் முழுவதற்குமாக நான் உன்னில் கண்ட அன்பு ஒன்றே என்னை எஞ்சிய நாட்களை மகிழ்வோடு வாழவைக்கும். நம்பு. இனி வாழ்வில் என்றும் நல்லதே நடக்கும். உனக்கும். எனக்கும்.
– எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
- நாடற்றவன் பேசிக்கொண்டிருக்கிறான்
- நான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா ? (கட்டுரை 54 பாகம் -1)
- “தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”
- எளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”
- இழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”
- திரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது
- ” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்
- இணையப்பயிலரங்கு
- அறிவோர் கூடல் நிகழ்வு
- அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா
- கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்
- தீர்ப்பு எழுதும் கலம்கள்
- நெருடல்கள்
- வேத வனம் விருட்சம் 25
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3
- ”கண்ணி நுண் சிறுத்தாம்பு”
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா
- இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்
- தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )
- கவலைகிடமான மொழிகளின் நிலை
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)
- சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- விடுபட்டவை
- முகமூடி
- நானும் முட்டாள் தான்
- சொல்லி முடியாதது
- தமிழ்!
- வேண்டும் சரித்திரம்