திருமணம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

கவிதா நோர்வே


திருமணம்

இரு கோல்கள் சங்கமிக்கும்

வழிமண்டலம்

இரு துருவங்கள் இணையும்

மையப்புள்ளி

வேற்றுகிரகத்து மனிதர்களாய்

முதல் சந்திப்பின்

ஆய்வுகள் இனிப்பதில்

அவசர இணைப்பு நடைபெறுகிறது

தன் உடமை காத்தல்

வாரிசு உறுதிப்படுத்தல்

கற்பென்ற பேரில் காப்புரிமை

ஆணுக்கும்

கலாச்சாரம் பேணல்

பண்பாடு ஊட்டல்

எனக்குமட்டும் என்ற நம்பிக்கை

பெண்ணுக்கும்

சொத்துக்கள் பெருக்கவும்

வாரிசு வளர்க்கவும்

நியமிக்கப்படும்

இரு அதிகாரிகளின்

குடும்ப ஸ்;தாபனம்

எப்பொழுதுமே

மேலதிகாரியாய் அமர்த்தப்படுகிறான்

அவன்

மரபுகளை முறித்துக்கொண்டு

துளிர்த்த காதலையே

சருகாக்கும் திருமணஸ்தாபனத்தில்

காதலைச் சொல்லுமா கல்யாணம்?

கல்யாண மேடையில்

எப்போதுமே ராஜா வேஷம்

அவனுக்கு

காதலும் வேஷம் போடுமிடத்து

இருவருமே கைதேர்ந்த நடிகர்கள்

ஒருவனுக்கு ஒருத்தியென்றது

கட்டாயப்படுத்தலாய் அமுழுக்கு வருகிறது

இரகசியத்தில் திருத்தியெழுதப்படுகிறது

பழைய தீர்ப்புகள்

இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை

என்ற பொழுது

திருமணம் ஒரு நல்ல வழிதான்

இல்லையென்றால்

காதலுடன் வாழ

கல்யாணமெதற்காம்?

இருந்தும்

நிறுவப்படுகின்றன

புதிய புதிய நிறுவனங்கள்

பெரிசுகளின் வழிநடத்தலில்

பின்னே செல்ல

அத்தனையும் ஆட்டுமந்தைகள்


Series Navigation

author

கவிதா நோர்வே

கவிதா நோர்வே

Similar Posts