தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தீபச்செல்வன்




பறவை மிருகமாகியது

எனது தனிமையில்
துயருமும் இருந்தது
நிம்மதியும் இருந்தது
நான் எப்படி
சொல்லிவிட
கூட்டத்திற்கும்
தனிமைக்கும்
உங்களுக்கும்
எனக்கும் இடையில்
உறவு தேவையென்பதை
எனது நண்பனும்
நானும்
மிருகமாகி
தனித்திருக்கிறோம்
நகங்களை
கூர்மையாக்கியபபடி
பறவையின் கனவிலிருக்க
மிருகங்களாகியதை
நானும் அவனும்
யாருக்கும் சொல்லவில்லை
செட்டையை கழற்றி விட்டு
நழுவி நகர்கிற
மிருகமாகி
நானும் அவனும்
பிரிந்து போகிறோம்
நானும் அவனும்
ஒரு கூட்டமாகியிருந்ததை
யார் கவனித்தார்கள்
இந்த மிருகமுகங்களை
அணிந்ததையும் கூட
யார் கவனித்தார்கள்…..



பாம்பு நெளியும் அறை

சைக்கிளில் பாம்புகள்
நெளிந்து வழிகிறது
இன்னும் கயிறு
பாம்பாகவே தெரிகிறது
இருட்டை நிறைத்திருந்த
பாம்புகள்
பகலிலும் நெளிகிறது
சொற்களிலும்
புன்னகையிளலும்
நீ பாம்பை நெளிய விடுகிறாய்
பாம்புகளாய் காண்கிறாய்
கழுத்தில் பாம்பு
அசைய
கயிற்றில் விஷம் வடிகிறது
மரங்களையும்
வீதிகளையும்
நீ பாம்புகள் என்கிறாய்
புல்வெளிகளை
பாம்புமேடு என்கிறாய்
மேசையில் வந்துகிடந்த
பாம்பு மெல்ல
அசைந்து அசைந்து
அறையை விட்டு
வெளியேறுவதுபோல
நீ அறையை விட்டுபோகிறாய்
குட்டிப்பாம்புகளைப்போல
உனது சொற்களும்
உனது கோபங்களும்
கொட்டிக்கொண்டிருக்கிறது
பாம்புக்கயிற்றால்
நீ கட்டி வைத்திருந்த
பிடியும் முடிச்சும்
அறுந்துவிட
நான் வெளியில் விழுகிறேன்


மேசைக்கு கீழே புகைந்த சிகரட்

மின்சாரம் நிரபப்பட்ட
மீன் தொட்டியில்
துடிக்கிற
மீன்களைப்போல
உனக்கும் எனக்கும் இடையில்
மேசைவிளக்கு துடிக்கிறது
உடைந்த கதிரையை
கோதுமை மாப்பசையினால்
ஒட்டிவிட்டு
என்னை இருக்கவைத்து
பேசிக்கொண்டிருக்க
உனது குரூர வார்தைகளுடன்
கதிரையும் நானும்
உடைந்து விழுகிறோம்
கடல் கரையில்
நீயும் நானும்
குடித்தவிட்டுப் போட்ட
பியர் போத்தல்கள்
பிசுங்கானாகி
காலை கிழித்து விட்டிருக்கிறது
நீயும் நானுமிருந்து
பேசியகடல் மணல் கரையில்
குருதி கொட்டியிருக்கிறது
உனது சொற்களும்
பிசுங்கானைப்போல
என்னை
கிழித்தப் போட்டிருக்கிறது
முகம் பார்த்த கண்ணாடி
கைதவறி விழுந்து
உடைவதைப்போல
உனது சைக்கிளில் இருந்து
நான் விலகி விழுகிறேன்
நீ ஒளித்து வைத்து
புகைத்த
சிகரட்டின்
சாம்பல் தணலாகி காலை
சுடுகிறது
மேசைக்கு கீழிருந்து
சிகரட்டை
புகைக்கிறாய்
இனி
உனக்கும் எனக்கும்
இடையில்
கயிறுகளும் இல்லை
பாலமும் இல்லை
படிகளும் இல்லை
துரோகம் மட்டும்
சுற்றி வளைத்திருக்கிறது.


deebachelvan@gmail.com

Series Navigation

author

தீபச்செல்வன்

தீபச்செல்வன்

Similar Posts