கருணாகரன் கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

கருணாகரன்


தெற்குத் தெரு

நாங்களிருந்த தெற்குத் தெருவை

ஆடுகளின் தெரு என்றார்கள்.

ஆட்டின் குரல்களும்

மொச்சையும் மீந்திருக்கும் தெருவில்

எப்போதும் ஆடு வாங்கிப்போகும்

கரீம் காக்கா ஆட்டு வாசத்தோடு திரிந்தார்.

ஆட்டிடையனுக்கும் கரீம் காக்காவுக்கும்

தீராப்பிணக்குகள் ஏராளம் ஏராளம்.

என்றபோதும்

இருவருடைய பொழுதுகள்

ஆடுகளில்தான் விடிந்தன

ஒருவனிடம் கத்தியிருந்தது

ஒருவனிடம் தீனிருந்தது.

ஆட்டிடையனின் மடியிலும் மனசிலும்

துள்ளிவிளையாடும் ஆட்டுக் குட்டிகள்.

தோளில் தூக்கிப் போட்ட குட்டியோடு

வீதியில் வரும் புத்தனை

அழைத்துப் போகும் ஆடுகள்

காலையிலும் மாலையிலும்.

ஆட்;டிடையனின் மீதிருந்த ஆட்டு மொச்சை

கரீம் காக்காவிடமும் படிந்திருந்தது

ஆட்டின் நிறங்களோடும்

சாயல்கள் மற்றும் குரல்களோடும்.

அவருடைய கத்தியிலும் இருந்தது

காயாத குருதிக்கறையும்

ஆடுகளின் இறுதிக்கண தீனக்குரலும்.

ஆடுகளின் தெருவில்

எப்போதுமிருந்தன மாமிசத்த்pன் கசாப்பு நெடி

கூடவே நிழல் விரித்திருந்தது

ஆடுகள் உண்ணும் குழையின் வீச்சமும்

பால் மணமும் குட்டிகளின் துள்ளும் குரலிசையும்.

நாங்கள் ஆடுகளின் தெருவில் இருந்ததாகவே

எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்

இத்தனை கொலை நடந்த தெருவில்

ஒரு நாளேனும்

யாரையும் தேடி காவலர் வந்ததில்லை

விலங்கோடு

ஆடுகளின் தெருவில்

எதுதான் நடக்கும் எதுதான் மிஞ்சும் என்று தெரியவில்லை.


00

வடக்குப்படை வீடு

வடக்கில் படை வீடுகளிருந்தன

குருதி வடியும் கண்கள் தெறித்துப்புரண்ட

படை வீட்டில்

இருண்ட காலத்தின்

பயங்கரங்கர நிழல்கள் மினுங்கும்

பாழ் கிணறிருந்தது.

பாழ் கிணற்றில் மிதக்கும்

இளம் பெண்களின் விம்மலொலியில்

எப்போதும் படைவீடு

போதை கொண்டது.

கடத்தப்பட்டவரின் தனிமைக்குரல் படிந்த

அந்த வீட்டின் சுவர்;களில்

கூரொளிரும் வெண்குருதி வடிந்து கொண்டிருக்கிறது

காயாமலே.

அதில் ஒவ்வொரு வதையிலும்

உயிரணுவின் கண்ணிகள் பிளவுண்டு

ஓலமிட்ட மனிதனின் நிழலும்

அதை விரும்பிப் போதை கொண்டவனின் முகமும்

தெரிகிறது ஓவியத் தொகுதிகள் பலவாக.

வதையின் முன்னே மண்டியிட்டவரின்

ஒவ்வொரு காட்சியையும்

ரசித்துக் கொண்டிருக்கும்

படை அதிகாரியிடம்

தன்னுடைய விருப்பங்களைச் சொல்லத்தயங்குகிறான்

எப்போதும் அதிகாரியின் நிழலைத்

தொழுது கொண்டிருந்த சிப்பாய்.

சிப்பாயின் காதல்

அவனுடைய இதயத்திலும்

அதிகாரியின் காலடியிலும் நசுங்கிக் கொண்டிருக்கிறது

துயரம் மிகக் கொண்ட

ஒரு விசுவாசியின் விசுவாசத்தை

எப்படி எஜமானனிடம் தெரிவிப்பது என்பதை

எத்தனையோ தடவை ஒத்திகை பார்த்தபிறகும்

சறுக்கியே செல்கிறது

அவனுடைய விருப்பங்களைச் சுமந்திருக்கும் குதிரை

தானியக்கதிர்களில்

தன் சப்பாத்துகளையும் காதலியின் கடிதங்களையும்

மறைத்து வைக்க விரும்பும்

படைச்சிப்பாய்

பூங்காட்டில் தனக்கான பெண்பறவையை தேடிக் கொண்டிருக்கிறான்

ஆற்றில் இறங்குவதற்கு முன்னர்

வடக்குப்படை வீட்டில் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும்

இளம் பெண்களின் முனகலொலியில்

நடுங்குகின்றன இலைகள் ஒவ்வொன்றும்

சிப்பாயின் காதில் விழுகிறது

அவனுடைய காதலியின் குரலும்

அவள் சிந்தும் அன்பின் துளிகளும்.

வடக்குப் படை வீட்டில்

மறுநாள் சிப்பாய்களின் கலங்கிய விழிகளினூடே

காலைச் சூரியன் தயங்கிவந்தபோது

அதிகாரியின் மரணத்தை கொலை என்று

அறிக்கையிட்டுக் கொண்டிருந்தார்கள்

விசாரணை அதிகாரிகள்.


மாமிசம்

ஆதியிலே மாமிசம் இருந்தது

அதன்பிறகும் மாமிசம் இருந்தது

கனிகளினுள்ளே காயங்களோடு

காயத்தின் மீது கனிச் சுவைததும்ப

மலரின் மென்னிதழ் விளிம்பெலாம்

கலந்து பரவியது

மாமிச வாடையும் கனிமலர் கலந்த வாசனையும்.

இப்போதும் மாமிசத்தை

வாங்கிப்போகும் பெண்ணிடம்

எதைக் கேட்பது

இந்தப் பசிக்கு.

அவளுடலின் இரத்தவாடையை

அவளுடலின் பால் வீச்சத்தை

மறைத்துக் கொண்டு அவள் போகிறாள்

காற்றையும் அள்ளிக் கொண்டு போகும்

மாபெரும் சமுத்திர அலைகள் தானென்று.

பெண்ணுடலில் விளைந்த

மலைகளையும் ஆறுகள் நிலப்படுகைகளையும்

வெளிகள் சமுத்திரங்களையும் கடந்து

மலர்களையும்

பசுமை நிரம்பிய இலைகளையும்

சுவையூறிய கனிகளையும்

அள்ளிக் கொண்டேன்

அவளுடலில் திளைத்துக் கொண்டிருந்த

மாமிச வாடை மெல்லக் கிpளர்த்தியது

என்னையொரு மிருகமாக.

நான் தோற்றேன்

அத்தனை கால பிரார்த்தனையிலும்.

அவளுள்ளிருந்த கள்ளின் ஊற்றை

பெருக்கிவிட்ட பின் பாய்ந்தது காம அருவி

என்னுடலை இப்போது மாமிசமாக்கி உண்டாள்

அப்பெண் தன்பசி யெல்லாம் தீர.

காலமுழுதும் அடக்கிய அவள் பசிக்கு

என்னைத்தின்னக் கொடுத்தேன்

முடிவற்று

என்பசியும் அடங்கவில்லை முடிந்து

2

ஆதியிலே மாமிசம் இருந்தது

அதன் பிறகும் மாமிசம் இருந்தது

என்றான் ஒரு நண்பன் பெண்ணுடலில்

தன்னை இறக்கிக் கொண்டே

அவன் அறிய அறிய

அவளின் ஆழம் பெருகியது

மாபெரும் சமுத்திரமாகி

எண்ணத்தீரா அலைகளாகியும்.

அவளும் அறிந்ததில்லை

அவனும் ஒரு மாபெரும் சமுத்திரம் தானென்று.

ஆதியிலே மாமிசமிருந்தது

அதன் பிறகும் மாமிசம் இருந்தது

இப்போதும் மாமிசம் இருக்கிறது

00

அவர்கள் போன பிறகு

அவள் கேட்டாள்

இவர்கள்தானா அவர்கள் என்று

அவர்கள்தான் இவர்கள் என்றேன்

இவர்களைப்போல அவர்கள்

என்றும் சொன்னேன்

இவர்;களுக்கும் அவர்களுக்குமிடையில்

என்னதான் இருக்கிறது

என்று மீண்டும் அவள் கேட்டாள்

அதுதான் எனக்கும் புரியவில்லை

வந்தவர்களும் வராதவர்களும்

இவர்களும் அவர்களும்தான்

என்று நான் தெரிவதெப்படி

அவள் விளங்குவதெப்படி

இதையெல்லாம் நகுலன் எப்படிச் சொல்வார்


தூக்கத்தை தொலைத்த கிழவன்

பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்

கனவு அழைத்துப் போகும்

இளமைக்காலத்துக்கும்

பிள்ளைகள் கொண்டு சென்ற

தூக்கத்துக்குமிடையில் கிடந்து அவிகிறான்

இருளைக் குவித்து வைத்திருக்கும்

அந்த வீட்டில்

பிள்ளைகளின் குரல்கள்

சத்தத்தை அடக்கி

சுவர்களில் படிந்திருப்பதாக நம்பும் கிழவன்

அந்தக்குரல்கள் அதிகாலையில் ஒலிக்காதா

என்று விழித்திருக்கிறான்.

ஒரு முனையில்

கிழவன் முன்னிரவில் பேசும்போது

அதே கணம்

மறு முனையில்

பிள்ளை பதிலளிக்கிறான் அதிகாலையில்.

இந்தக் கால முரணுக்கிடையில்

தன்னைக் கொடுத்திருக்கிறது

அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி

கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான

கருணையில்.

அதிகாலையில் நிராதரவின் தத்தளிப்பு நிரம்பிய

கிழவனின் குரலை

கருணையுள்ள தொலைபேசி

எடுத்துச் செல்ல முயன்றபோதும்

முடியவில்லை

பிள்ளையின் இரவு கதவைச் சாத்தியிருந்தது

ஆழ்ந்த உறக்கத்தில்.

அப்போது அங்கே நள்ளிரவு

வழியற்ற கிழவன்

தன்னுடைய சூரியனை பின்னிரவிலிருந்து

பெயர்த்தெடுத்து அனுப்புகிறான்

பிள்ளையின் குரலை அது எழுப்பட்டுமென்று.

வௌ;வேறு கண்டங்களுக்கிடையில்

வெட்டித் துண்டாடப்பட்ட

அன்பின் உடல் கிடந்து துடிக்கிறது

தந்தையென்றும் பிள்ளையென்றும்

அங்கும் இங்குமாக

உலகம் சுருங்கியதென்று சொன்னவர் வாயில்

கொப்பளிக்கும் கண்ணீரை

எந்தப் போத்தலில் அடைப்பேன்.


பெண்நிழல்

தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை

விதையாக்கிய பெண்

அதை மீண்டும் பயிராக்கினாள்

தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்

ஆதியிலிருந்து தொடர்ந்து வரும் வேரை

அதன் வாசனையோடு

தன்னுள் கொண்டிருக்கும் அவளிடம்

தலைமுறைகளிடம் தன்னைப் பரிமாற்றிக் கொள்ளும்

வித்தை நிறைய இருந்தது.

அவளே வேராகவும் விதையாவும்

தன்னுடலில் இருந்து விளைந்து கொண்டிருந்தாள்

ஓயாது

அவளில் கிளர்ந்த தானிய வாசனை

தாயின் முகத்தை வரைந்தது

மலர்களின் நிறத்தை அள்ளி

அந்த முகத்தில் பயிரிட்டது

கடலின் மீது அதை ஒரு படகாக்கி

மிதக்கவிட்டது

எல்லா ஒளிக்கதிர்களிலும்

தன்னைப் பரப்பும் வல்லமையுடைய

வாசனை நிரம்பிய அந்தவேர்

இளமை குன்றா நதியில் கரைந்து

இடையறாது பாய்ந்து கொண்டிருக்கிறது

மணம் பரப்பி

தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை

விதையாக்கும் பெண்

அதை மீண்டும் பயிராக்குகிறாள்

தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்

காதல் மிகக் கொண்டு

தாயாகி

இடையறாது விளைகின்றன

வேர்களும் விதைகளும்

அவள் உடலில்.

Series Navigation

author

கருணாகரன்

கருணாகரன்

Similar Posts