தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

தீபச்செல்வன்


நீ பேசாது போன பின்னேரம்

நீ பேசாது போன பின்னேரம்
எனது சொற்கள் செத்துக் கிடந்தன
தூரத்தில் போனபிறகாவது
திரும்பிப்பார்ப்பாய்
என பார்ர்த்துக்கொண்டிருந்தேன்
உனது உருவம்
புள்ளியாய் சிறுத்து
கரைந்துவிட
எனக்குள்
நீ நிரம்பியயிருந்தாய்
என்னதான் பேசுவாய்
நான்தான்
என்ன கேட்கப்போகிறேன்
நெருங்கிவரும் பொழுது
தவிக்கிற நமது இருதயங்கள்
எப்பொழுது வெளித்தெரியும்
நீயும் நானும்
சொல்ல முடியாத உணர்வால்
துடிக்கிறதை
நிலவு பார்க்கிறது
பிரிந்ததுமில்லை
சேர்ந்ததுமில்லை
யாருக்கம் தெரியாது
நாமும் அறியாமலிருந்தோம்
ஒரு நாள் பின்னேரம்
உனது வீட்டில்
நாம் அருந்திய
தேனீர்க் கோப்பைகளினுள்
இணைந்து கிடந்தன
நமது இருதயங்கள்.


ஆள்களற்ற தொலைபேசி

ஆள்களற்ற தொலைபேசி
நமது மொழியில் ஏதோ
பேசுகின்றன
நீயும் நானும் பேசுவது
கம்பிகளின் வழியாய்
பாடலாக வழிகிறது
நேற்று நீ பேசிவிட்டுப்போக
நாள் முழுக்க
கொட்டிக்கொண்டிருந்தது
உனது சொற்கள்
உனது கண்களும்கூட
கம்பிகளின் ஊடே
பேசிக்கொண்டிருந்தது
தொலைபேசியின் ஊடாக
நமது குரல்கள்
இணைந்துகிடக்கிற
காற்றின் வெளியில்
நீயும் நானும்
எங்கிருக்கிறோம்
எனது கண்கள் கரைந்து விட
உனது முகம்
நிரம்பிவிடுகிறது
நமது இருதயங்களை சிலுவையில்
அறைகிறது
நீ இல்லாத நிமிடத்தின் ஒரு துளி
நேற்று
நமது உரையாடலை
அறுத்த வேகமான காற்று
இன்று
என் தனிமைமீது
உன் சொற்களால்
பேசிக்கொண்டிருக்கிறது
காற்றில்
கலந்திருந்தன நமது சொற்கள்
நாம்
இன்னும் பேசியபடியிருப்போம்
காற்று நமதருகில் வீசுகிறது
நீ பேசாத
தொலைபேசி
கையிலிருந்து தவறி வீழ்கிறது.



தாடிமுகம்

ஏன் தாடி வளர்த்திருக்கிறாய்
என்று கேட்கிறாள்
எனது தோழி
எப்போதாவது
தாடி வழித்த என் முகத்தை
கண்டிருக்கிறாயா
என்று கேட்டேன்
இல்லை என்கிறாள்
தானாய் வளர்கிற
எனது தாடியை
குழந்தைகளின்
முடியைப்போல
நான்
வருடிக்கொண்டிருந்தேன்
தாடிக்குள் நானும்
எனது முகமும் மறைந்திருக்கிறோமா?
அது ஒரு சோலையாக
நான் அதற்குள் உலவித்திரிகிறேனா?
நான் முகம்
மழித்தபோதும்
தாடி
முகத்தில்
ஒட்டியிருக்கிறது
முகம் மழித்தபடி
வகுப்பறையில் இருந்தேன்
அவள் தாடி பற்றி
பேசாமலிருந்தாள்
நான்கு நாட்கள் போக
ஏன் தாடி வழிக்க வில்லை
என்றாள்
நான்கு நாட்களுக்கு முன்பு
எனது தாடியை கண்டாயா
என்று கேட்டேன்
அப்பொழுதும்
நீ தாடி வளர்த்திருந்தாய்
என்றாள்
நான் தாடியாகியிருந்தேன்..


நிலவு தேடிய குழந்தை

deebachelvan@gmail.com

Series Navigation

author

தீபச்செல்வன்

தீபச்செல்வன்

Similar Posts