கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

பஹீமாஜஹான்


தோட்டம்:
அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில்
மந்தைகள் மேயவரும் காலங்களில்
கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும்
ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும்
“தண்ணீர் தேடிப் பாம்பலையும்
காட்டில் திரியாதே”
அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்;விட்டு
ஓட்டமெடுப்பேன் தோட்டம் பார்த்து
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத்தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்

ஆறு:
ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்க தரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்
நானும் தொடர்வேன்
தோட்டத்து ஒற்றையடிப்பதையின் சருகுகளைச்
சிறு மண்வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே

புதையல்:
அத்திமரத்தின் கீழே
கருநிறப் பாசி படர்ந்து
நீர்ப்புச்சிகள் சருக்கள் நிகழ்த்தும்
நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில்
வெண்ணிற மணலோடு
சலசலத்து ஊறும் குளிர் நீர்
ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும்
கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள்
அத்தியின் கிளைகள் ஆடும்
தௌ;ளிய நீர்ச்சுனையை
உருவாக்கிய பெருமிதத்துடன்
மாலை இருளை ஆற்றில் விட்டுக்
கரையேறி வீடடைவோம் சிறுமியும் பாட்டியும்

நாசகாரன்:
பின்னாளில்
எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர்
இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின்
மூங்கில் மரங்களின் மறைவில் நின்று
வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் அம்மை
பின்னும்
கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து
படு குழி தோண்டி வைத்துப் போயிருப்பான்
அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத
அற்பப் பயலொருவன்
தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி
அழுக்கு நீர் சுற்றிச் சுழழுமங்கே
நாசமறுத்த பயலவனை முனிந்த படி
மீளவும் புணரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை


பஹீமாஜஹான்
2007.09.16


jahan.faheema@gmail.com

Series Navigation

author

பஹீமாஜஹான்

பஹீமாஜஹான்

Similar Posts