கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

பைசால்


இடைவெளி

அதிகமான நாட்கள்
நாங்கள் பேசியிருக்கமாட்டோம்

வீட்டில்
தொலைபேசிக் கட்டணம் அதிகம்
தொடர்ந்து துண்டிக்கப்பட்ட தொலைபேசியை
தூக்கி
அது அடைத்துவந்த அறைக்குள் வைத்துவிட்டோம்

“இடைவெளி நிரப்புக”
என்ற சொல்லை என்னாலும் மறக்க முடியாது
இதைத்தான் நீ கடைசியாகப் பேசிவிட்டுப்போனாய்

பஸ்ஸில் போகும்போது
அடையாள அட்டை தவறியதாகச் சொன்னாய்
நான் நினைக்கிறேன்
இலேசில் நீ வீடுபோய் சேர்ந்திருக்க முடியாது

என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்

நாம்
அருந்துவதற்காக வந்த தேநீர்
சுடுகிறதென்று சொல்லி
கதிரையில் இருந்தவாறு கீழே வைத்தோம்
கோப்பையில் தேங்காய் விழுந்து
தேநீரைக் குடிகுடியென குடித்துவிட்டு
எழுந்து நடந்து சென்றது
ஒரு மனிதன்போல்

என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்

அவன்தான் தேங்காய் மனிதன் என்றாய்
நான்
அவன்தான் தேங்காய் மடையன் என்றேன் சிரித்துக் கொண்டு
அதன் பிறகு பேசமுடியாமல் போனது
அதனால் நானின்னும்
தொலைபேசி இணைப்பைப் புதுப்பிக்கவில்லை.


நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகிறான்

பகலின் குருடு நள்ளிரவு
இரவின் தெளிவு நடுப்பகல்

நள்ளிரவில் சிறுவன்
கொக்குகளை உலர்த்துகிறான்

நீரின் கதவுகள் திறந்து
உள்ளே நுழைய விருப்பம் தெரிவித்தது கொக்கு
அங்கே ஒரு மீன் கவிதையெழுதியது

“எனக்கு இரண்டு உதடுகள்
என்னை நானே முத்தமிடுகிறேன்
எனக்கு இரண்டு கண்கள்
என்னை நானே பார்க்கிறேன்
எனக்கு இரண்டு கைகள்
என்னை நானே தடவிக்கொள்கிறேன்
எனக்கு இரண்டு கால்கள்
நானே நடந்து செல்கிறேன் ஊரெல்லாம்”

மீன்களின் முத்தங்களைக் கொல்லுவது,
அதன் விரல்களிலிருக்கும் கவிதைகளைக் கொல்லுவது
என் பசியல்ல
என்று பாடிக்கொண்டு பறந்தது கொக்கு

பசியோடிருந்த சிறுவன் அதிர்கிறான்

நேற்று உலர்த்திய கொக்குகளுக்கு
உயிர் வாங்கச் செல்கிறான்
வழியில் தன்னுயிரை யாரோ எடுப்பதுபோல உணர்கிறான்

உயிர்த்திருடர்கள் இங்கு அதிகம்
திருடர்களுக்கு
இத்தனை உயிர்களும் அதிகம்

குடித்து முடிக்கமாட்டார்கள்


நான் ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்

நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் மனைவியின் தலையில் நடுவதற்கு

பசளை உண்ணத் தெரியாது
நீர் அருந்தத் தெரியாது
பராமரிக்கத் தெரியாது என்று அவள் சொன்னாள்

நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் காதலியின் தலையில் நடுவதற்கு

இன்று
அது நீண்டு வளர்ந்து
நிலாக் காலங்களிலும்
குளிர் காலங்களிலும்
என் முகம் முழுவதையும் மூடிக்கொள்கிறது

பைசால், இலங்கை


athanaal@gmail.com

Series Navigation

author

பைசால், இலங்கை

பைசால், இலங்கை

Similar Posts