கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

கருணாகரன்


போக மறுத்த வெளிச்சம்

பகலில் வந்த வெளிச்சம் விளையாடியது

எங்கும் குழந்தைக் குதூகலத்தின்

மணிகள் மின்ன

அது கொண்டு வந்த பொம்மைகள்

பூமியெங்கும் சித்திரங்களாயின

பெய்யும் நிழலோடு

வந்த வெளிச்சம் தங்கியது ரகசியமாய்

இலைகளினடியிலும் மூலைகள் மறைவிடங்களிலும்

உன் அக்குளிலும்

இறுக மூடப்படாதிருந்த பாத்திரங்களிலும்

எங்கும் நிரம்பியிருந்த தது அலைகளோடும்

நிறங்களோடும்

பாத்திரங்களைத்திறந்த போது

முகத்தில் படர்ந்தது பகலின் வாசனை

உன் அக்குளை முகர்ந்தபோது

ஒளியின் வாசனை அழைத்துச் சென்றது

சூரியனிடமும் அது தன்னுள் நிரப்பிவைத்திருந்த

பாற்கடலிடமும்

போக மறுத்து விளையாடிக் கொண்டிருந்த

வெளிச்சத்தின் மென்குரலைக் கேட்டவேளை

என்னால் நம்ப முடியவில்லை

அதன் ஒளிக்கூருக்கும்

வெம்மைக்கும் இடையில்

இந்த மலர் எவ்விதம் மென்குரலானதென்று

இரவுக்கு அப்பால் விலகிச் செல்லும்

வெளிச்சத்தின் பயணப்பாதையில்

தூவிச் சென்ற துளிகளில்

மிஞ்சிய பகல்

பாடிக் கொண்டிருந்தது குழந்தையின் வேடிக்கை பொங்க

இரவை மெல்ல அவிழ்த்துக் கொண்டிருந்தது

ரகசியமாய் வெளிச்சக்குழந்தை

இன்னும் அதே வேடிக்கையாய்


உறக்கத்தில் வந்த மழை

உறக்கத்தில் வந்த மழை

தங்கியது இலைகளின் மீதும்

நிலத்தினடியிலும் மௌனமாக

தன் இரைச்சலையடக்கிக் கொண்டு

மெல்ல இறங்கியது சிறகுகளோடு

பூமியொரு பாத்திரம்

சிறகுள்ள மழையை

கருணையோடு ஏற்று

தன் மடியில் வைத்துப் பகிர்ந்தளித்தது

தாவரங்களுக்கும் கானுயிர்க்கும்

பிறவுக்கும்

குருதியொழுகும் மரங்கள்

பறக்கத்தொடங்கிய அதிகாலையில்

ஒரு மெல்லிய இருள் கசிந்து கொண்டிருந்தது

வானத்தின் அடிவயிற்றில்

அது நிலம் விட்ட மூச்சு

கொப்பளிக்கும் தனிமைக்குரல்களில்

ஊறிச் சுடரும் பானத்தை

நாங்கள் பருகினோம் மழையை வருடிக்கொண்டு

கைகளிலிருந்து கழன்ற விரல்கள்

மலர்கின்றன மழைத்துளிகளில்

ஒவ்வொரு மழைத்துளியும் ஒவ்வொரு மலர்

வானம் மலர்கள் மிதக்கும்

வாசனை மண்டபமாயிற்று

பனங்கூடலின் மீது தன்னிசையை மீட்டிய மழை

கடலின் வாசனையை

பரப்பியது பனைகளிடம்

பனைகள் ஆடிக்களிக்க அம் மலர்த்துளிகளில்.

சொற்களின் புதைகுழி

நொதித்துத் ததும்பிக் கொண்டிருந்த

நிலத்தில்

வடிந்து கொண்டிருந்த ஊனத்தைப்

பின்தொடர்ந்த குழந்தையொன்று

கண்டது சொற்களின் புதைகுழியை

இரத்தக்கறையும்

துருவும் படிந்திருந்த சொற்களில்

ஒட்டிக்கிடந்த காலத்தின் துகள்களில்

மின்னின கண்ணீர்த்துளிகள்

மெல்ல அந்தக் கண்ணீர்த்துளிகளை

தொட்ட குழந்தை அதிர்ந்தது

உடைந்தொழுகிய அவற்றின் குரலைக் கேட்டு.

நாறும் அந்தச் சொற்களின் துருவை விலக்கிய குழந்தையின் விரல்கள் காயம் பட்டன

காலத்தின் துருவேறிய அந்தச் சொற்களில் இன்னும்

வன்மம் நிறைந்திருந்தது உக்காமலே

எனினும் மெல்ல

அந்தச் சொல்லை எடுத்து அதன் அடையாளத்தைக்

கண்டபோது

அதிகாரம் என்று அது துப்பாக்கி வடிவிலும்

கத்தியின் உருவிலும்

வதையின் ஈனக்குரலோடும்

சிறைக்கூட விலங்குகளின் கனத்தோடும்

இருந்தது.

இன்னொரு சொல்லை எடுத்த குழந்தையின் உடல் நடுங்கியது

அதனுள்ளிருந்த மின்னலைகள் தாக்கி

போர் என்ற அந்தச் சொல்லில் ஏராளம் ஏராளம் உயிர்களின்

முனகலொலி அதிர்ந்து கொண்டேயிருந்தது.

பிறகவை ஒவ்வொரு கண்ணாக

பெருகிக் கொண்டிருந்தன

குழந்தை அந்தச் சொல்லை

உதறியெறிந்தது

ஆனால் அந்தச் சொல் குழந்தையுடன் ஒட்டிக் கொண்டது

அப்படியே அது

அதைச்சுற்றி விரிந்து தன்னுள் இழுத்தது குழந்தையை

குருதியொழுக தவழ்ந்து வந்த குழந்தை

இப்போது தன்கையில் அகப்பட்ட சொற்களை எல்லாம்

விலக்கி

வெளியே வந்தது

என்றபோதும் புதைகுழியிலிருந்த சொற்களெல்லாம்

குழந்தையைப்பின் தொடர்ந்தன

வலையில் வரியும் படையின் அணிவகுப்பாய்

இன்னும் குழந்தையைத் தோற்கடிக்கும்

அத்தனை சொற்களும்

ஒரு கண்ணியில் பொருந்திக்கிடந்தன

வெடிகுண்டுகளின் ரகசியங்களுடன்

குழந்தையைப்பின் தொடர்ந்த

அந்தப் புதைகுழியின் நிழலில்

மறைந்திருந்தன

இன்னும் சிறை விலங்கு

புலனாய்வு மற்றும் அரசியல்

படை மறுமலர்ச்சி

சுதந்திரம் ஜனநாயம் விடுதலை தேசியம்

அன்பு கருணை பகை கோபம் பரஸ்பரம் என்று ஏராளம்

எதிரர்த்தச் சொற்கள்.

திறந்த புதைகுழியை யாராவது மூடுங்கள்

என்ற குழந்தையின் கேவல் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

எல்லோருடைய புலன்களையும் ஊடுருவிச் செல்லும்

நுண்துளைப் பெருக்கியினூடாக.


கண்ணழிந்த நிலத்தில்

கண்ணழிந்த நிலத்தில்

முளைகளின் ஒலியெழுந்தபோது

தாழ்ந்த மரக்கிளைகளிலிருந்து விழுந்தது

உறங்காச் சூரியன்

கூடுடைந்து

எழுந்த முளைகளின் பேரலை

பரந்தது வௌ;வேறு

திணைகளில்

உருக்குலையும் காலையில்

துருவேறிய மலர்களை

எடு;த்துச் சென்றார் கடவுள்

பதற்றத்துடன் விரைந்து

சந்தையிலிருந்து திரும்பிய

பெண்ணிடம்

தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்

கேட்டார் இரண்டு காசுகளை கடனாக

பசி தணிந்த பிறகு காத்திருந்த

கடவுளை ஏற்றிச் செல்லவில்லை

எந்தப் பேருந்தும்.

யாரும் பேசாமற் சென்றபோது

தனித்த கடவுள்

வாழ்ந்து விட்டுப்போங்கள் என்றார்

துருவேறிய மலர்கள்

கல்லாய் இறுகி மலைப்பாதமாகின

அதுவே கடவுளின் பாதம்

என்றாள் கடன் கொடுத்த பெண்.

கண்ணழிந்த நிலத்தில்

இப்போதிருந்தன

அந்தப் பெண்ணின் ஒரு சோடிக்கண்கள்

நெருப்புமிழ்ந்தபடி.

அதனுள்ளிருந்தது ஒரு பாற்குடம்

அவளிதயத்தின் வடிவில்.


poompoom2007@gmail.com

கருணாகரன்

Series Navigation

author

கருணாகரன்

கருணாகரன்

Similar Posts