சுஜாதா

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



இழுத்துச் சாத்தியே பழக்கப்பட்ட
இலக்கிய கதவுகள்
எப்போதேனும் படபடக்கிறபோது
கவனித்திருக்கிறேன், காற்றில் நீயும்
கலந்திருப்பாய்.

தமிழ் கூறும் நல்லுலகமில்லையா?
இழவுப்பேச்சின் நெடி கொஞ்சம்
தூக்கலாகத்தான் இருக்கும்
நிகழ்த்தப்படும் ஒப்பாரியில்கூட
ஒன்றிரண்டு வசவுகள் கலக்கக்கூடுமென்ற
உனக்கில்லா கவலைகள் எனக்குண்டு!

எழுத்து முதலீட்டில் சிக்கனமிருந்தும்,
குடிசைத் தொழிலாகவிருந்த கனவுகளை
வெகுசன விநியோகத்திற்கென்று
தொழிற்சாலைக்குக் கொண்டுசெல்ல
உன்னால் மட்டுமே முடிந்தது,

கன்னித் தமிழ் கவர்ச்சித் தமிழானதும்
‘பஞ்சகச்சமும், மடிசாரும்
பெல்பாட்டம், டீ ஷர்ட்டானதும்
நினைவில் இருக்கிறது,
நேற்று நடந்ததைப்போல.
‘சசி காத்திருக்கிறாள்’ என்றெழுதவும்
சங்கத் தமிழுக்கு உரைசொல்லவும்
நீ வரம்பெற்ற பராபரத்தைத்தேடி
நானும் அலைந்தது சத்தியம்.

மறுபிறவியில் உன் ஒருவன் விஷயத்தில்
எனக்கு நம்பிக்கை இருக்கிறது,
அவ்வப்போது தமிழிலக்கியத்திற்கு
புதுமைப் பித்தன்கள் வேண்டுமே!

எழுபதில் இருபதின் தூக்கத்தைக் கெடுத்த நீ,
இன்றுன் மரணத்தால் புதுபித்திருக்கிறாய்
ஸ்ரீரங்கத்திற்கு நேர்ந்த இரண்டாவது தீவிபத்து
இம்முறை நெஞ்சோடு, என் எழுத்தும் வேகிறது!
சம்பிரதாய அஞ்சலிகள் காகிதச் சங்கிலிகளாகும்
அபாயத்தை அறியாமலேயே இடிபாடுகளுக்கிடையில்
இந்த வண்ணத்துப்பூச்சி முட்டிமோதுகிறது.


nakrish2003@yahoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts