கருணாகரன் கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

கருணாகரன்


பூனையின் சித்திரங்கள்

பூனை என்றவுடன்

உங்கள் நினைவுக்கு வருவது

‘மியாவ்’ என்ற அதன் குரலா

ஓசையற்ற அதன் மிருதுவான நடையா

உடல் சுருக்கி கண்மூடி

பஞ்சுக்குவியலாயிருக்கும் அதன் தோற்றமா

மரத்தில் தாவித்திரியும்

அணிலைக்குறிவைத்து நோக்கும் அதன் ஒற்றைப்புலனா

ஏதோ ரகசியத்தை கண்டறிந்ததைச் சொல்லும்

அதனுடைய வாலாட்டலா

உங்கள் காலுரசி தோழமைகொள்ளும்

அதன் பிரியமா

எப்போதும் தன் சுத்தம் பற்றி

அக்கறையோடிருக்கும் அதன் குணமா

அல்லது

பூனை பாஸ்கரனா

பாஸ்கரனின் பூனையா

(ஓவியர் பாஸ்கரன் பூனைகளையே அதிகமாக வரைந்திருக்கிறார். அவருடைய பூனைகள் நினைவாகவும்)

2

கண்மூடிக்குவிந்திருக்கும் பூனையின்

தியானத்துள்

விரியும் காட்சிகளென்ன

அலையும் கனவுகளென்ன

3

நீங்கள் புணரும்போது

ரகசியமாகிறீர்கள்

பூனைகள் புணரும்போது ரகசியம் கரைகிறது

எலிகள் புணருகின்றன பூனைகளுக்காக

பூனைகள் புணருகின்றன எலிகளுக்காக

எலிகளும் பூனைகளுமில்லாத உலகம் எப்படியிருக்கும்

அதைப்போல

எலிகளில்லாத பூனைகளின் உலகமும்

பூனைகளில்லாத எலிகளின் உலகமும்

4

ஒருபோதும் பூனைகளை எதிர்க்காத

எலிகளை

எப்போதும் பகையாகக் கொள்வதேன் பூனைகள்

என்ற கேள்வி யெழுந்தது

திடீரென ஒரு நாள் ஒரு எலியிடம்

அந்தக் கேள்வி இன்னும்

கேள்வியாகவே இருக்கிறது

பூனைகளுக்கும் எலிகளுக்குமிடையில்

5

எங்கள் வீட்டில் பூனைகளுமுண்டு

எலிகளுமுண்டு

எலிகளைப் பூனைகளுக்குப்பிடிக்காதிருக்கலாம்

பூனைகள் எலிகளுக்குப் பகைமையாக இருக்கலாம்

ஆனால்

எலிகளும் பூனைகளும்

அது அது அதனதன் பாட்டில்

பூனைக்கு சோறு வைக்கிறேன்

எலிகளுக்கோ எதுவும் கொடுப்பதில்லை

அதனாலவை

தாமே எடுத்துக் கொள்கின்றனவா வேண்டியதை எல்லாம்

தாமே எடுத்துக் கொள்வதால்

எதையும் எடுக்கலாம்

எப்படியும் கொள்ளலாம் என்பதால்

சகிக்க முடியவில்லை

எலிகளின் வன்முறையை

எலிகளும் பூனைகளைப்போல்

நட்பாயிருந்தால்

எதையாவது கொடுத்துத் தீர்க்கலாம்

ஆனாலவை எப்போதும்

மிரண்டோடுகின்றன

அவற்றின் கண்களில் படபடக்கிறது

குற்றவுணர்வும்

அது பெருக்கும் அச்சமும்

எலிகளுக்குப் பூனைகள் மட்டுமா பகை

எங்கள் வீட்டில்

எலிகளுமுண்டு

பூனைகளுமுண்டு

நாங்களுமுண்டு


சினேகம்

பள்ளி நாட்களில்

எப்படியோ அறிமுகமாகிவிட்டது

குரங்குளோடான நட்பு

குரங்குகளுக்கும் பள்ளிப்பிள்ளைகளோடுதான்

சினேகம்

ஆனால் ஒன்று

எல்லாக் குரங்குகளும் ஒரேமாதிரியானவையில்லை

என்றபோதும்

எந்தக்குரங்குடன் நம் சினேகம் என்று தெரிவதேயில்லை

பலவேளை

வீட்டுக்கூரையில்

மாமரத்தில்

தெருக்கரைப்புளியில்

மதிலில்

காரின் மேல்

தோட்;டத்தில்

என்று எங்கும் புழங்கினாலும்

எந்த மனிதரும் குரங்கை அழைத்ததில்லை

ஒரு விருந்தாளியாக

எங்கேதான் குரங்கைக் கண்டாலும்

கல்லெறியாத எந்தச் சிறுவனும் இல்லை

சிறுவர்களோடு விளையாடாத குரங்குகளும்

எந்தத் தெருவிலும் இல்லை

சிறுநுனிக் கொப்புகளில்

தாவித் தொங்கும் குரங்குகளிடம்

மலைதிரண்ட பலமா

இல்லைக் குரங்கேறும்போது அக்கொப்;புகளில்

துளிர்க்கும் வீரியமா

எதிலுண்டு அப்பெரும் சாகஸம்

மரத்திலா குரங்கிலா

எவ்வளவுதான் ஊரிலும்

நகரத்திலும் இருந்தாலும்

குரங்குகளை காட்டுப்பிராணியென்றே சொல்கிறார்கள்.

நகரத்துப்பழக்கங்களில்

குரங்குகளுக்கு ஈடுபாடிருந்தாலும்

அவை காட்டின் வாசனையோடேயிருக்கின்றன

என்னால் ஒருபோதும் குரங்குகளை மறக்க முடியவில்லை

காட்டில் பயின்ற வித்தைகளை

அவை ஒருபோதும்

விட்டதில்லை யாருக்காகவும் எதற்காகவும்

எப்போதும் எங்கும்

இந்த நகரத்திலும்

அதனால் அவற்றை பிடித்திருக்குமா

இல்லை

எங்கோவோர் புள்ளியில் இன்னும்

அறுபடாமல் தொடரும்

தொப்புள் கொடியுறவின் நிமித்தமா



திருக்கோணேச்சரம்

பாடல்பெற்ற திருத்தலத்தின் திசைமுகங்களில்

போரிசை முழக்கம்

உடுக்கொலி மறைத்து

சங்கொலி மறைத்து

எழும் நாதப் பேரிசை மறைத்து.

மலைகளை அதிரவைக்கும் விதமாய்

‘தென்னாடுடைய சிவனே போற்றி…’

என்றவரெல்லாம்

அடிவீட்டில் முடங்கினார்

வழிதோறும் மலைமுழுதும்

படைவீட்டின் பெருக்கம் கண்டு.

இராவணன் வெட்டில்

கடல் குமுறித்துடித்தது

நூற்றாண்டாய், அதற்கும் அப்பால்

ஆயிரமாண்டுகளின்

தேவாரப்பண்ணிசையை

அலைகள் பாடின ரகசியமாய்

‘நிரைகழ லரவம் சிலம்பொலி யலம்பு…’

பீரங்கிகளோடு அலைகளை மேவி அலைந்தன

போர்ப்படகுகள்

துறைமுகத்தில்.

எண்ணெய்க்குதங்கள் இந்தியாவுக்கு

சில பங்குகள் சீனாவுக்கு

பிறிமா ஆலை சிங்கப்பூருக்கு

சிமெந்து ஆலை யப்பானுக்கு

துறைமுகமோ அமெரிக்காவுக்கு.

சிவனுக்கோ

அடியாருமில்லை

அடிவைக்க இடமுமில்லை.

மலை முகட்டில் புத்தரின் சொருபம்

நிஷ்டையில்.

தியானம் வசதியாகிப் போய் விட்டது

அவருக்கு

அடையாள அட்டை இல்லாதபோது

கண்மூடி அமர்ந்து விடலாம்

சற்றுப்பாதுகாப்பு.

மலையில் சிவன்

சுற்றிவரப்படையாட்கள்

எங்கே போவது

துவாரபாலகர்களையும் காணவில்லை

அவர்களைப் பிடித்துச் சென்றது யார்

யாரிடம் முறையிடுவது

பதற்றத்துடன் உமையொருபாகன்


மிஞ்சும் உயிர்

நெகிழ்ந்து கரையட்டு;ம்

இந்த உடல்

கனமும் வலியும் நிரம்பி

எல்லோரையும் உறுத்தும் படியாய்

இன்னுமிருக்க வேண்டாம்

மாத்திரைகளை தின்னத் தொடங்கும்போதே

மரணத்தின் சாயல் முகத்தில் விழுகிறது

தொங்கும் கயிற்றின் நிழலாய் என்றேன்

இல்லையில்லை

மரணத்தை விரட்டும்

சவுக்கோடு காத்திருக்கின்றன அவை,

அச்சமில்லை’ என்றார் அன்றிரவும் மருத்துவர்

சிரித்தவாறு.

எப்போதும் நினைவில் எழுந்தாடும்

கத்திகள்

உயிரைக் கொண்டேகவா

அல்லது ஒரு சிமிழில்

மீண்டும் பக்குவமாக்கவா என்று புரியவில்லை

சத்திர சிகிச்சைக் கூடத்தின் சுவர்களிலும்

சுழலும் மின் விசிறியிலும்

கனவிலுந்தான்

ஒரு மிடறு தண்ணீர்

சாவதற்கு முன்னும்

பின்னும்

இடையில் என்ன நடந்தது

யாருக்கும் நினைவில்லை.

மிஞ்சிக்கிடக்கின்றன மாத்திரைகள்

எதுவும் செய்ய முடியாமல்

பிரிந்த உயிரின் உடலோடு


முகம் -1

எத்தனை முகங்களை

நிதமும் பார்த்தேன் என்று யாருக்கும் கணக்கிருக்குமா

என்று தெரியவில்லை

பார்த்த முகங்களெல்லாம்

நினைவிலிருக்கும் என்றும் சொல்வதற்கில்லை

இத்தனை முகங்களையும் பார்த்திருப்போம் என்றும்

நினைத்ததில்லை.

ஒரு முகத்தை எத்தனை தரம்தான் பார்த்தோம் என்றும்

நினைவில்லை

பார்க்காத முகங்கள் எத்தனை என்றும் தெரியவில்லை

பார்த்த முகங்களில் எத்தனை விதமென்றும்

பார்க்காத முகங்களில் எத்தனை வகையென்றும் கூட

பார்த்த முகங்களிலும்

பார்க்காத முகங்களிலும் என்ன இருக்கிறது

என்ன இல்லை என்றும் புரியவில்லை முழுதாய்

தெரிந்த கணக்குகள்

எப்போதும் சறுக்க முனைகின்றன

முகங்களின் வளவளப்பிலும்

அவற்றின் பள்ளத்தாக்குகளிலும்

பார்க்காத முகங்களையெல்லாம் பார்ப்போம் என்பதற்குமில்லை

எந்த நிச்சயமும்

பார்த்த முகங்களையும் எத்தனை தடவைதான்

பார்ப்போம் என்றும் சொல்வதற்கில்லை

தெரிந்த முகங்களிலும் தெரிவதில்லை

எந்த முகத்தில் என்ன

இருந்ததென்று சிலபோது

இன்னுமொன்று

எந்த முகத்தை இறுதியாகப்

பார்ப்போமென்று யாருக்காவது தெரியுமா

அதுவும் எப்போதென்று



முகம் -2

அம்மாவின் முகம்

தங்கையின் முகம்

காதலனின் முகம்

நண்பரின் முகம்

தோழியின் முகம்

தாத்தாவின் முகம்

கள்வனின் முகம்

கொலையாளியின் முகம்

கொல்லப்பட்டவனின் முகம்

குழந்தையின் முகம்

மந்திரவாதியின் முகம்

படை அதிகாரியின் முகம்

பிச்சைக்காரனின் முகம்

துக்கம் நிரம்பிய கவிஞனின் முகம்

நடிகனின் முகம்

இறந்தவரின் முகம்

கடனாளியின் முகம்

நோயாளியின் முகம்

காற்றின் முகம்

பூவின் முகம்

வானத்தின் முகம்

கடலின் முகம்

கடவுளின் முகம்…

எங்கேனும் கண்டாயா என்னுடைய

காணாமற்போன முகத்தையும்

ஒப்பனை முகத்தையும்

நான் மறைத்து வைத்த முகத்தையும்

நீ கண்டெடுத்த முகத்தையும.;


poompoom2007@gmail.com

Series Navigation

author

கருணாகரன்

கருணாகரன்

Similar Posts