கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

உஷாதீபன்


இழப்பு

எப்படிச் சொல்ல
அந்தச் சோகத்தை-மகனே!
உனக்கு
கிட்டிப்புள் விளையாட்டு
தெரியுமா?
கோலியாடியிருக்கிறாயா?
எத்துக் கம்பு?
செதுக்குச் சப்பா?
அட…
பம்பரமாவது விட்டிருக்கிறாயா?
பாண்டியாவது உண்டா?
பச்சைக் குதிரை தாண்டியிருக்கிறாயா?
இல்லையா?
போச்சு!@ அத்தனையும் போச்சு!!
என்ன படித்து என்ன பயன்?
உன்
இளமைக் காலங்கள்
இழந்த காலங்கள்
நீ எவ்வளவு பெரிய
வேலைக்குப் போனாலும்
எத்தனை கைநிறையச் சம்பாதித்தாலும்
இந்த இழப்பு
ஈடு செய்ய முடியாதது
உன்பாலான
இந்தத் தாக்கம்
எனக்கு
தீராத மனச்சுமைதான்!!


அவன்
அந்த வளாகத்தில்
நுழையும் போதெல்லாம்
கையை நீட்டுகிறான் அவன்
அவனின் பொழுது – இன்று
என்னிலிருந்து துவக்கமா? – அல்லது
ஏற்கனவே துவங்கி விட்டதா?
எப்படியாயினும்
விடுமுறை நாளன்று
என்னின் எதிர்பார்ப்பு
உண்டு அவனுக்கு
அவனின் அந்த எதிர்பார்ப்பும்
அறியும் என் மனது
மனசு ஊனமுறாமல்
போட்டுவிடவேண்டும்-அந்த
ஊனமுற்ற நண்பனுக்கு


தேவை
குறைந்த சம்பளம்
நிறைந்த மனது
அப்பாவுக்கு
நாற்பதாண்டு காலம்
மாடாய் உழைத்த அவர்
ஒரு நாளும்
மனம சலித்ததில்லை
ஆனால் இன்று
இருபத்தைந்து வருட சர்வீஸில்
ஏகமாய்ச் சலிக்கிறது மனது
அப்பா காலத்தில்
லஞ்ச லாவண்யமில்லை
இன்றோ
ஊடுபாவாகி –
புரையோடிப் போயிருக்கிறது
இதற்கு மத்தியில்
நேர்மையாய் சர்வீஸ் போட
குறைந்தபட்சம் அந்தச்
சலிப்பாவது வேண்டாமா??


Series Navigation

author

உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts