கருணாகரன் கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

கருணாகரன்


வீடு

” இப்பெரும் பூமியில்

இல்லைத்துயரிற்றிருக்க ஓரிடமும் ”

என்றபோது சொன்னான்

” இல்லை, எனக்கும்

ஒரு குழி நிலம் சொந்தமாக ”

என்று,

என்னருகில் இருந்து

எதுவுமே அற்றவனாய்

எல்லைக்கற்கள்,

வேலிகள்

காணி உறுதிகள்

மதில்கள்

எல்லாவற்றுக்கும் அப்பால்

இருவரும் நின்றோம்

எப்போதும் பெரு வெளியில்

சிறியவீடுகள்

பெரியவீடுகள்

தொடர்மாடிகள்

அடுக்கு மாடிகள்

பழைய வீடுகள்

புதிய வீடுகள்

எதிலுமில்லை ஓரறையும்

இருவருக்கும்

” அம்பலத்தில் நீ” யென்றான்

ஒரு நாள்

சிரித்தவாறு

ஒரு மரம் வீடானது அப்போது

அது

யாரோ ஒருத்தர்

யாராயிருத்தல் கூடும்.

ஒலித்தது பெண்குரலா ஆண்குரலா

எங்கிருந்து

நினைவில்லை.


பூட்டு

நடந்து தொலைக்க முடியாத

இப்பெரும் பூமியில்

போக முடியவில்லை எங்கும்

போவதற்கு இருந்தன

ஏராளம் இடங்கள்

போக முடியாத படிக்கு

அழைப்பும் அழைப்பின்மையும்

எப்போதும் குழம்பிக் கொண்டேயிருந்தன

பிரியத்தையும் கசப்பையும்

கலந்தபடி

வாசலில் தொங்கும் பூட்டு உறுத்துகிறது

யார் மீது நம்பிக்கை கொள்வதென

எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்

அதன் அடையாளத்தை மீறி

செல்ல முடியவில்லை

எந்த வீட்டிலும்

தாராளமாக.

என்னையில்லா விட்டாலும்

யாரையோ அது சந்தேகிக்கிறது

எப்போதும் கவனமான

ஒரு அவதானியாயும்

பிடிவாதக்காரக் காவற்காரனாயும்



ஓட்டம்

இருள் நிரம்பிய வீடுகளில்

துயரத்தின் நிழல்

அலைந்து கொண்டிருக்கிறது

தனிமையில்

காத்துக் கொண்டேயிருக்கும்

நாற்காலியில்

கைவிட்டுப்போன பொம்மை

காத்திருக்கிறது குழந்தையின் ஞாபகங்களுடன்

விளையாடிய கணங்களோடும்

கொண்டு செல்ல முடியவில்லை

என்னோடிருந்த எந்தக்காலையையும்

எடுத்து வர முடியாத

மலர்களின் அழைப்புக்குரல்

இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

தொடுவானப்புள்ளிக்கு மப்பால்

மறைந்து கொண்டிருக்கும்

வீட்டிலிருந்து

வழி நெடுகத் தொடர்ந்து கொண்டிருந்த

அழுகையின் குரைப்பொலி

விரட்டிக் கொண்டேயிருந்தது

எங்கும்

தொடர்ந்து

இந்த மரத்தின் கீழே

வந்த நேரம் தகிக்கிறது நிழலும்

கண்ணீரில் தீ மூண்டு


தோழி

வீட்டிலிருக்கும் போதே வெளியேறிச் செல்கிறேன்

வெளியிலிருக்கும்போதே

வீட்டிற்குள் நுழைகிறேன்

சிலபோது

வரவேற்பறையைக்கடக்க முடியவில்லை

உள்ளே நுழையும்போதும்

வெளியேறிச் செல்லும்போதும்

யாருடையவோ நினைவுகள்

கடக்கமுடியாதபடி

கனத்த திரையாக தடித்துக்கிடக்கின்றன

எங்கும் கொண்டு போக முடியவில்லை

அன்பின் வாசனை நிரம்பிய சிறுசிமிழையும்

மிஞ்சியிருந்த அவளுடைய சொற்களையும்

பிரியத்தையும்

வைத்திருக்கவும் இயலாது

அவற்றின் கமழும் வாசனையை தடுத்தும்

சுடரும் ஒளியை மறைத்தும்

இன்னும்

அதனால் விட்டுவிட்டேன்

அவற்றின் திசைகளில்

திசையறிந்து பறக்கட்டும் பறவைகளாய் என்று.

இப்போ

தனிமையின் பிராந்தியத்துள்

கண்ணயரும்

நினைவுக்குலையில்

எதுவும் பருகுவதற்கில்லையா என்றாள்

எதிர்பாராத விதமாக இந்த மாலையில் வந்து

என்னெதிரில் நின்று வீம்பாக

கடந்த காலங்களை இழுத்து வரும்

சிரிப்பொலியில்

அவளிருந்தாள் வீடு நிரம்ப அப்போது

அப்போதும் இப்போதும்

நான் வீட்டிலிருந்தேனா வெளியிலிருந்தேனா

சொல்லடி என் தோழி


திசைமுகம்

இந்தக் கோடுகளைக் கீறியபோது

நான் வெளியிலிருந்தேன்

அதுவே நல்லது

காய மறுத்த இரத்தத்தினடியில்

சிரித்துக் கொண்டிருக்கும் முகத்தை

என்னாற் பார்க்க முடியவில்லை

யாரால்தான் முடியும்

கொலைகளின் மீது

பூக்களின் அலங்கரிப்பை

ரசிப்பதற்கும்

அதற்காக வாழ்த்துப்பா இசைப்பதற்கும்

தும்பைச் செடிகளை விலக்கி

நடந்தபோது

என்னோடு கூட வந்த நிழலைக்காணவில்லை

யாருடனோ சென்ற அது

வழி தவறி

உடைந்த பாலத்தின் முனையில்

தேம்பியவாறு நின்றது

காற்றிலாடிய பனைகளுக்கிடையில்

சுருங்கி விரியும் வெளியினூடு

உறைந்திருந்த பேச்சுக்குரல்களை விலக்கி

சந்தைக்குப்போகும் பெண்களிடம்

அச்சம் நிரம்பிய ரகசியங்களும் கதைகளுமிருந்தன

எங்கும் விற்கமுடியாமலும்

தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாமலும்

எல்லோருடைய கண்களிலும்

முடியாமைகளின் ஊற்று

பெரும் சதுப்பு நிலப்பரப்பை

உருவாக்கிக் கொண்டிருந்தது

அவர்களையே சுற்றி

ஒரு வியூகமாய்

எதிர் மறைகளுக்கிடையில்

முளைத்திருந்த

ஒற்றை விழியை

யாருந் தீண்ட மறுத்தபோதும்

எல்லோரும் மறந்த போதும்

நானெடுத்துக் கொண்டேன்

மூன்றாவது கண்ணாய்

அதுவே முதற்கண்ணென்று

‘ நெற்றிக்கண் திறப்பினும்’

என்றவரெல்லாம் காணவில்லை

ஒளி மலர் விழியை

அதன் உள்ளும் புறமும்

தகிக்கும்

முக்காலத்தின் திசை முகங்களை


poompoom2007@gmail.com

Series Navigation

author

கருணாகரன்

கருணாகரன்

Similar Posts