தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன் !
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன் !
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன் !
சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன் !
பாரதியார் (கண்ணம்மா என் காதலி)
புனித மீராவின் வாழ்க்கை வரலாறு (1498-1550):
பதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலே வாழ்ந்த கவிக்குயில் ஆண்டாளும் மீராவைப் போல் கண்ணன் மீது காதல் கொண்டு காவியப் பாக்களைப் புனைந்தார். மீரா கண்ணன் மீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்ந்து வருகின்றன. ஒருமுறை அப்போது தில்லியை ஆண்ட மொகாலாய மன்னர் அக்பரும், அவரது அரசாங்கக் கவிஞர் தான்சேனும் மாறுவேடம் பூண்டு, கல்லையும் உருக்கும் மீராவின் கானங்களைக் கேட்க வந்ததாக வரலாற்றில் அறியப்படுகிறது. அவரது அரிய வாழ்க்கையை வெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம்சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.
1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீது பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித சாதுக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக்கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குயிலாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.
சென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தாலும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது. மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் !
நான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவளுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட்டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன !
மீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்வனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்பி ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்தனவே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாகப் போய்விட்டது !
**********************
புனித மீராவின் கீதங்கள் : 3
மூச்சு விடுவதே பெரும்பாடு !
ஏதோ ஒருகரம் நீண்டு எனது
கண்களின் ஒளியைக் கைப் பற்றும் !
கவர்ச்சி எழும்கரு மேனியின் மீது,
கருமேனி யான் கூந்தலின் மீது !
பிழைத்தி ருப்பதே பெரும்பணி எனக்கு !
நாடிவரும் என்னகம் நாட்டியத் திறமை !
நிலவுபோல் தெரியும் மிடுக்குள அவன்முகம்.
முறுவல் புரியக் கண்டேன் ஒருபுறம் !
மென்மைக் குரலில் மீண்டும் மறைவாய்
என்னிடம் சொல்வர் என் குடும் பத்தார் :
“என்றுமே அவனைப் பாராய்” எனவே.
விடுதலை பெற்றவை எனதிரு விழிகள் !
விதிகளைக் கேட்டால் வெடித்துச் சிரிக்கும் !
மீராவின் விழிகள் என்றவை அறியும் !
எதையும் சுமக்கும் தோள்கள் எனக்கு !
எவ்விதப் புகாரும் அசைக்கா தென்னை !
மீரா கேட்கிறாள் :
கிரிதரன் வலுவிலா தெப்படி வாழ்வேன் ?
(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)
(தொடரும்)
************
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (Jan 30, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 22, 2008)]
- ஜெயமோகனும் இயல் விருதும்
- தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
- கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]
- கருணாகரன் கவிதைகள்
- போய்விடு அம்மா
- சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )
- ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)
- மீராவின் கவிதை
- மழை பிடிக்காது! மழை பிடிக்காது!
- பட்டுப்பூவே !
- ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை
- கவிதைகள்
- இரு நாட்டிய நிகழ்வுகள்
- இரண்டில் ஒன்று
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
- சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.
- கொட்டாவி
- கடிதம்
- ஊர் சுற்றிய ஓவர் கோட்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4
- மொழி
- மாத்தா- ஹரி அத்தியாயம் -46
- தம்மக்கள்
- மாலதி மாற மாட்டாள்!
- வானபிரஸ்த்தாசிரமம்
- தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.
- திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008
- நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்
- எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.
- பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?
- இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்
- குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2
- காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !
- திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்