காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



புனித மீராவின் கீதங்கள் : 1
கடைவீதியில் வாங்கிய கருமேனியான் !

கடைவீதிக்குச் சென்று, நண்பனே !
கருமேனி யானை வாங்கி வந்தேன் !
களவெனச் சொல்லட்டும் !
ஏமாற்று எனச் சொல்லட்டும் !
முரசடித்து வாங்கி வந்தேன்
கருப்பெனச் சொல்லட்டும் !
வெளுப்பெனச் சொல்லட்டும் !
பாரமெனச் சொல்லட்டும் !
பளுவில்லை எனச் சொல்லட்டும் !
தராசில் நிறுத்தே வாங்கி வந்தேன் !
ஈடாகத் தந்தேன் என் இல்வாழ்வை !
என் நகர வாழ்வை ! என் நகைகள் எல்லாம் !
மீரா சொல்கிறாள்:
பிரபு கிரிதரன் தன் கணவன் என்று !
உறங்கும் போது அருகில் இரு,
உறுதி சொல்ல வில்லையா
முன் பிறப்பில் நீ எனக்கு ?

(ஹிந்தி மூலம் : ஜடாயு)
(ஆங்கில மூலம் : ராபர்ட் பிலை)


புனித மீராவின் கீதங்கள் : 2
என்னைப் பிரிந்து செல்லாதே !

விட்டுச் செல்லாதே ! விட்டுச் செல்லாதே !
தொட்டுத் தொழுவேன்
நின்னிரு பாதங்களை !
என்னை அர்ப்பணம் செய்தேன்
உன்னிடமே !
பக்திப் பாதைக்குத்
திக்குத் தெரிய வில்லை
எவருக்கும் !
எங்கு செல்வதென
எனக்கொரு வழிகாட்டு !
எந்தன் உடலை ஓர்
சந்தனக் கட்டு
வாசனை வத்தியாய் மாற்றிட
ஆசை எனக்கு !
தீயால் வத்தியை ஏற்றிவை !
சாய்ந்து நான் வீழ்ந்து
சாம்பலாய்ப் போன பிறகு என்
தூசியை உன் மேனியில்
பூசிக்கொள் !
மீரா சொல்கிறாள்:
பிரபு கிரிதரா !
என்னிடம் உள்ளது ஒரு
மின்மினித் தீபம் !
அதனைப்
பின்னிக் கொள்ள விழைவேன்
உன் ஒளியுடன் !

(ஹிந்தி மூலம் : ஜடாயு)
(ஆங்கில மூலம் : ராபர்ட் பிலை)


Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts