கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

மதியழகன் சுப்பையா


வேடைக்குருதி கசியும்
புதுக்காயங்கள் பெற்று

இருட்டின் அடர்த்தியில்
மயிரினும் மெல்லிய வழித் தேடி

நுரையீரல் நீர்கனக்க
தனிமையாழியுள் ஆழ்ந்து

பசிக்கு மலம் புசித்து
பிணக்குழியில் படுத்துறங்கி

துன்பமொழி பிணாத்தி
தன்னோடு தான் பேசி

பொல்லாப் பொழுதுகளை
புலம்பியழுது போக்கி

நிராகரிப்பு எச்சிலால்
உடல் நனைந்து நாறி

உண்ட நஞ்சதுவோ
ஜீரணமாகி ஜீவன் தர

ஏதோ பிழைத்துக் கிடக்குமென்னை
வார்த்தைகளால் மீட்டெடுக்க
வருவாளோ தேவதை


உன் மவுனங்கள் புரியுமெனக்கு

காலையிலும் மாலையிலும்
தவறாது அழைத்துப் பேசும்
ஒழுங்கு

கூர்மையில் கிழிபடாது
பயணிக்கும் நத்தைபோல்
உரையாடல்களில் அத்தனை
கவனம்

தகாத-கூடாத- வேண்டாத
என தவிர்த்து; தேரும்
வார்த்தைகளில் வெளிப்படும்
அனுபவம்

அனுமதிக்க மன்னிக்க கோரி
விபரம் விசாரிக்கும்
குழைவு

குரல் மெலிகையில்
நடை தளர்கையில்
குறிப்பறிந்து நடக்கும்
கனிவு

விடு என்றால் விடவும்
கொடு என்றால் தரவும்
செய்யும் அடிபணிவு

இரும்புப் பந்தொன்றை
குரல்வளைக்குள் இறுக்கி
விழிபிதுங்கி நீ காட்டும்
மவுனங்கள் புரியுமெனக்கு


மவுனப் பயணி

இருக்கை மேல்
கால்கள் பரப்பி
அமர்கிறாய்

இருட்டில் ஊடுருவி
வெளிச்சம் தேடுதுன்
பார்வைகள்

உனக்குப் பின்னாலிருந்த
முகம் மலித்த இளைஞனும்
இறங்கிப் போய் விட்டான்

புத்தகத்தை மடித்து
வைத்துவிட்டு
உன் முகம் பார்த்து
புன்னகைத்தபடியிருக்கும்
என்னைப்பார்த்து
குறைந்தபட்சம்
புன்னகைத்திருக்கலாம் நீ

அடுத்த ரயில்
எப்பொழுது வருமென்று
கவலையோடு கேட்டாய்

இருபது நிமிடங்களில் என
நம்பிக்கையோடு பதிலளித்தேன்

ரயில் வரும் வரை
நீ எதுவும் கேட்கவில்லை
நான் எதுவும் சொல்லவில்லை

நம் மவுனம் கலைக்க
வந்து சேர்ந்தது
மின்ரயில்


தோள் சாய்ந்திருக்கிறாள்
தேவதையாய் ஒருத்தி

ஐந்து ரூபாய்க்கு ஆறு
எனக் கூவுகிறான்
அரைநிஜார் பையன்

கார்டூன் பாத்திரமொன்றை
நினைவூட்டும் ஜாடையில்
பல்தெரிய சிரிக்கிறான்
பைஜாமாக்காரன்

முலைபெருத்தவளோடு
ரகசியம் பகிர்கிறான்
புஜம் பருத்தவன்

துண்டு துண்டாய் ஏப்பம்
விட்டபடி வயிறு
தடவுகிறான் தடியன்

கம்பி தொங்கியபடி நால்வர்
வாசல் நின்றபடி ஐவர்
இறங்க ஆயத்தமாய் அறுவர்

எதையும் கவனியாது
விரித்த புத்தகத்துள்
படுத்துக் கிடக்கிறாய்
என்ன படிப்பாளி நீ?

கிடைத்து விடுகிறது
ஜன்னலோர இருக்கை

கண் கூடுகிறது
வழிநெடுக பசுமைகள்

கொரிக்கக் கிடைக்கிறது
கடலையும் மிட்டாயும்

பருக கிடைக்கிறது
தூயக் குடிநீர்

ஊர் விசாரிக்கிறான்
சாப்பாடுக் காரன்

கதை சொல்லி காசு
வாங்குகிறான் பிச்சைக்காரன்

அத்துமீறி ஏறும் ஆட்கள் கூட
போகுமிடம் கேட்கிறார் சைகையால்

பயணமுடிவிலும் பேசாது
இறங்கிப் போகிறாய் நீ


madhiyalagan@rediffmail.com

Series Navigation

author

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

Similar Posts