கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

பைசால், இலங்கை



புளியம்பழம் பாம்பு அல்லது விரல்

பாம்புகள் வாழும் ஒரு புளியமரத்தில்
உயிரற்று நீளும் பழங்கள்

புளியமரத்தின் கீழ் நிற்பதற்குப் பயம்

எத்தனை விரல்கள்
கிளைகளில் பிடித்துவைத்திருக்கும் பொல்லு

என்னையும் தூக்கி கிளையிலே வைத்துவிடும்

தோல்வேறு சதைவேறாகும் வித்தையாடும்
பறவையும் அதில்
கூடிநின்று புதினம் பார்ப்போர் அதிகம்.

அந்த புளியமரத்தடியில்
சுடப்பட்டு அவன் இறந்து கிடக்கிறான்.
Br>

கண்களால் முறண்டுபிடித்துப் பார்க்கும்
கிளைகளால் இறங்கிவரும் பாம்பு அல்லது புளியம்பழம்

திருடனைப்போல், திருடுவதுபோல்
கண்ணாடிப் பாத்திரங்கள் கீழே விழுந்து
வீட்டுக்காரன் கண் விழிக்காமல் திருடவேண்டும்
சதையை,இரத்தத்தை
என்று கற்றுத்தரும் பறவையது.

தோலொரு குகை
பயணிகளில்லாத ரெயில்ப் பெட்டி
சிறு பூச்சிகளோடு பிச்சைக்காரனும் பாதுகாப்பிற்காக
வாழுமிடம்

என் கற்பிணி மனைவி
மடிநிறைய பாம்புகளை வைத்திருக்கிறாள்
கொஞ்சமும் பயமில்லாமல்
கொஞ்சமும் நினைத்தால்
வாளிபோட்டு அள்ளலாம் வாய்க்குள் உமிழ்நீர்



அப்பாவியைத் தூக்கும் ஆயுதப் பறவை

என் உயிரை
கொத்திக் கொண்டுபோகிறது
ஒரு ஆயுதப் பறவை
அதற்கு சப்பாத்துக் கால்கள்

அண்டை வீட்டில்
சப்பாத்துக் கால் கோழி
இரண்டு இருக்கிறது
அது ஊத்தைகளைத்தான் உட்கொள்ளும்.

அப்பாவி
வயலுக்குப் போகும் போதும்
ஆற்றுக்குப் போகும் போதும்
வயல் தொப்பிக்காரன், சால்வக்காரன்
என்று பெயர் சொல்லி
அவதானித்திருக்கிறது அந்த ஆயுதப் பறவை.

மரத்திற்கு கீழ்லிருக்கும்
தேநீர்க் கடையில்
இரத்தத்தை தேநீர் என்கிறான் கடைக்காரன்
என் கனவில்

மழைக்காலங்களில்
இடி மின்னலைக் கண்டால்
வானில்
“சிறுமி பெரிதான பட்டமரமொன்றை
ஒட்டியிருக்கிறாள்”
இப்படிப் பேசுவதற்கு அவனில்லையென்பர் சனம்

அண்டை வீட்டுச் சுவரில்
பல்லிகள் காய்த்திருக்கும்
பழுத்து அல்லது அழுகி கீழே விழுந்த கதை வரப்போகிறது.

சுவர்க்கத்து மர நிழலிருக்கிறதே
அதில் நூறு வருடங்கள்
அவன் நடந்து சென்றாலும் நிழல் முடிவதில்லை
என்று ஆறுதல்படுவர் சனம்


தும்பி ஓட்டி

இதழ்களை நெருக்கி முத்தமிட்டாலும்
அந்த தும்பியோட்டியின் கனவு
எனது அறையெங்கும்
வந்து குதிக்கத்தான் செய்கிறது

தும்பியொன்று பறப்பதாகவும்
தும்பியின் வாலில்
மிருகமொன்று இருப்பதாகவும்
வந்து குதிக்கத்தான் செய்கிறது

அது
எனதூர் மிருகங்களை
வேறு நாட்டிற்கு ஏற்றிச் செல்கிறது.

யார் அந்த தும்பியோட்டி?
நானும் விற்பனைக்குவிடும் மிருகங்களை வைத்திருக்கிறேன்
அழகு பார்த்தவைகள்
ஆளைக் கவ்விக் கொண்டுபோனது
இன்னும் பண்ணைக்குத் திரும்பவில்லை
மல வாடையின் மாற்றத்திலிருந்து
தெரிந்து கொண்டேன்.

என்னிடம் அதிக மிருகங்கள் இருப்பதால்
எதுயெது பண்ணைக்கு வரவில்லை
எதுயெது பண்ணையிலிருக்கிறது
என்று பார்க்க
ஒரு வேலையாளும்

அவன் ஒரு மாதமாக
வேலைக்கு வரவில்லை

நடக்கும் பறவைகள்,
சிரிக்கும் பறவைகள்,
பேசும் பறவைகளும் ஒரு பண்ணையிலிருக்கிறது
இன்னும் வரவில்லையா
அந்த தும்பியோட்டி?

அவர்
மிருகங்களைத்தான் வாங்குகிறார்
என்று
என் மனைவி சொல்லும்போதெல்லாம்
தும்பியோட்டியின் மீது
அவளுக்குக் காதலா?

அவருக்கு ஓய்வில்லையாம்
என்று சொல்லும்போதெல்லாம்
தும்பியோட்டி
அவளின் கணவனா?
என்று எண்ணுகிறேன்

செடிகளில் வந்து ஒட்டுகிற பசைப் பறவைகளை
அவள் தினமும் விரட்டுகிறாள்
பாதுகாப்பு வேலிகளில்
ஒன்றுக்கு மேலொன்று
ஏறிக் கூத்தாடி மகிழ்வதை
அவள்
தினமும் விரட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
என்பதால் எனக்குச் சந்தேகம்

அது
தன் வாலையோ
அல்லது
சிறகையோ பிய்த்துக் கொண்டு பறந்திருக்கக் கூடும்

அவள் அழுதிருப்பாள்

நான் படுக்கையை விட்டெழுந்திருக்கிறேன்



என் பாடசாலைக்கு வாத்தியார் வரும் வாகனம்

வெண்கட்டியைக் கையிலெடுத்தேன்
சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகை விழுந்தது

துண்டு துண்டாக பிரிந்தது
உடையும்போது
தமிழ் எழுத்துக்களும், கணித எழுத்துக்களும்
சிந்தின நிலமெங்கும்

அத்தனையெழுத்துக்களையும் எடுத்து
வாக்கியங்களும், கணக்கும்
அமைத்துக் காட்டச் சொன்னார் வாத்தியார்

விடிந்தாலும் நான் பாடசாலையில்
வெண்கட்டியைக் கையிலெடுப்பேன்

அவருக்கு பலகையுடைந்தது பற்றி
பரவாயில்லை
சட்டைப் பைக்குள்ளொருதுண்டு
அது வடைவாங்கிய மீதிக் காசு
சிகரெட்டு வாங்குவேன் என்பார்

என் பாடசாலைக்கு
வாத்தியார் வரும் வாகனத்தை
அந்த மர நிழலில் வைப்பார்
இலை விழுந்தாலும் கண்ணாடியுடையும்
காற்றடித்தால் இருக்கை கிழம்பும்

யாரோ முதல் சம்பளத்தில் வாங்கியதை
இவர் முதல் சம்பளத்தில் வாங்கியிருக்கிறார்
வீட்டுச் சமையல் வேலைக்கு தண்ணீர்க்குடம் சுமக்கின்றது
அவருக்கு அது பரவாயில்லை
<


athanaal@gmail.com

Series Navigation

author

பைசால், இலங்கை

பைசால், இலங்கை

Similar Posts