கருணாகரன்
கருணையில்லாத பிணம்
கருணையில்லாத பிணம்
எல்லோரையும்
கதறியழ வைக்கிறது
அன்பின்றி
சிறு நன்றியுமின்றி
சாவின் களை நிரம்பிய முற்றத்தில்
துக்கம் பூத்து
படர்கிறது வாசமாய்
பேரிசை கொண்டெழுகிறாள்
ஒப்பாரிப் பெண்
உயிரைத் தேடி
அசைவைத் தேடி
எந்தக்குரலுக்கும் பிரதிபலிப்பின்றி
கரையமுடியாதிருக்கிறது
மயானம்
முடிந்தது ஒரு பயணம்
விலகியது மந்தை
கூட்டத்தில் பெரும் பள்ளமாய்
துக்கத்தின் மறை பெருக்கி
மிஞ்சிய கனவில்
தீ மூழுமா
புல் முளைக்குமா
வெற்றிடத்தில் அமர்கிறது காகம்
பிதிர்ச் சோற்றுக்காய்
கரைந்து
பாடல் பாடியவாறு
போய்ச்சேர்ந்த பிறவிக்காய்
இறுதி நேரப்பரிசை
அழாது கொடுக்க யார் வருவீPர்
இறுதி விடை பெற்றபின்னும்
துக்கத்தோடா
வழிவிடுவது
ஒரு துளி சிரிப்பையொலிக்க
யாராலும் முடியவில்லை
தோற்றது போ
இவ்வுலகம்
துடிக்கும் மரக்கிளையில்
காற்றை விலக்கி
அமரும் குருவிகள்
யாதறிந்தன
இந்த மரணப்பொழுதைப்பற்றியும்
விடை பெற்ற பயணி குறித்தும்
இனிச் சொல்ல முடியாது
மேற்குச் சூரியன் மறைகிறது
இருள் மணக்கும் வனத்தில்
உதிர்ந்த சிறகுகளின் குவியல்.
மாமிச நெடில் வீசும்
மரங்களில் எழுதிய பெயர்கள்
வேட்டைக்காரனை ஞாகப்படுத்துகின்றன.
கண்காணாத தேசத்து பரிவாரங்களின் பரிகாசத்தில்
செய்வதற் கெதுவுமின்றி
முழந்தாள்களில் தலையை வைத்து
மண்டியிட்டழுதாள் தேவி
பெருந்தேவி
கொக்குகள் பறந்து திசை பெயர்ந்த
மாலையில்
வயற் கொட்டிலில்
புகை மெல்லக் கிழம்பி வர
மூள்கிறது நெருப்பு
உடுக்கொலி நிரம்பும் வயல் வெளியில்
முன் பனிக் குளிர் வாட்;ட
கொடுகிக்கிடக்கும் கிழவனின் காதுகளில்
தேள் கொட்டியது
வடக்கே பெரும் பீரங்கி முழக்கம்
ஆயிரம் தலைகொண்ட நாகம்
படமெடுத்தாடும் சந்நதத்தை
காட்டின் நாயகி கண்டு துணுக்குற்றாள்
கொல்லைப்புறத்தில்
மருத மரங்களில்
கூடிய பறவைகள் சிதறித் தெறிக்க
இருள் விழுங்கிய
தாமரைக் குளத்தில்
மருத மரங்கள் பாறி வீழ்ந்தன
சனங்களின் குரலால்
நிறைந்த வானத்தில்
எந்த நட்சத்திரமுமில்லை
கண்ணறிய.
புயல் கொண்டு போகிறது
கையிலேந்திய
ஒரு சொட்டு நீரையும்
இரவுக்கரை
இன்றிரவு
பெயர்ந்து
ஒரு பகலிடம் போய்ச்சேர்ந்தபோது
நானிறங்கினேன்
அதிலிருந்து பதற்றத்தோடு
நகரம்
நாய்களால் நிரம்பியிருந்தது
ஒரேயொரு நாயினால்
படைத்தளபதிகள்
பீரங்கிகளோடு சம்பாஷித்துக் கொண்டிருக்கையில்
இரகசியமாக
பனைகளின் மறைவில்
நகர்ந்து கொண்டிருந்த சூரியனுக்கு
ஒரு சிப்பாய் குறிவைத்தான்
சிதறித் தெறித்தன பல்லாயிரம் பனைகள்
நகரத்தில்
புழுக்களுக்கு வணக்கம் சொல்லி
வரவேற்றான் படைத்தளபதி
ஒரு விருந்துக்காக
துளிரும் இலைகளின் மேல்
புழுக்கள் கூடுகட்டின
யாரும் கவனிக்கவில்லை
பீரங்கிகளிலிருந்து இரத்தம் வடிவதையும்
கண்ணீர் பெருகுவதையும்
அப்போது
அலறியபடி வந்த சிப்பாய்
தளபதியின் காலடியில்
மண்டியிட்டழுதான்
அந்தப்பீரங்கிகளில் ஒன்றையேனும்
தந்ததால்
நீர் பெய்து தன்வம்சம் பெருக்கும்
திறன் பெறுவெனென்று
கூடிய தளபதிகள்
சிப்பாயை
முறிந்த பனைகளின் கீழே
புழுக்களிடம் பரிசளித்தனர்
முற்றிய பகலில்
திணறிக் கொண்டிருந்தன
முந்தைய இரவும் வரத்தயங்கும் இரவும்
என்னை எங்கும் காணவேயில்லை
பீரங்கியின் குழல் வாய் மொழி
அடங்க மறுக்கும் சிறு குரலை
மறைத்து வைத்திருந்தேன்
பதுங்கு குழியின் இடுக்கினுள்
பீரங்கியிடம் அது சொல்லவிருந்த
சில வார்தைகளையும்
கேட்கவிருந்த சில கேள்விகளையும்
நான் களவாடினேன்
நிகழக்கூடிய அபாயம் கருதி
ஐயா, ஒரு போதும் எதற்கும்
அடங்கியதில்லை
நெஞ்சறிந்த உண்மையை யன்றி
நானோ
ஒரு பல்லியாகிச் சுவரில் ஒட்டினேன்
அது பகல்
தீரா விடாய் கொண்ட பகல்
தேவாலயங்கள் இடிந்து வீழ்ந்த
அப்போதில்
இடிபாடுகளில் புறாக்களும்
பிரார்த்தனைகளும் சிக்கிய வேளை
பீரங்கிகளின் குழல் வாய் மொழியைக் கேட்டேன்
அருகில்
மிக அருகில்
யம சேனை
என்னை மிதித்துச் சென்றது
போதையுடன.;
பெருகிய குருதியில்
தாகம் தீர்த்த பகல்
கள்வனைப்போல் இரவிடம் பதுங்கியது
இதோ சிதறிக்கிடக்கிறது
கோவில் மணியோசை
இறுதி நேரப்பிரார்த்தனையின்
கடைசிச் சொற்கள்
இனித் தேவனைப்பாட
சொற்களிருக்குமா
பிரார்த்தனைகளிருக்குமா
ஆயிரமாயிரம் சுடர் கொண்ட விழிகளோடு
வானத்தை வெறித்தபடியிருக்கும்
சிறுமியின் அருகில்
பெயர்ந்து கொண்டிருந்தது
மிஞ்சிய நம்பிக்கையும்
அவள் சேகரித்து வைத்திருந்த எதிர்காலமும்.
பிளந்து கொண்டு போகிறது
பூமி
என்னிடமில்லை
அடங்க மறுத்துத் திணறிய அக்குரல்
இப்போது
சூடிய போதில் மாலை
ஒரு மாலை கொண்டு வா
பீரங்கியின் கழுத்தில் சூடலாம்
சாவின் தீரப்பசியுடைய
பெருந்தேவன் இதுவல்லவா
இந்தப்பகலை
கொய்து
சுவரில் அறையுங்கள்
ஒரு பகலில் எதுதான் தோற்கும்
எதுதான் வெல்லும்
வாழ்வைத் தோற்கடித்த
மரணத்தின் முன்னே இரவென்ன பகலென்ன
சிலுவைக்கருகில் சாவின் பிணமும்
சேகரித்த சிரிப்பும்
தனிமையில்
மரங்கள் பைத்தியமாகி
நடந்து திரிகையில்
இதோ வசந்தம்
கண்களிலிலிருந்தும் மரங்கள் பூக்களிலிருந்தும்
பெயர்க்கப்பட்டு வருகிறது
மனதை விழுங்கி
வேண்டப்படாத மௌனத்தை
பரப்பி இருக்கும்
அந்தச் சனங்களிடம்
ஒரு வார்த்தை, ஒரேயொரு வார்த்தை
பெற்றுக் கொண்ட பிறகு
மெல்ல வாருங்கள் இந்தப் பீரங்கிக்கருகில்
அவனுடைய தோலில்
முழங்கப்படும் பேரிசைக்காக
காத்திருக்கும் வேதனையுடைய காலையே
நடுங்கும் கரங்களோடு
அலைகிற காற்றுக்கருகிலே
மூர்ச்சையற்றுக் கிடக்கிறாள்
அவனுடைய தாய்
ஒரு தகர்ந்து போன பாலமாய்
எங்கே பாண்காரன்
இலையான்களை விட்டுச் சென்றது
கருணையில்லாத பிணம்
பசியின் கூடாரத்துள் வெற்றிக்கொடிகளை
களவாடிச் சென்ற
வெளியாட்களை தேடப்பொனது யார்
காட்டு வழியில் சூடிய மாலைகளோடு நின்ற
பீரங்கிகளில்
மோதி வீழ்ந்தவர் யார்
சருகுகளில் வேர் கொண்டெழுகிறது
காடு
இந்த வேதனைகளில் பற்றியெரியும்
என்னுடலை தீயுடன் தருகிறேன்
யாராவது கொண்டு செல்லுங்கள், எங்காவது
படையாட்களிடம்
பூக்களையும் பொம்மைகளையும்
கடந்த காலத்தையம் கொடுத்து
ஒரு படைவிருத்தியைச் செய்வோம் என்ற
வழிப்போக்கனை தேடுகிறேன் விருந்துக்காக
காலம் அவனைப் பணிக
நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும்
ஓட்;டை போடும்
நுட்பத்துக்காக
பரிசளித்துக் கொண்டிருக்க முடியுமா எப்போதும்
படைக் கென்றாள்
பாலகி
யாருமில்லை இந்த வெளியிலும் இருட்டிலும்
தனித்தேயிருக்கிறது
வழி
ஒளியுமின்றி இருளுமின்றி
ஒரு சிதறிய கண்ணாய்.
poompoom2007@gmail.com
- மனிதர்கள் இல்லாத பொழுதுகள்
- கருணாகரன் கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ? (கட்டுரை: 7)
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்
- 2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது
- The Mighty Heart :இது இது தான் சினிமா:
- அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்
- கானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7
- லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி
- ஆட்டோகிராப்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா
- லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும்
- நினைவுகளின் தடத்தில் – (3)
- ஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு
- எச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)
- இலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை
- பாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்
- கோவிந்த் கடிதம் பற்றி
- உயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா
- லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..
- பாற்கடலைக் கடைந்த விதம்
- வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு
- மனம் மொழி மெய்
- இட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்
- பொண்ணுங்க மாறிட்டாங்க!
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2
- தைவான் நாடோடிக் கதைகள் 4
- வெள்ளிக் கரண்டி
- ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்
- படித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்
- குறிப்பேட்டுப் பதிவுகள் -4!
- டபுள் இஞ்ஜின்
- ஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா
- முப்பெருவெளியின் சங்கமம்
- தாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி !
- நின்னைத் துதித்தேன்
- பாரதி இன்றிருந்தால்..?
- பாரதிக்கு அஞ்சலி!
- எனக்கென்று ஒரு கை
- அக்கினிப் பூக்கள் -4
- மாத்தா ஹரி – அத்தியாயம் 40