கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

மேரித் தங்கம்


கவிதைகள்

1. கணிணிகள் பற்றி ஒரு கவிதை

கணிணிகளே காலத்தின் கண்ணிகளே
கலியுகத்தின் கடவுளே!
பணிகளைத் துரிதமாய் முடிப்பவனே
பன்முகங் கொண்டவனே!
மனித மூளையின் மறுபதிப்பே
மந்திர எந்திரமே!
கனிவும் கரிசனமும் நிறைந்தவனே
கற்பகத்தருவின் உருவமே!

மின்னும் உமது சின்னத்திரை தான்
மாயக் கண்ணனின் மலர்வாயோ?
பன்னெடுங் காலமாய் பரணி ஆளும்
பரம்பொருளின் ஒளி இதுதானோ?
விண்ணையும் மண்ணையும் கைக்குள் சுருக்கிய
விஞ்ஞான விந்தை நீதானோ?
எண்ணி எண்ணி வியக்கிறேன் உன்னை
எப்படித் தான் விளிப்பது!

பரந்த உலகத்தின் செய்திகளை
பத்திரமாய் உன்னுள் பதுக்கி
விரலசைவில் விபரங்களைக் கொட்டும்
வித்தைகள் பல தெரிந்தவனே!
ஒருநொடியில் ஒற்றைச் சொடுக்கில்
ஒன்றை பலவாய் பலப்பலவாய்
பெருக்கும் சூட்சுமம் அறிந்தவனே
பிரமிக்கிறேன் உனைப் பார்த்து!

சிலிர்ப்பூட்டும் வேகத்தில் செயலாற்றும்
சின்னஞ்சிறு தாரகையே!
சிலிக்கான் சில்லுகள் உங்களின்
சிந்தனைக் களமோ?
அலுவல்களில் நீங்களின்றி அணுகூட
அசையாதென்பதும் இணைய
வலைப்பின்னல்களே உலகாளு மென்பதும்
வருங்கால நிஜமோ?

விண்வெளி தொழிற் நுட்பத்தில்
விந்தைகள் நிகழ்த்துகிறாய்;
அண்டம் நடுங்கும் அணுவியலிலோ
அபார சாதணைகள்!
கண்சிமிட்டும் நேரத்திற்குள் ஆழ்
கடலுள் ஆராய்ச்சிகள்;
வண்ணத்திரை சின்னத் திரைகளிலும்
வசீகரிக்கும் புதுமைகள்!

விழிப்பூட்டும் கல்வியில் வித்தகனாய்
வியாபித்து நிற்கிறாய்;
சலிப்பூட்டூம் நேரங்களை சந்தோஷமாக்க
சங்கீதமாய் வழிகிறாய்!
வழிகாட்டும் சுற்றுலாவிலும் உன்னால்
வருமானம் தழைக்கிறது;
அழித்தல் ஆக்கல் பணி செய்யும்
ஆண்டவனுக்கும் உதவுவாயோ!

சகலமும் கணிணி மயமானால்
சாமானியர்க்கு வேலைபோகும்
அகிலமுழுதும் அவதியுறு மென்று
அலறின ஆருடங்கள்!
புதிதுபுதிதாய் பூத்த வேலைகள்
புலம்பல்களைப் பொய்யாக்கின;
கதியில்லை கணிணியின்றி என்றொரு
காலமும் கனிந்ததே!

மருத்துவத்தில் கணிணியின் பணிகளோ
மகத்துவத்தின் மகுடங்கள்;
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
இளவரசி நீயேதான்!
வருகிற நாட்களிலும் உன்னில்
வளர்ச்சிகள் பெருகும்;
புரட்சிகளின் புதல்வியாய் பொங்கி
பிரவகிக்கப் போகிறாய்!

சாதனைகளின் பட்டியல் பார்த்து
சந்தோஷப்படுமுன் சிற்சில
வேதனைகளும் விஷப்பல் காட்டி
விழிகளை நனைகின்றன!
பெருகும் கணிணி விளையாட்டுக்கள்
பேரிடியாகின்றன சிறுவர்கட்கு;
அருகும் உடல் விளையாட்டுக்களால்
அரும்புகள் கருகுகின்றனவே!

இரவுகளின் அடர்த்தி எப்போதும்
இளைஞர்களின் கண்களில்
பெருகும் ஈ-எழுத்துக்களின் வேகத்தில்
பிழைக்குமா புத்தகங்கள்?
குருவிகள் கொத்தி என்றும்
குலையாது கோபுரங்கள்;
அருவிக் குளியளின் ஆனந்தத்தை
அறைக்குள் ஷவர்கள்
ஒருபோதும் தருவதில்லை என்ற
உண்மை நிலைக்கும்!

சூதும் துவேஷமும் ஆபாசங்களும்
சூலப்பெற்ற மனிதப்
பதர்களின் மலிவான பிரயோகத்தில்
மாசுபடும் கணிணிகள்!
அற்புதமான அறிவியல் கருவிகளிலும்
அநீதிகளை விதைக்கும்
விற்பனை மனங்கொண்ட வீணர்களின்
விளையாட்டு அது;
அற்பங்களைக் களைந்து வளரும்
அரும்புகளைக் காப்போம்!

வயலிலும் கணிணிகள் இறங்கும்
வருங்காலம் சுபிட்ஷமே!
இயற்கையின் சீற்றங்களைத் தடுத்து
இதமான காற்றுக்கு
இயந்திரங்கள் வழிபண்ணிக் கொடுத்தால்
இந்தயுகம் செழிக்குமே!
பயமின்றி மனிதம் தழைக்கவே
பயனாகட்டும் கணிணிகளே!


2. எயிட்ஸ¤டன் ஒரு பேட்டி

வாசகர்களுக்கு வணக்கம் – இன்று நாம்
சந்திக்கப் போகும் நபருக்கு
அறிமுகமே அவசியமில்லை
உலகப் புகழின் உச்சியிலிருப்பவர்!

இந்த நூற்றாண்டின் இணையற்றவர்
புள்ளிராஜாக்களை பிரபலமாக்கியர்;
மனிதக் கொலைகளுக்கான
மாபெரும் விருதை
பெறுகிறவர்களின் பட்டியலில்
முன்னணியில் நிற்பவர்!

மழைக்காலத்தின் ஒரு மாலை வேளையில்
வேகவைத்த வேர்க்கடலையை கொறித்தபடி – அவருடன்
உரையாடியதிலிருந்து சில பகுதிகள்
உங்களின் பார்வைக்கு…..

(?) உயர்திரு எயிட்ஸாரே
வந்தனங்கள் உமக்கு
உள்ளம் திறந்து கொஞ்ச நேரம்
உரையாடலாமா உம்முடன்
மானிடர் உய்யவே
மகத்தான சேதிகள் சொல்வீரா?

(ப) அவசர வேலைகள் அனேகம் எனக்கு
அவகாசமில்லை நின்று பேச
புவன முழுக்க பவனி வரவேணும்
புல்லென நிற்கப் பொழுதில்லை;
நவநவமான கேள்விகள் இருந்தால் மட்டும்
நடந்தபடி கேளும் என்னிடம்……!

(?) சிறு அறிமுகம் உம்மைப் பற்றி
சினேகத்துடன் பகரலாமே!
வருமுன் காக்கும் சூட்சுமம் உரைத்தால்
வாழ்த்தும் மானிடர் இனமே!

(ப) மரணம் எனது மறுபதிப்பு; எனக்கு
மனித உயிர்கள் தித்திப்பு!
எருமை வாகனன் எனக்கும் எஜமானன்;
எமனின் புதுவடிவம் நான்!
ஒரு துளி இரத்தத்திலும் ஊடாடித் தொற்றுவேன்
ஓய்வேன் உயிர் குடித்தே……
மருந்தில்லை எனை வெல்லவே இதுவரை
மறுபடி மறுபடி துளிர்ப்பேன்!

(?) உயிர்த் தாகம் கொண்டு
உலவும் உம்மால் தான்
உலகம் அழியும் ஒருநாளென்று
ஊளை கேட்குதே எங்கெங்கும்
உண்மை தானோ அது?

(ப) நாழிக்குள் பொங்குமாக் கடலை அடைத்து
நாடு கடத்துதல் சாத்தியமா?
அழியும் உலகம் என்னால் என்பதெல்லாம்
அச்சங்களின் உச்சம்; அறிவீனம்
ஊழிக்குள் சைத்தான்கள் ஓதும் வேதம்
உண்மையில்லை ஒரு போதும்
விழிப்புணர்வு மட்டும் இருந்தால் எளிதாய்
வீழ்த்தி விடலாம் விதியையும்!

என்னைப் போல் இன்னும் எத்தனை
எத்தனையோ பேரிடர்கள் பலவும்
தாண்டித்தான் தழைக்குது மனித இனம்
தடுமாற்றம் தவிர்ப்பீர் மானிடரே;
வீண் பயங்கள் வேண்டவே வெண்டாம்
விண்ணுள்ளவரை மனிதம் உய்யும்!

(?) அபாயங்கள் நிறைந்தவனென்று நினைத்திருக்க
ஆறுதலாய்ப் பேசுகிறாயே சந்தோஷம்;
அபயம் என்றலரும் மானிடர் உய்யவே
உபாயங்கள் இருந்தால் சொல்லி
உலகத்தாரை இரட்சிக்கக் கூடாதா?

(ப) சுத்தப் படுத்தாத ஊசிகள் இரத்தம்
உறைந்த கத்திகள் பிளேடுகள்
மெத்தென்ற விலைமகளிர் ஓரினப் பாலுறவு
மொத்தமும் விலக்கி டுங்கள்!
பித்தென்ற காமத் தீயை முழுதாய்
வெல்ல முடியா விட்டாலோ
வாத்யாயனார் கலை பழக கண்டிப்பாய்
கவசம் அணிந்து கொள்ளுங்கள்!

ஆட்டோ கிலாவ்வில் வைத்து சிரத்தையாய்
அணுதினமும் பாதுகாத்த சிரிஞ்சுகள்;
மற்றவர் இரத்தத்தை மனிதரில் செலுத்துமுன்
மாசுகளையும் சோதணைகள் யாவும்
தோற்று வாயிலேயே எனைத் துப்பறிந்து
தொற்றுவதைத் தவிர்க்கும் வழிகள்
மாற்று இப்போதைக்கு ஏதுமில்லை அதனால்
மிகத்தேவை எச்சரிக்கை என்தோழா!

(?) எப்படியோ உன் மரண வலைக்குள்
தப்பிப்போய் விழுந்து தத்தளிக்கும்
அப்பாவிகளை அணுகும் முறைகளை
செப்புக செவிக்குள் உரக்க……..

(ப) நிச்சயிக்கப்பட்ட மரணத்தை நிறுத்த முடியாது
நேர்மையாய் எதிர் கொள்ளட்டும்
அச்சமயம் வரும்வரை மிச்ச நாட்களை
அல்லலின்றி கழிக்க உதவுங்கள்!
உச்சபட்ச தோழமையும் பரிவும் அன்பும்
உங்களின் பங்களிப்பாக இருக்கட்டும்
மெச்சும்படி மேன்மையாய் வாழ விடுங்கள்
வாழ்வுரிமை யாவர்க்கும் பொது!

ஏற்கெனவே என்னுடைய முட் படுக்கையில்
ஏகப்பட்ட இரணங்கள் அவர்களுக்கு;
வெறுத்தொதுக்கி விலக்கி வைத்து அவர்களின்
வேதணைகளை அதிகப் படுத்தாதீர்!
கர்மபலனெனும் கண்ணீர் குண்டுகளை வீசி
காயப் படுத்தாமல் இருங்கள்;
வார்த்தை களெனும் ஈட்டிகளால் குத்தி
வாழ்தலை நரகமாக்க வேண்டாம்!

வியர்வையிலோ எச்சிலிலோ பரவுவதில்லை நான்
வீணான எண்ணங்களை விடுங்கள்!
பயமின்றி பழகலாம்; பணிஇடங்களிலும் அவர்களை
பாரமென ஒருநாளும் நினைக்காதீர்!
அயலாரை ஒருபோதும் தொற்றுவதில்லை நான்
அணைத்தலிலும் இரத்தமற்ற முத்தத்திலும்…..
நயமின்றி தனித்தட்டு டம்ளரெனப் பிரித்து
நாயைப்போ லவர்களை நடத்தாதீர்!

தெரிந்து கொள்ளுங்கள் மானிடரே இறப்பைத்
தடுக்கத்தான் முடியாது; ஆயினும்
பிரியங்களுடன் அவர்களைப் பேணிப் பராமரித்தால்
நீட்டிக்கலாம் ஆயுளை நிச்சயமாய்……
நிரந்தரமாய் எனை நீக்கும் நிவாரணிகள்
நிறுவப்படும் ஒருநாள் அதுவரை
பொறுமையுடன் காத்திருங்கள் சக உயிர்களை
பொக்கிஷமாய்க் கருதி மகிழ்ந்திடுங்கள்!

(?) இறுதியாய் ஒரு கேள்வி – இனியவனே
உறுதியான உன் பதிலுக்கு!
அரிதும் அரிதுமான மானுட சமூகத்திற்கு
விரோதியா நீ நண்பனா?

(ப) பிற்போக்கானவனென நீங்கள் முத்திரை குத்தினாலும்
ஒருவனுக்கு ஒருத்தி என்னும்
கற்பொழுக்கத்தை மறுபடி போதிக்க வந்தேன்
மீறலுக்கு விலை அதிகம்!
வற்புறுத்திக் கேட்டதனால் சொன்னேன் வருத்தமில்லை
வாழ்த்தினாலும் நீங்கள் தூற்றினாலும்…..
தீர்மானித்துக் கொள்ளுங்கள் நீங்களே நான்
தீயவனா நல்லவனா என்று
தீர்ப்பு மரணம் அதனால் மானிடரே
திருந்தி விடுங்கள் உடனேயே….!


:

தா(கா)கங்களின் கதை
அன்புத் தங்கையே! அன்புத் தங்கையே!
இன்னும் கொஞ்ச தூரம் தான்
எங்காவது சிறிதளவாவது
நீர் கிடைக்கும் நிச்சயமாய்
அள்ளிச் செல்வோம் அதுவரை
வலிபொறு என் செல்லமே!

நீர் நிரப்பும் நேரம் வரை
நீதிக்கதை ஒன்று சொல்லட்டுமா?
நம்மைப் போலவே நீர்தேடி அலைந்த
காகங்களைப் பற்றிய கதை இது!
பள்ளிக்குப் போயிருந்தால் நாமும்
பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்;

பாட்டியிடம் திருடிய வடையை
தன்குரல் பற்றிய பிரமைகளில்
பாட்டுப் பாடி நரியிடம்
பறிகொடுத்ததும் கூட
இதே காகமாக இருக்கலாம்!
அத்துவானக் காட்டில் ஒருநாள்
அலைந்து கொண்டிருந்தது தாகத்துடன்!

சுற்றிச் சுற்றி அலைந்தும் கொஞ்சமும்
தண்ணீர் தட்டுப்படவில்லை தடாகமெதிலும்;
கடும் கானலைத் தவிர இன்று போலவே
கானகத்தில் நீர்ப்பசையில்லை எங்கும் ….

முன்பெல்லாம் இத்தனை
அலைச்சலும் தேடலும்
அவசியமிருந்ததில்லை காகங்களுக்கு;
ஏதாவது செடி மறைவில்
உழவனின் கஞ்சிக் கலயமிருக்கும்
உருட்டிக் குடித்து விட்டு
ஒய்யாரமாய் பறந்துவிடும் கரைந்தபடி…..

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
விவசாய நிலங்களை யெல்லாம்
விழுங்கத் தொடங்கிய பின்புதான்
காகங்களுக்கும் நமக்கும்
தாகம் நிரந்தரமாயிற்று!

தூரரத்தில் வெகுதூரத்தில்
பானை ஒன்று மின்னியது
பாலை வெயிலில்;
பசியையும் மீறி காகம்
பறந்து போனது அதனருகில்…

பெரியதோர் மண்பானை அது;
இரவுப் பனியின் ஈரம் உலராமல்
தூரில் நீராய் நின்றிருந்தது
சூரியக் கதிர்களிலிருந்து
எப்புடியோ தப்பி………

விளிம்பிலேறி எட்டிப் பார்த்து
விசனப்பட்டது காகம் – தன்
அலகுக்கு எட்டாத
ஆழத்தில் நீரிருப்பதை அறிந்து….

இதற்கு முன்பும் ஒரு சமயம்
இதே போல் நேர்ந்ததும் – தன்
புத்தி கூர்மையால் நீரருந்தியதும்
நினைவிலாடியது காகத்திற்கு……

கொஞ்சமும் தாமதிக்காமல்
அக்கம் பக்கம் கல் பொறுக்கி
அடுக்கடுக்காய் பானையுள் போட்டது;
கற்களால் பானை நிரம்பியும்
நீரெழும்பி வாரதது கண்டு
நிர்கதியாய் நின்றது காகம்!

என்னாயிற்று தண்ணீருக்கு?
ஐயகோ –
போட்ட கற்களின் அழுத்தத்தில்
ஓட்டை விழுந்து பழம் பானையில்
ஒழுகிய கொஞ்ச நீரையும்
வறண்டிருந்த நிலம்
வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!

என்ன செய்யும் ஏழைக் காகம்?
தாகம் தணிக்க வழியற்று
பறந்து போய் மறுபடியும் – சிறுவர்களின்
பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
நீதிக் கதை வெளிகளில்
நீந்தித் திரியலாயிற்று !
நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
தொடர்கிறது காலங்கள் தோறும்…..!

எழுதியவர் : மேரித் தங்கம்
(thangam.mary@gmail.com)

Series Navigation

author

மேரித் தங்கம்

மேரித் தங்கம்

Similar Posts