கவிதைகள்

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

யெஸ்.பாலபாரதி


ங்கொய்யால…

கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை
கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்

புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்

யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்

அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்

எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி

அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று

குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்

மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.


சிரங்குகள்
உடலெங்கும் சிரங்குகள்
அவ்வப்போது
சொறிந்து கொள்ளத்தோன்றும் விதத்தில்

ஒழுங்காய்த்தான் இருந்தன முதலில்
ஆரோக்கியம் சேர்க்குமென
ஆசைப்பட்டு பூசிக்கொண்ட களிம்புகளால்
விளைந்தவை இவை

களிம்புகளை வழங்கியவர்களும்
சொறிந்துகொண்டுதானிருக்கிறார்கள்
இருந்தும் மோகம்
குறையவில்லை மக்களுக்கு

முதலில் அதன்
விளைவைப் பற்றி விளக்க வேண்டும்
பின்னரதனை அழிக்கவேண்டும்
அப்போது தான்
சரிபடும் தேகமும், தேசமும்!


இருப்பு
மடக்கிய குடையுடன்
பேசியபடியடைந்தோம்
மரத்தடியை
மழை
இப்போது தூறலாய்.


யெஸ்.பாலபாரதி

kuilbala@gmail.com

Series Navigation

author

யெஸ்.பாலபாரதி

யெஸ்.பாலபாரதி

Similar Posts