தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

தீபச்செல்வன்


சிறைச்சாலை அல்லது அகதிமுகாம் ஒன்றிலிருந்து….
——————————————-

உனக்கு கடிதம் எழுதும்
என் பேனாவுக்கு பக்கத்தில்

எல்லோரும் அழுதபடி

இருக்கிறார்கள்.

நாங்கள் தங்கியிருப்பது

மாணவ விடுதியல்ல

சிறைச்சாலை அல்லது

அகதிமுகாமாக

இருக்கவேண்டும்.

இங்கிருக்கும்

சில சகோதரர்களின்

உறவுகள் அங்கு

விமானங்களால்

பலியெடுக்கப்பட்டதாக

அழுதுகொண்டிருக்கிறார்கள்

யாருக்கும் யாரும்

ஆறுதல்சொல்ல முடியாது

மூலைகளில்

வைக்கப்பட்டிருக்கிறோம்.

நேற்று முன்னைய தினம்

எங்களோடிருந்த

மாணவர்கள் இருவர்

சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள்

எங்களால் அவர்களுக்காக

சத்தமிட்டு அழக்கூட முடியவில்லை.

அகதி முகாமாயிருக்கும்

எங்கள் விடுதிமீது

கைக்குண்டு தாக்குதலும்

நடத்தப்பட்டது

சிலர் வைத்தியசாலையில்

மருந்துப்பொருட்கள் இன்றியும்

அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் தங்கியிருக்கும்

மாணவ அகதிமுகாமிற்குள்

அச்சுறுத்தும்படி

ஆயுதங்களுடன் புகுந்து

சோதனையிடப்பட்டது

முகாம்களை தகர்ப்பதுபோல

முற்றுகையிடப்பட்ட

நாளின் அதிர்ச்சியில்

எலலோரும் படுகொலை செய்யப்பட்ட

புத்தங்களாக பரவி இருக்கிறோம்.

எங்களில் சிலரை காணவில்லை

ஊரடங்க அமுலில் சிலர்

காணாமல் போகிறோம்

ஊரடங்கு அமுலற்ற போது

பலியெடுக்கப்படுகிறோம்

எல்லோரும் வேண்டுமளவுக்கு

கௌரவமாக வருத்தப்படுகிறோம்.

எவ்வளவு வலிமையாயிருந்த

எங்கள் குரலின்நாடி

துப்பாக்கிகளின் முற்றுகையிலும்

பச்சை உடைகளின் நிழலிலும்

அன்றைக்கு

ஒடுங்கித்தான் போனது

அவர்களது துப்பாக்கிகளும்

வீடியோக்களும்

எங்கள் முகங்களை

பதிவுசெய்தபோது

உன் முகமும் அழைப்பும்

அவசரமாகவே ஞாபகமானது.



ஏ-9 வீதி – வண்டிகள் புறப்பட்டுவிட்டன

——————————————-

நமது நகரத்தை சூழ்ந்திருந்த

எல்லாவண்டிகளும் புறப்பட்டுவிட்டன

புனரமைக்கப்பட்ட வீதி

மீண்டும் தனித்திருக்கிறது

எல்லாப்பயணங்களும் முடங்கிவிட்டன

நம்மிடம் இப்பொழுது

ஒரு பயங்கரஅமைதியும்

குருரகலவரமும் திணிக்கப்பட்டிருக்கிறது

வெள்ளையடித்து பயணிக்கப்பட்ட

இந்த வீதியை சிதைப்பது பற்றி

யாரிடம் முறையிடுவது?

அல்லது எப்படி தடுத்து நிறுத்துவது?

குருதியால் பெறப்பட்ட

சிவப்பு வீதியின் வரலாற்றை

வெள்ளைத்தேரணங்கள்

பிரதிபலிக்காமலே போய்விட்டன

வீதி கிழிந்து கிடக்கிறது

இது எனது வீதி

எனது வீட்டிற்கு பிரதானமானது

எனக்காக நீளுகிறது

இதற்காக நம்மில் பலர்

குருதி சிந்தியிருக்கிறார்கள்

உயிரை புதைத்திருக்கிறார்கள்

இப்பொழுது இந்த வீதி

பசியின் வரலாறாகவும்

நோயின் தரிப்பிடமாகவும்

உயிர்களை பறிகொடுக்கிறது

நிழலுக்காக முளைத்த

பனைமரங்களின் கனவுகள்

தின்னப்;படுகிற முகாமாகிவிட்டது

பனைமரங்ளை தரியாதீர்

என்ற மூத்தோரரின் குரல்கள் கேட்கின்றன

எத்தனை பனை மரங்கள்

காயப்பட்டிருக்கின்றன

எத்தனை பனைமரங்கள்

அழிந்து விட்டன

எதிர்கால பனைமரங்களுக்கான

விதைகளும் நாற்றுக்களும்

எங்கிருக்கின்றன?

வந்த வண்டிகள் எதையோ

ஏற்றி விட்டு திரும்பி போகின்றன

எங்கள் வண்டிகள் எதுவும்

எரிபொருள் இன்றி நகருவதில்லை

வெள்ளைப்போர் நம்மை சூழ்கிறது

எமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்?

எமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்?

எமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?

எமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்?

எமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?



மரணத்தோடு விளையாடிய குழந்தை

——————————————-

உனது ஒளிமிகுந்த கவிதைகளிடம்

அவர்கள் முழுமையாக

தோற்றுப் போனார்கள்

இருளை கொடூர முகத்தில்

அப்பிக் கொண்ட அவர்கள்

வலிமை மிகுந்த

உனது குரலிடம்

சணைடைந்து போனார்கள்.

விழித்துக் கிடந்த

உனது சுதந்திரத்தின்

குழந்தை மீது

கூரிய கத்தியை வைத்து

குரலை ரசித்துவிட்டு

சிரித்தபடி போகிறார்கள்.

நீ சுமந்து வந்த

தேன் நிரம்பிய மண்பானை

உடைந்து போனதாய்

அவர்களுக்குள்

திருப்தி தலைதூக்க

வீதியை இருட்டாக்கி

ஓடிக்கொண்டிருக்கிறார்கள்;.

இருப்பினும் உனது

எல்லா கவிதைகளும்

விழிகளில்

சூரியனை கொண்டு

பிரகாசிக்கின்றன

உனது எண்ணங்கள்

கடலிலும் வெளியிலும் புறப்படுகிறது.

நீ வாழ்ந்து வந்த

சோலைகளின் மீதும்

அவர்களின் கத்திகள் பதிந்தன

நீ வளர்த்த மரங்களின் மீதும்

அவர்களின் துப்பாக்கிகள்

பதிந்தன

உன்னை தூக்கிக்கொண்டு

கருகிய வனம் ஒன்றிற்குள்

போகச் சொன்னார்கள்.

நீ கொண்டாடிய சிரிப்பை பலியெடுக்க

பின் தொடர்ந்து வந்தார்கள்

நீ எதிர்த்த பயங்கரத்தை

உன் மீதே

பிரயோகிக்க திரிந்தார்கள்.

எப்பொழுதும் போலவே

உனது வானம்

உனது நிறத்தை அணிந்திருக்கிறது

எப்பொழுதும் போலவே

உனதுவழி உனது வெளிச்சத்தில்

மிகுந்திருக்கிறது.

இன்னும்

உனது வார்த்தைகள்

உனது இசையால் நிறைந்திருக்கிறன்றன

உனது கேள்வியும் போராட்டமும்

அதிகாரங்களுக்கு முன்னால்

முண்டியடிக்கிறது.

ஒரு குழந்தையை

படுக்ககையின் மீது

படுகொலை செய்து விட்டு

எப்பொழுதும் விடுதலைக்காய்

அதிகாரத்தை எதிர்த்து

குரலிடும் அதன் ஒளிமிகுந்த வார்த்தைகளை

எடுத்துப் போகிறார்கள்….


சுவரொட்டிகளின் முகங்கள்

——————————————-

என் அப்பாவின்

குருதியில் எழுதப்பட்ட

சுவரொட்டிகள்

இன்று காலை பரவலாக

ஒட்டப்பட்டிருக்கின்றன.

நேற்று அப்பாவின்

கண்களுக்கு

சில சுவரொட்டிகள்

காண்பிக்கப்பட்டன.

அவைள் குறித்த

அப்பாவின் ஆதங்கமும்

கடுமையான குரலும்

நேற்றைய இரவோடு

நசுக்கி சந்திகளில்

ஒட்டப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கான

புதிய சுவரொட்டிகளாய்.

அப்பாவின் பொதுமைப்பட்ட

குரலையும் முகத்தையும்

காயப்பட்டபடி

இப்போது இந்த

சுவரொட்டிளில் பார்க்கிறேன்.

அப்பாவின் காயாத குருதி

மௌனித்து திகைப்பதும்

பேசத்திறனற்று அழுவதுமாய்

கசப்பைக் காட்டுகிறது

தெருவில் போகும்

முகங்களைப் பார்;த்து.

அப்பாவின் குருதியிலான

சுவரொட்டிகளில்

பிசாசுகளே ஊரை

காத்து ஆழ்வதாக

பிசாசுகளே எழுதியிருக்கின்றன.

பிசாசுகள் ஊரை

காப்பதன் விசித்திரமும்;

நசுக்கப்பட்ட குரல்களின்

முகங்களும் சந்திகளில்

அப்பாவோடு சேர்க்கப்பட்டிருக்கும்

இதர சுவரொட்டிகளிலும் தெரிகின்றன.

அவை நாளுக்கு நாள்

அதிகரிக்க வெற்றிடங்களும்

விடப்பட்டிருக்pன்றன.

நாளை அதிகாலையில்

இதே சந்தியில்

எனது குருதியாலும்

சுவரொட்டிகள் எழுதப்பட்டு

ஒட்டப்படும்.

ஊருக்கான புதிய பாதுகாப்பு விதிகளின்

எனது முகமும் கீறியபடி.


தீபச்செல்வன்-ஈழத்திலிருந்து.

deebachelvan@gmail.com

Series Navigation

author

தீபச்செல்வன்

தீபச்செல்வன்

Similar Posts