அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – படக்கவிதைப் பிரிவு

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


நடுவர்கள்:
ஆசிப் மீரான், துபாய்; யெஸ். பாலபாரதி, சென்னை; மற்றும் இன்னொருவர்

படக்கவிதை – பார்க்கச்சுவை – கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது

*

முதல் பரிசுக்குரிய படக்கவிதை

“ஒரு மனைவியின் விடைபெறல்”

போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்

நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்

திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயாணம்
புரியவே இல்லை எனக்கு

அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை…
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்

எவ்வளவு முயன்றும் – உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா

வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து…!

– மேரித் தங்கம்
சென்னை

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

இரண்டாம் பரிசுக்குரிய படக்கவிதை

“குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்”

குடம் தண்ணீருக்கு ஒரு
குழந்தை காவலா?

பள்ளிக்கூடம் போகாமலே
பருவங்கள் கரைந்தும்
இழப்பு கொஞ்சமும் உறுத்தாமல்
இயல்பாய் சிரிக்குது பாருங்கள்

இப்பொழுதே சிரித்துக் கொள்
என் இனிய செல்லமே
பத்திரப் படுத்திக் கொள்
பாதுகாப்பாய் உன் தண்ணீரையும்
இனி நீ வளரும் நாட்களில்
உன் செம்பு நீரும் சிரிப்பும்
திருடு போய் விடலாம்

மூன்று பக்கமும்
தண்ணீர் சூழ்ந்திருந்தும்
பருக ஒருவாய்
நீரும் கிடைக்காமல் அலைகிறது
ஒரு பெருங் கூட்டம்

ஆற்று நீரெல்லாம்
ஆலைக் கழிவுகளால்
அமிலமாகிப் போனது;
ஊற்றுப் படுகைகளுக் கெல்லாம்
ஊறு நேர்ந்து
உலர்ந்து வெகு காலமாயிற்று.;
காற்றும் விஷமாவது
கவலை அளிக்கிறது கண்ணே

வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில்
பறிபோய்க் கொண்டிருக்கிறது
வறியவர்களின் நீரும் நிலமும்
ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி
குளிர் பானமென்று
கூவிக்கூவி விற்கிறார்கள்

தங்கத்தை விடவும்
தண்ணீருக்கு விலை ஏறுகிறது
நடக்கிறது நல்லபடி
உலகெங்கும் நீர் வியாபாரம்

ஆருடம் சொல்கிறார்கள்
அடுத்த உலக மகா யுத்தம்
நீருக்காக இருக்குமென்று
தடுக்க முடியாமல் போகலாம்
தக்க வைத்துக் கொள் தங்கமே
உன் சிரிப்பையாவது அதுவரை

– சோ. சுப்புராஜ்
துபாய்

(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய படக்கவிதை

“தொட்டுவிடு”

பூமி
எத்தனை முறை
மரண தண்டனை வழங்கினாலும்
அழியாமல் இருக்கும்
மனித விதையை யார் போட்டது

அவன்
தொட்டுத்தொட்டுத் தொடங்கிய
தொடர் ஓட்டத்தை யார் தொடங்கியது

தொடுவதுதான் வேற்றுமையை
விடுவதின் தொடக்கம் என்பதால்
தொடுவோம்

தவறுகளை
சுட்டிக்காட்டுவதற்குத்தான்
விரல்கள் என்று யார் சொன்னது
உறவுகளை ஒட்டிப் பார்ப்பதற்கும்
தொடுவதுதானே தொடக்கம்

தீண்டாமையைக் கொளுத்தும்
தீக்குச்சிகளாய் விரல்கள் மாறட்டும்
ஏனென்றால்
தொடுவது இருக்கும் வரைதான்
இந்த மண்ணில்
மனித நேயம் இருக்கும் – அதனால்
தொடுவோம்!

– மு. பாண்டியன்
நெய்வேலி

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய படக்கவிதை

வறண்ட மார்புடன்
வானம் பார்த்த பூமி
ஏங்கிக்கிடக்கிறது
பானையிலிருந்து சிந்தும்
ஒரு துளி நீருக்கு!

– கே.வி. உஷா
சென்னை

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts