கவிதை

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

மு.பழநிக்குமார்


இரவு எட்டைத் தாண்டிய
பரபரப்பில்
கால்கள் முளைத்த அவசரமாய்
அதுவும் கொலுசுகள் அணிந்த அவசரமாய்
அலுவலகம் விட்டு விரைவாய்

படிகளில் இறங்கி சாலை கடந்து
சந்து திரும்பி பேருந்து நிலையம் அடைவாய்

பூப்போன்ற உன்னை
தினமும் சுமந்து போகும்
அந்த பச்சை மினி பூக்கூடைக்குள்
புழுங்கிய ரோஜாவாய் ஏறி அமர்வாய்

ஜன்னலுக்கு வெளியே உன் அழகும்
ஜன்னலுக்கு உள்ளே உன் சோர்வும்
வழிகின்ற காட்சி காணாமல்
உனக்கான நிறுத்தத்திற்கு
மணிபார்த்துக்கொண்டே வருவாய்

விளிம்பில் சரியாய்க் கழுவினோமா;
மதிய வேளைச் சாப்பாட்டுப் பாத்திரம்
நினைவுகளில் பிசுபிசுக்கையில்
பூக்கூடை குலுங்கி நிற்கும்
உனக்கான நிறுத்தம்

படிகளின் இடைஞ்சலில் இறங்கி
மின்விளக்குகள் அணைந்த வீதியில்
விரைந்து நடப்பாய்
உனக்கு முன்பே
அவசரமான அவசரத்தில் கிளம்பி
உனது தெருமுனையில் வந்து
தேநீர் பருகிக்கொண்டிருக்கும்
எனது அநாகரிகத்தை அலட்சியப் படுத்தியவாறே…

மு.பழநிக்குமார்.


pazhanitta@gmail.com

Series Navigation

author

மு.பழநிக்குமார்

மு.பழநிக்குமார்

Similar Posts