பெரியபுராணம் – 117 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

பா.சத்தியமோகன்


3354.

உமையாகிய பார்வதி அம்மையுடன் கூடி

நிலைபெற அமர்ந்து அருள்கிற

திருவொற்றியூர் சிவபெருமானின்

உயர்ந்த தவத்தில் பற்று மிக்க திருத்தொண்டர்கள்

பரந்த கடல் போல வந்து நெருங்கினர்

சுற்றிலும் நெருங்கித் துதித்தனர் தொழுதனர்

நம்பி ஆரூரர் அக்கூட்டத்தை வணங்கி

இளமை உடைய காளை உடைய சிவபெருமானின்

கோயில் வாசலை அடைந்தார்.

3355.

வானை அளக்கும் கோபுரத்தை

மகிழ்ந்து பணிந்தார்

உள்ளே புகுந்தார்

வளர் கூனல் இள வெண்பிறைச்சடையராகிய

சிவபெருமானின் கோயிலை வலமாகச் சுற்றி வந்தார்

இறைவரின் திருமுன்பு நின்று

ஊனும் உயிரும் கரைந்து உருகும்படி

தலை உச்சியில் குவித்த கையுடன்

பெரு விருப்புடன்

நிலத்தில் பொருந்த வீழ்ந்து வணங்கினார்

பேரன்பு மிக்க ஆரூரர்.

3356.

ஏட்டில் எழுதப்பட்ட வரியில்

“ஒற்றியூர் நீங்கலாக” என்பதைப்புகுத்தியே எழுதும்

எழுத்தறியும் பெருமானின்

கண் பொருந்திய நெற்றியுடைய இறைவரின்

அழகிய தாமரை மலரடியில்

கூட்டுகின்ற உணர்வு கொண்டார்

குற்றமில்லாத அமுத இசை கூடியது

“பாட்டும் பாடிப்பரவி” எனும் திருப்பதிகம் பாடத்
தொடங்கினார்.

3357.

பதிகம் பாடி

தமது அறிவு

பரவசமாகிற பரிவினைப் பற்றிக்கொள்ள

வெளியே வந்தார்

பேரன்பு நிறைந்த அன்பர்கள் பலர் போற்ற

திருவொற்றியூரில் கூடி நின்ற எல்லாக்காலங்களிலும்

நான்முகனும் திருமாலும் அறிவதற்கு அரிதான

இறைவரின் திருவடிகளை வழிபட்டார் ஆரூரர்.

3358.

இத்தகைய நிலைமையுடன்

நம்பி ஆரூரர் இங்கிருந்தார்

இங்கு வரும் முன்பே

இவருக்காக

அழகிய

குளிர்ந்த

கயிலை மலை விட்டு நீங்கி

அருள் ஆணையால் அநிந்தையார்

பூமி மேல் அவதரித்தார்

வளர்ந்தார்

பின்பு

இந்நாளில்

வன்தொண்டரின்

மணம் மிகுந்த தோள் சேர்ந்த வரலாற்றினைப்

பலர் அறிய கூறத் தொடங்குகிறோம்.

3359.

நாலாம் குலமான

வேளாளளர் குலத்தில்

பெருகி வரும் நன்மைகள் உடையவர்கள் வாழ்கின்ற

“ஞாயிறு” எனும் பகுதியில்

மேன்மை மிகு ஒழுக்கத்துடன்

வேளாண்மையில் சிறந்து வாழ்ந்த

ஞாயிறு கிழவர் எனும் சான்றோர்க்கு

அன்பு தரும் மகளாய்ப் பிறந்தார் அநிந்தையார்.

ஆலகாலம் எனும் நஞ்சு அருந்தி

கழுத்தில் கறை உடைய சிவனாரின் அருளால்

பூமியில் தோன்றி அருளினார் அநிந்தையார்.

3360.

மலையரசன் மகளான உமை அம்மையின்

தாமரை போன்ற பாதம் மறவாத

அன்புடைய நெறியில் வாழ்ந்தார்

முன்னைய உணர்வுகள் வந்தன

இயல்பாக அதனை அறிந்தார்

சங்கிலியார் என்ற பெயருடன் வளர்ந்தார்

வேல் போன்ற கண்களுடைய

சிறுமகளிர்க் கூட்டத்துடன் விளையாட்டுகள்

அந்தந்த பருவத்திற்கு ஏற்ப நடந்தன.

3361.

சிறப்புமிகு பருவம் நிரம்பும் நாளில்

சிறப்புடைய செயல்களைச் செய்து

தெய்வத்தன்மைகளுடன்

உலகில் யாவரும் அதிசயிக்கும் விதமாய்

வளர்ந்து வந்தார் சங்கிலி அம்மையார்

கச்சு அணியுமாறு வளர்கின்ற கொங்கைகள்

இடையை வருத்துமாறு சார்ந்த பருவத்தில்

அவரது தந்தையார் உரைத்ததாவது : –

3362.

“நமது மகளின்

வடிவமும் குணமும்

உலகில் உள்ளவர்களுக்குப் பொருந்துவதைவிட

மேம்பட்டு உள்ளதை

என்னவென்று அறியோம்!

காப்பு அணிந்து

திருமணம் காணும் காலம் இவளுக்கு வந்துவிட்டது”

“நமக்குப் பொருந்தும் இடமாகப்பார்த்து

திருமணம் செய்து கொடுப்பீராக”

என்று மொழிந்தார் சங்கிலியின் தாய்.

3363.

தாயுடன் தந்தையும் பேசுவதைக்கேட்ட சங்கிலியார்

“ இப்பேச்சு என்னிடம் பொருந்தாது

ஈசன் திருவருள் முழுதும் பொருந்தியவர்க்கே

நான் உரியவள்” எனக்கூறி –

“வேறு ஏதேனும் விளையுமோ” என அச்சம் கொண்டு

உணர்வு மயங்கினார்

மூர்ச்சை அடைந்தார்

நிலத்தின் மீது விழுந்தார்

3364,

பக்கத்தில் நின்ற தாயும் தந்தையும் பதைத்தனர்

பரிவுடன் அவரை எடுத்து

வருந்தும் உள்ளத்துடன்

“இவளுக்கு என்ன ஆனதோ” எனக்கலங்கினர்

குளிர்ந்த மணமுடைய

பனிநீர் தெளித்துத் தடவிவிட்டனர்

மயக்கம் நீங்கியது

வளைந்த வில் பொன்ற

நல்ல நெற்றி உடைய அவரை

“உனக்கு என்ன நேர்ந்தது” என வினவினர்

3365.

மேற்கண்டவாறு

பெற்றவர்கள் வினவியதும்

தன் மனதில் உள்ளதை சங்கிலியார்

மறைக்காமல் சொன்னார்:

“ இன்று என்னைப்பற்றி நீங்கள் பேசியவை

என் இயல்புக்குப் பொருந்தாது

வெற்றி பொருந்திய

காளை உடைய சிவபெருமானின்

திருவருள் பெற்ற ஒருவருக்கே உரியவள் நான்

இனிமேல்

நான் திருவொற்றியூர் சென்று

சிவபெருமானின் அருள் வழி செல்வேன்”

3366.

அந்த மாற்றத்தைக் கேட்ட தாயும் தந்தையும்

அயர்ந்தனர்

பயந்தனர்

அதிசயித்தனர்

வியப்பு கொண்ட அதே உள்ளத்துடன்

மகளின் மாற்றத்தை

பிறரிடம் கூறாமல் மறைத்து வந்தனர்

இவ்வாறான காலத்தில்

இவர்களோடு குலத்தொடர்பு கொண்ட ஒருவன்

நிலைமை அறியாமல்

சங்கிலியாரை மனதால் விரும்பிவிட்டான்

மணம் பேசுவதற்காக

சிலரை அனுப்பினான்

அவர்கள் சென்றனர்

பெண் கேட்டனர்

3367.

சங்கிலியாரைப் பெண் கேட்டனர்

மகளின் தன்மையை எடுத்துக்கூற முடியாமல்

மனம் நோகாமல்மொழிந்து

அனுப்பி வைத்தார் தந்தை

திருமணம் பேச வந்தவர்கள்

அனுப்பிய நபரிடம்

சென்று சேர்வதற்குமுன்பே இறந்தார்கள்

தீமை இழைத்ததால் அனுப்பியவனும் இறந்தான்

சங்கிலியாரைப் பெற்றவர்களோ

மனம் மருண்டனர்

மயக்கம் அடைந்தனர்

3368.

“ பெண்ணான சங்கிலியாரைப்பற்றி

பேசத் தகாத செயலை

உயிர் வாழவேண்டும் என நினைவு கொண்டவர்கள்

பேச மாட்டார்கள்” என

உலகம் அறியும்படி செய்தது அந்நிகழ்ச்சி

விதிபோல நிகழ்ந்தது

நைந்து வருந்திய உள்ளத்துடன்

சங்கிலியார் சொல்லுக்கு உடன்பட்டனர் பெற்றோர்கள்.

சங்கிலியார் பற்றி

தம் குலப்பெரியோர்களுக்கு

உள்ளபடி

உண்மையைச்சொல்லினர்

3369.

“தெய்வத்தன்மை மிக்க

எங்கள் பெண்ணின் செய்கையை

உணர்வுடையோர் பேசவும் அஞ்சுகின்றனர்

தம்மால் வணங்கப்படும் ஈசரின் திறம் தவிர

வேறு சொற்கள் பேசத்தெரியாது அவளுக்கு;

இவள் குணங்கள் இவை மட்டுமே;

இனி

இவள் கேட்டபடியே

திருவொற்றியூரில்

படத்தினையுடைய

பாம்பினைச்சூடிய

முடியார் சிவபெருமானிடம்

இவளைக் கொண்டு செல்வோம்”

எனச் சொல்லிக்கொண்டு சென்றனர்

3370.

பண் இசைபோன்றமொழியினை உடைய

சங்கிலியாரை நோக்கி

பெற்றோரும் உறவினரும் கூறியதாவது:

“ தெளிந்த கங்கை சூடிய முடியாரின்

திருவொற்றியூர் செல்க

இனிமேல்

செல்ல வேண்டிய கதி –

திருநெற்றியில் கண்கள் உடைய

இறைவரின் திருவருளே! என

பொய்கைகள் சூழ்ந்த

அந்தத் தலத்தில் தங்கித்

தவம் புரிக”

3371.

பெற்ற தந்தையும்

சுற்றத்தாரும்

பிறைசேர்முடியார் சிவபெருமான் விதித்த அருளால்

வேறுசெயல் செய்யத்தோன்றாமல்

மங்கை சங்கிலியாரிடம் சொல்லியவண்ணம்

ஏற்பாடு செய்யத்துணிந்தனர்

திரண்ட செல்வத்துடன்

திரிபுரங்கள் அழித்த வில்லாளியான

சிவபெருமானின் திருவொற்றியூருக்கு

சங்கிலியாரை அழைத்துக்கொண்டு சென்றனர்

3372.

சென்னியில்

வளர் வெண்பிறை அணிந்த

சிவனாரின் கோவிலுள் புகுந்து

நெருங்கிய சுற்றத்தோடு பணிந்தார்

பழமை மிகு

அந்தப் பதியினருக்குத் தகவல் தெரிவித்தார்கள்

அவர்களது ஒத்துழைப்பினால்

கன்னிமாடம் ஒன்றை

காவலுடன் கட்டி அமைத்தனர்

ஆதரவுக்கு உரிய செல்வங்களும்

தக்கபடி வகுத்து வைத்தனர்

சங்கிலி அருகில் வந்தார்

மகளின் பாதம் வணங்கி

தந்தையார் கூறியதாவது:-

3373.

“ நாங்கள்

உமக்கு வெண்டிய பணிகளைச் செய்து கொண்டிருக்க

ஈசனுக்கேற்ற பணிகளையே

நீவீர் விரும்பிச்செய்து

கன்னிமாடத்தில் தங்கியிருப்பீராக” என்றார்

தாங்க முடியாதபடி

தந்தையின் கண்கள் நீர்த்தாரை வார்த்தன

பொறுக்கமுடியாமல்

ஏங்கும் சுற்றத்தோடு

கூடி வணங்கிவிட்டு

மதில்பொருந்திய

தமது ஊராகிய

“ஞாயிற்றிடம்” எனும் ஊருக்குச் சென்றார் தந்தையார்

3374.

பக்தியெனும் காதல்புரிந்து

தவம் புரியும் கன்னியாகிய சங்கிலியார்

அந்தக்கன்னிமாடத்தில் தங்கியிருந்தார்

பூதங்களின் தலைவனான சிவபெருமான் கோவிலில்

வழிபாட்டுக்குரிய காலங்கள்தோறும்

புகுந்து வணங்கி

நீதிமரபுமுறை தவறாமல்

தமக்கு நேர்ந்த திருப்பணியைச் செய்வதற்காக

குளிர்ந்த மலர்களுடைய

பூ மண்டபத்தின்

ஒரு பாகம் சென்று –

3375.

முன்நாளில் –

கயிலை மலையில் செய்யும்

திருப்பணியின் தன்மையோடு

மனதில்

அதே உணர்வு தலைப்பட்டு ஓங்க

குலவும் மென்கொடிபோன்ற சங்கிலி அம்மையார்

வண்டுகள் மொய்க்கும் மலர்மாலைகளை

காலங்களுக்கு ஏற்ப

அண்டர்பெருமானுக்கு

திருமுடியில் சாத்தி

வணங்கிவரும் நாட்களில் –

3376.

அந்திவண்ணம் கொண்ட சிவபெருமான் திருவருளால்

தோன்றிய ஆருரர்சுந்தரர்

மணமுடைய மாலைசூடிய சங்கிலியாரை

காதல்மணம் பொருந்தவந்த பருவம் இது

ஆதலால்

இறைவர் வகுத்த தன்மை வழுவாத

முந்தைய விதிப்படி

தமது திருமாளிகையிலிருந்து

கோயில் புகுந்தார் சுந்தரர்

3377.

தேவர்களின் தலைவனான சிவபெருமான்

அந்தணராக வந்து

ஆளப்பட்ட நம்பி ஆரூரர்

அங்கணராகிய சிவபெருமானை

தொன்மை மிகு முறையால்

பணிந்து பாடினார் துதித்தார்

வெளியே வந்தார்

தொண்டுசெய்யும் அடியார்களின்

திருத்தொழில்கள் கண்டார்

வணங்கினார்

தாமரைப்பொய்கை போன்ற

திருமண்டபத்தில் புகுந்தார்

(அங்கணர்:

அங்கத்தில் கண்கொண்ட
சிவபெருமான் )

3378.

அன்பு எனும் நார் எடுத்து

அஞ்செழுத்தினை நெஞ்சு தொடுக்க

மனம் –

மலர்களைத் தொடுக்க

எலும்பு உள்ளே உருக

அடியார்களைத் தொழுது நீங்கினார் சுந்தரர்

வேறொரு இடத்தில்

முன்போலவே

திரைவிலக்கி

முதல்வருக்குச் சாத்தும் மாலைகளைத் தொடுத்துவந்து

மின்னல்போல மறையும் சங்கிலியாரை

விதியால் பார்த்து அருளினார் சுந்தரர்

3379.

கோர்க்கப்படாத முத்துபோன்ற

வண்டுகள் மொய்க்காத

மென் அரும்பு போன்ற

கொடிபோன்ற சங்கிலியாருக்கு

திருத்தொண்டராகிய சுந்தரரைக் கண்டபோது

சிந்தையினை

நிறைவால் காக்க முடியாமல் போனது

சுந்தரர்பால்

போய் விழுந்தது மனம் !

காமனார் விசிய பூ அம்புகள் வந்துற்றன

தாங்க இயலாதவராகி வெளியே வந்தார்

3380.

“ இன்னதான் ! இதுதான் !” என இங்கு அறிதல்

அரிதாக இருக்கின்றது

பொன்னும் மணிகளும் கூடிமலர்ந்த ஒளி அமுதுடன்

புதிய சந்திரனின்

குளிர்ச்சியைக்குழைத்துச் சமைத்த

மின்னும் கொடி போன்ற பெண் என்னை

உள்ளம் திரியுமாறு செய்தாளே –

அவள் யார்” என்று வினவினார்

3381.

சுந்தரர்

அவ்வாறு வினவியதும்

“அவர்தாம் சங்கிலியார் என்ற நங்கை !

பெருகும் தவத்தால்

ஈசர் பணி பேணும் கன்னி!” என உரைத்தனர்

உடனே சுந்தரர் மனம் மருண்டது

“இரு பெண்களால்

இப்பிறவியை இறைவர் எனக்குக் கூட்டுவித்தார்

முன்பு பரவை ! அவர்களுள் ஒருத்தி

இவள் மற்றவள் போலும்”

3382.

மின்னல் போன்ற சடையுடைய

இறைவருக்கே ஆளாகி வாழும் விதிப்படி

வாழும் என்னை வருத்தி

இறைவர் திருவருளால் வரும் பேற்றினை

நான் அடைய இயலாமல் தடுத்து

என் கரிய உயிரையும்

அழகிய மலர்களையும்

ஒரே நேரத்தில் கட்டிவிட்ட இவளை

கட்டுகின்ற இவளை

பொன் போன்ற

நெருங்கிய கொன்றை மாலை சூடிய

சிவனாரிடம் பெறுவேன்” என கோயிலுள் புகுந்தார்.

3383.

தாமரை மேலிருக்கும் நான்முகனும்

நெடிய திருமாலும்

வானிலும் நிலத்திலும் அகழ்ந்துபார்த்தும்

அறிய இயலாத

பிறை நிலவு மலர்கின்ற திருவடியும்

கழலும் உடைய இறைவரை

உலகமெல்லாம்

தாம் உடையராக இருந்தும்

ஒற்றியூர் அமர்ந்து விளங்கும்

சோதிப் பரம்பொருளான சிவபெருமானை

வணங்கி நின்று துதித்தார் சுந்தரர்.

3384.

மங்கை ஒருபால் மகிழ்ந்து கொண்டதோடு

அழகிய நீண்ட முடியில்

கங்கை எனும் மங்கையையும்

மறைத்து வைத்து அருளும் காதல் உடையவரே !

இங்கு

உமக்காக

மாலையைத் தொடுத்துக் கட்டும்போது

கட்டுடன் நின்ற என் உள்ளத்தை அவிழ்த்து

திங்கள் போன்ற முகமுடைய சங்கிலியை

அடியேனான எனக்குத் தந்தருளி

என் வருத்தத்தைப் போக்குவீர்” எனக்கூறி –

–இறையருளால் தொடரும்


pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

author

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்

Similar Posts