சுஜாதா பட் கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

தமிழாக்கம் : ஆர். அபிலாஷ்



ஷிரோத்கர் தையல்

ஷிரோத்கர் தையலை கண்டுபிடித்தவரின்
மகன் நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்
என் அப்பாவுடன் பணி புரிந்தார்
திசு வளர்ப்பு முறை கற்றவாறே

எதோ பயன்படப் போகிறது என்பது போல்
இந்த சிறு விஷயத்தை நினைத்துக் கொண்டேன்
— தகுந்த காலம் வரும்வரை
உன்னை என்னுள் பத்திரமாய் வைத்திருக்க —
ஷிரோத்கர் தையலை
என் கருவறை வாய்க்குள் தைக்கப் போகும்
மருத்துவர்களை எதிர்பார்த்து
ஆஸ்பத்திரி கட்டிலில் கிடக்கையில்

என் அம்மாவின் அம்மாவுக்கு

கற்பனை செய்து பாருங்கள்
காந்தியடிகளுக்கு அது இருந்திருந்தால் — ஒருவேளை அந்த தவறான் குரோமோசோம் —
சர்க்கரையை ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு செய்ய இயலாமை —
இத்தனை உண்ணாவிரதங்களையும்
ஒருக்காலும் தாங்கியிருக்க மாட்டார் —
உன்னைப் போல்
மௌனமாய் கோமாவுக்குள் சென்றிருப்பார்

மராத்தியிலிருந்து ஒரு ஞாபகம்

இந்த ஞாபகம்
தண்ணீரின் ஓசையிலிருந்து ஆரம்பிக்கிறது
விட்டுப் போகாத ஞாபகம் இது
இஞ்ஞாபகம் மராத்தியிலிருந்து வருகிறது
நள்ளிரவில்
மூன்று வயது சிறுமியின் தாகத்திலிருந்து
ஆரம்பிக்கிறது இஞ்ஞாபகம்

அங்கு ஓடும் நீரின் ஓசை
– மென்மையாய் – ‘ஸ்…’ எனும் சீற்றொலி போல்

அம்மாவருகில் தம்பிப் பாப்பாவின் ஆர்ப்பாட்ட உறக்கம் —
தண்ணீர் வேண்டுகிறாள் சிறுமி

அப்பா அறைக்கு வெளியே செல்கிறார்
ஆனால் திரும்பவில்லை —
கொட்ட விழித்துக் கிடக்கும்
மூன்று வயது சிறுமியின் பொறுமையின்மை —

அப்பாவைத் தேடி
வாசல் வரை நடந்தவள்
பின் அங்கேயே நின்று விட்டேன்
கையில் கிண்ணம் எந்தியவாறு அவர்
சமையலறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்
ஆனால் என்னை பொறுமை கொள்ளவும்
ஸ்தம்பித்துப் போகவும் செய்தது
எங்கள் நடுவே
தரையில் கிடந்த பாம்புதான் — அது ரொம்பவே இடத்தை ஆக்கிரமித்தது —
அது முடிவற்றுத் தோன்றியது —
எறத்தாழ மரங்களிடையே தெரியும் நிலவொளி போன்ற
வெள்ளிய பச்சை —
அப்பா அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிய போது
அது ரத்தம் சொரிந்து கொண்டே இருந்தது — அதன் பிளந்த தோலிலிருந்து
பெருகி ஓடிய செம்மையை ஒருபோதும் மறக்க முடிந்தததில்லை

பல வருடங்களுக்குப் பிறகு
அதைப் பற்றி பேசுகிறோம்
ஒரே சாட்சிகளான நானும் அப்பாவும்
சமையலறைக்குள் அது எவ்வாறு பாய்ந்தது என்று விவரிக்கிறார் —
அதை விரட்ட வேண்டியிருந்தது வருத்தமளிக்கிறது
ஆனால் சமையலறைக்குள் அது ஒளிந்து விடவும் கூடாதே —
‘அதைக் கொல்ல முடிந்தது அதிர்ஷ்டம்தான்’, அவர் சொல்கிறார்
இந்த வருடங்களுக்கு எல்லாம் பிறகு
முதன்முறையாய்
அதைப் பற்றி பேசுகிறோம்
விருப்பமின்றியே
சாகும்வரை அதை ஒரு குச்சியால்
நெடுநேரம் ஓங்கி அடிக்க நேர்ந்ததை
பிறகு முடிவாய் அதன் மேல்
மண்ணெண்ணெய் ஊற்றினார் —
பிறகு தரையை சுத்தம் செய்யும் முன்
அவர் அதை சேகரித்து ஜாடியில் இடுவதைப் பார்த்தேன்

காலையில் அப்போதும் அம்மா உறங்குகையில்
அவர் முகமும் செய்கைகளும் நினைவுள்ளது —
மேலும், நிதானத்துடன் ஆனால் அவசரமாய் விரைந்து
பாம்பைக் கொண்ட ஜாடியைத் தூக்கியவாறு
அவர் வேலைக்காய் ஆராய்ச்சிக் கூடம் சென்றதும்


Series Navigation

author

ஆர். அபிலாஷ்

ஆர். அபிலாஷ்

Similar Posts