புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

புதுவை ஞானம்


xxxi

154 )கடவுள் போல் காட்சி தருவதற்காய்
தேடினான் ஒருவனை அந்த ஓவியன்
எனக்குப் பிறந்தான் என்பதால் அல்ல
என்னுடன் இணையாய்ப் போருக்குச் செல்ல !

155) அங்கே குவிப்பான் ஆதாயங்களை
வென்று வருவாய் என வாழ்த்துவேன் விழைவேன்
குன்றின் உச்சியில் இங்கேயே இப்பொதே
நேருக்கு நேராக மோதட்டும் எதிரியுடன் !

156 )பொன் நிறத்தலையன் வலியவன் வளர்ந்தவன்
பெருங்குடிப் பிறப்பு அவன் இயற்கையிலேயே
எனக்குப் பிறந்தவன் என்பதால் அல்ல
தாய் நாட்டுகாகவே பிறந்தவன் என்பதால் !

157 )வீர மகனே புறப்படு போருக்கு
முன்னம் மரணம் என்னைத்தழுவிடின்
முத்தமிடு எந்தனுக்கு -உன்னைத்தழுவிடின்
இழிமகன் அல்ல சான்றோன் எனக்கேட்ட தாயினும் மகிழ்வேன் !

xxxii –

158 )கருக்கிருட்டு ஒழுங்கையில் நான் உலாப்போகும்
நிசிப் போதில் நிழல் வீழும் நீளமாய்
அண்ணார்ந்து பாக்கையில் ஆங்கோர் மூலையில்
விண் முட்டும் மாதாக் கோயில் மணிகூண்டு !

159 ) அற்புதமானதாய் இருக்குமோ அது ?
சக்தியாய் புனித வெளிப்பாடாய்………
அல்லது ஒரு சடங்குக் கடமையாய்…..
அது என்னை மண்டியிட வைக்கிறதே !

160 )சல சலக்கிறது இரவு திராட்சைக் கொடி மீது
வயிறு நிறையப் புடைக்கிறது புழு
கருத்த சுவர்க்கோழி ரீங்கரிக்கும்
இலையுதிர் காலத்தின் முதல் வரவுக்காய் !

161)ஊமைக்குயில் எழுப்பும் கூதிர் காலை
தலையை உயர்த்தி நான் பார்க்கும் வேளை
சந்தின் முனையில் மணிக்கோபுர ஆலயம்
தோற்றமளிக்கும் ஒரு ஆந்தையைப் போல !

xxxiii –

162 ) தாங்கொணாத் துயரில் தவிக்கிறேன் தாரகைகாள்
செத்துப் போய்விடுவேன் எனவே தோன்றுகிறது
வாழ விரும்புகிறேன் நான் – மங்கை ஒருத்தி என்
வாழ்வில் ஊடுறுவ விரும்புகிறேன் !

163 )தலைக்கவசம் போன்று அவளது தலை அணி
வனப்பாய் வைக்கிறது அழகிய வதனத்தை
ஒளியை எதிரொளிக்கும் அவளது கருங்கூந்தல்
டமாஸ்கஸ் கத்தி போல் தொங்குகிறது தலையின் மேல் !

164 )என்ன நினைக்கிறாய் அவளைப் பற்றி ?
எரிச்சல் படுவார்கள்- பின்னர் வலை வீசுவார்கள்
தசை மூடியிருக்கும் உந்தன் ஆன்மாவோ
நொடித்தே போனது பித்துப் பிடித்து !

165 )என்ன நினைக்கிறாய் இவளைப் பற்றி
சே… அது ஒரு ஈன ஜன்மம் ! அணிவதைப் பார் சிவப்புக் காலணி
உதடு முழுக்க சிவப்புச் சாயம்- முகமோ
வெளுத்துப் பாரித்த வைக்கோல் போல !

166 ) பின்னர் கதறியது துயறுற்ற இதயம்
நாசமாய்ப் போனவளே நாசமாய்ப்- போனவளே!
அதிகம் சபிக்கப்பட்டது இவருள் யாரெனத்
தெரியாதையா எந்தனுக்கு !

xxiv –

167 ) யாருக்குத் துணிச்சல் உண்டு ? நான்
துயரத்தில் உழல்வதாய் வாய் விட்டுச் சொல்ல
இடியும் மின்னலும் முடியும் போது
துயரம் காக்க நேரம் வருமெனக்கு !

168 )எனக்குத் தெரிந்த எல்லாத் துயர்களிலும்
மிகவும் உயர்ந்தது பேசப்படவில்லை
மனிதர்களைப் பிடித்து அடிமையாய் வைப்பதே
படு கேவலமான உலகத்துயரம் !

169 )இன்னும் ஏற வேண்டிய குன்றுகள் எத்தனையோ உள்ளன
உயரமான சிகரங்களில் நான் ஏறியாக வேண்டும்
பின்னர் யோசிப்போம் எனது ஆன்மாவே !
இளமையிலேயே நீ சாக வேண்டும் எனத் திட்டமிட்டது யார் என ?

xxxv –

170 )உனது வாள் எனது இதயத்தில் ஆழமாய்ப் பாய்ந்தால்
என்னவாகிவிடும்?
போனால் போகட்டும்- உனது வாளினைவிட
வலிமையான எனது கவிதைகள் என்னிடம் உண்டு !

171 )வானத்தையே மூடி விடும் எனது சோகம்
கடலையே வற்ற வைக்கும் எனது சோகம்
இருந்த போதிலுமென்ன ? வேதனையென்னும்
சிறகுடன் பிறந்த என் கவிதைகளாறுதல் அளிக்கும் !

172 )சதையின் பயன்கள் மேலோட்டமானவை
சதையைக் கொண்டு ஒருவர் மலரை உருவாக்கலாம்
சதையும் காதலியின் நேசமும் இளமையுமாயின்
சுவர்க்கமும் கிட்டும் ஓர் மதலையும் பிறக்கும் !

173 ) சதையின் பயன்கள் அசிங்கமானவை
சதை கொண்டுதான் உருவாகிறது தேள்
ரோசாவை உதிர வைக்கும் புழுவும்
பயம் காட்டி மிரட்டும் ஆந்தையும் கூட ! ( தேள் :காமத்தின் குறியீடு )

– xxxvii –

174 )இங்கே பார் பெண்ணே எனது இதயத்தை
விசையூட்டு அதனை – உன்னால் முடியுமது
எவ்வளவு விசாலமாய் இருக்கிறதோ இதயம்
அவ்வளவு அதிகமாய் விசையூட்ட வேண்டும் !

175 )நொந்து போன ஆன்மாவுக்கு…….எந்தன்
விந்தை இதயத்தில் , நான் கண்டு கொண்டேன்
காயத்தின் ஆழம் கூடக் கூட
கலையின் வெளிப்பாடும் கூடும் !

xxxviii –
176 ) கொடுங்கோலர்கள் பற்றி ? நல்லது
நிறையவே சொல்வோம் கொடுங்கோலர் பற்றி
அடிமையின் சினமுற்ற கரங்களைக் கொண்டு
சூடு போடு அந்த அவமானத்தின் மீது !

177 ) தவறுகள் பற்றி ? நல்லது
தவறுகள் பற்றி சொல்வோம் நிறையவே
மலைக்குகைகளிலும் இருண்ட முட்டுகளிலும்
என்ன இருக்கிறது ? எல்லாப் பயமும்
கொடுங்கோலர் பற்றியும் தவறுகள் பற்றியும் தான் !

178 )பெண்கள் பற்றி ? பெண்கள் பற்றியா ?
அவர்கள் கடியால் நீ…சாவாயாயினும்- உன்
வாழ்நாள் முழுவதும் பாழானாலும்
அவதூறு பேசாதே பெண்கள் பற்றி !

– xxxix –

179 )இருக்கிறது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வெள்ளை ரோஜா
ஜூலையாயினும் சரி , ஜனவரி ஆயினும் சரி
உண்மையான கரத்தை எனக்கு நீட்டும்
நல்ல நண்பனுக்குத் தர வேண்டும் நான் அந்த ரோஜாவை

180 )தாக்கும் அந்தக் கொடியவனுக்கு – நான்
வாழும் இதயத்தை உடைப்பவனுக்கு
இலையையோ முட்களையோ நான் தர மாட்டேன்
அவனுக்கும் கூட வைத்திருக்கிறேன் ஒரு வெள்ளை ரோஜா !

181 ) எனது நண்பனை வரைகிறான் அந்தக் கலைஞன்
பொன் நிறத்திலும் திடமாகவும் அவனது தேவதைகள்
சுட்டெரிக்கும் சூரியன் ஜொலிக்கிறது சுற்றிலும்
மேகங்களில் சாய்ந்து அவர்கள் தொழும் போது !

182 ) என்னைத் தீட்டு உனது உன்னதப் படைப்பாற்றல் கொண்டு
தேவதைகளின் மென்மையும் அச்சமும் கொண்டு
பரிசளிப்ப உனக்கு இரட்டை அடுக்குச்
சிவப்பு மலர்ச் செண்டு !

183 )அப்போது நான் நினைத்தேன் கிழட்டு சிப்பாய் பற்றி
தன்னை படைத்தவனுடன் நிசப்தமாய் உறங்கும் அவனைப் பற்றி
எனது பரிதாபத்துக்குரிய தந்தையாம் உழைப்பாளி பற்றி
எனது ஏழைத் தந்தையாம் அந்த சிப்பாயின் பெருமை பற்றி !

184 )எனக்கு அந்த படாடோபமான கடிதம் கிடைத்தபோது
பெருமை மிகு கனவானின் கையெழுத்தைக் கண்ட போது
தனிமையான எனக்குரிய நிலவறையை நினைத்தேன்
வெளுப்பையோ ரோசாவையோ அல்ல !

– XLII –

185 )கடலோரமாக அண்மையில் இருந்த
காதலின் விசித்திரக் கடைவீதியில் அலைந்தபோது
தாரகை போல்ஜொலிக்கும் துயர முத்து ஒன்று
அதிர்ஷ்ட வசமாய் அகப்பட்டது ‘அகாருக்கு’ !

186 )நீண்ட நேரம் அணைத்துக் கொண்டாள் மார்புடன் அதனை
தடவிக் கொடுத்தன கண்கள் முத்தினை நீண்ட நேரம்
விரைவிலேயே அதனை வெறுத்தும் விட்டாள்
கடல் எழும்பும் போது அதை எறிந்தும் விட்டாள் !

187 )விஷமத்தனமான ‘அகார் ‘ அழுது கொண்டிருந்தாள்
கோபத்தில் அவள் பறந்து கொண்டிருந்தாள்
கடலில் இருந்த முத்து இடை மறிக்க முயன்றது
குமுறும் கடல் பதில் அளிக்க வந்தது !

188 )உலகிலேயே மிக அழகான முத்தினை என்ன செய்தாய்
முட்டாளே- மரியாதை இல்லாமல் ?
எனது ஆழத்தில் தூக்கி எறிந்தாயே சோகமான அந்த முத்தினை
எப்போதுமே நான் காத்திடுவேன் கண் போல !

8:09 AM 8/3/06

Series Navigation

author

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

Similar Posts