புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

புதுவை ஞானம்


21)கிளைகளுக்கிடையில் நுழைந்து செல்கையில்
காற்று எழுப்பும் கான ஓசைகள்
பொய் சொல்வதாக என்னைச் சாடாதீர்
இசை என்பது இதை விட வேறொன்றும் இல்லை !

22)நொந்து சலித்து ரெளத்திரம் இழந்து
மறைவாய் இற்று விழும் மனித இதயமும்
பட்டியில் அடை பட்டுச் சாவதற்காய்
மிரண்டோடும் குட்டிகளும் எனக்குத் தெரியும் !

23)பாசாங்கும் ஒழுங்கீனமும் முற்றத்தில் தவழும்
தங்கும் விடுதியை முற்றும் வெறுக்கிறேன் – மாறாக
மெல்லிய சலசலப்பினை ருசிக்க வேண்டி
நாடித் திரும்புகிறேன் பசிய குன்றினை !

24)பாரெங்கும் உள்ள பாட்டாளி மக்களின்
இன்ப துன்பங்களோடு இணைத்துக் கொள்ள
விரும்புகிறேன் என்னை! நிறைவு நிலவுவது
பரந்த கடற்பரப்பில் அல்ல!.சிறுத்த மலைச்சுனை
ஓடைகளில்தான் !

25)விளையப்போவதென்ன ? வெற்றுக்குடுவைக்குத் -தன்னுள்
சுடர்விட்டு ஒளிரும் தங்கக்குழம்பினால் ?
ஆதவனின் தகத்தகாயமான பொன்னொளி தகிக்கும்
அடர்ந்த காட்டினை அளியுங்கள் எந்தனுக்கு !

26)குமிழிகள் கொதிக்கும் சோதனைக் குழாயில்
கசடுகள் மேலேற தங்கம் கீழுறும்
புறாக்கள் பறந்து விண்ணேறிச் சாடினாலும்
மலைப் பள்ளத்தாக்குகளையே மனது யாசிக்கின்றது !
(Range =extent of possible action )

27)கண் பார்வை இழந்த இஸ்பானிய தலைமை குருவிற்குத்
தூண்கள் தேவையாம் தேவாலயம் தாங்க
குன்றின் மேல் உள்ள எனது தேவாலயத்தைத் தாங்குகின்றன
தாமே முன்வந்து- பாப்ளர் மரங்கள் !

28)பிர்ச் மர வரிசை நெருக்கமாய்ச் சுவரெழுப்ப தூய
பெரணிச் செடிகள் தரைக் கம்பளம் விரிக்க
வான் எனும் நீல விதானத்தில் இருந்து
கீழிறங்கி வருகிறது மின்னுமொரு பேரொளி !

29)மனமாறப் புகழாரம் சூட்டுதற்காய்
மதகுரு புறப்பட்டார் இரவு சூழ -மெல்ல
அடியெடுத்து வைக்கிறார் சாரட்டுக்குள்
அது செதுக்கப் பட்டதோ ஓர் பைன் மரத்தில் !

30)மட்டக்குதிரைகள் இழுத்துச் செல்கின்றன
மத குருவின் சாரட்டு வண்டியை-மட்டக்குதிரைகளா
அவை -சிறகு முளைக்காத சின்னப்பறவைகளா?
எதிரொலிக்கிறது பிர்ச் மரச்சாலை- குளம்படித் தாளத்தை !

31)கற்படுக்கையில் கிடத்துகிறேன் என்னுடலை
இனிய பரந்த கணவுகள் வியாபிக்க
தேனீக்கள் இசைக்கும் என் உதட்டருகில்
உலகம் வளரும் என் உடலின் உள்ளே !

32)இளங்காலைச் சூடு பரவுதல் போலே
சுடரொளி தூவும் புதைநிலப்புற்கள்
வாடாமல்லி ஊதா ரோசாவென
வண்ணம் பூசிக்கொண்டன சிறந்ததோர் சுவற்றோவியம் போலே 09:46 PM 6/18/06 (33)

33)தன்னம் தனிய சின்னப் பறவை இசைமீட்டிக் கட்டியம் கூறும்
சிவந்த மேகங்கள் திரண்டு வருவதனை
ஆதவனோ ஒரே அடியில் துரத்தி விடுகிறான் பனிப்படலத்தை
தொடுவானுக்கப்பால் !

34) யாரேனும் சொல்லுங்கள் பார்வை குன்றிய அந்த முதிய பாதிரியாரிடம்
இஸ்ப்¡னிய தேசத்து மடத்தலைவரிடம்…………………………..
குன்றின் மீதுள்ள எனது தேவாலயத்தில் காத்திருக்கிறேன்
அவரது வருகைக்காக என்பதனை !

(IV)

35) ஒருவருமே காணவொண்ணாத் தனிமையில்
ஆரத்தழுவி ,யாம் அலைப்புண்ட கடற்கரைகள்
அனைத்துக்கும் சென்று அசை போட
ஆசைப்படுகிறது அன்புடை நெஞ்சம் !

36) ஆழியும் திரையுமாய் ஆடிய ஆட்டத்தில்
நாணிப் பொந்தில் மறைந்ததோர் ஜோடிப் பறவைகள்
இருவர் மட்டுமே இருக்கின்றோம் என்பது
இல்லை என்றாயிற்று தொல்லை என்றாயிற்று !

37) தென்றலைப் போலத் தீண்டியதவள் நயணம்
நின்றது நிலை குத்தி மறைந்த ஜோடியின் மேல்
பகட்டுச் சிவப்பாய்ப் பறித்த மலர்களை
பரிந்து வழங்கினான் தோட்டக்காரன் !
(நாணிச் சிவந்தது மாதரார் கன்னம்…சிந்திக்க)

38) ஆழ் வயிற்றிலிருந்து அவள் திரட்டியதோர்
இன்தேனமுது சுரந்து மதர்த்தது
தாரகை பூக்கும் மல்லிகைக் கொடியாய்
கன்னிப் பெண்ணின் வசீகரம் படர்ந்தது !

39) துணிச்சல் கார இந்தக் காதலன்
தொடங்கினேன் அவளது மென் திரை அகற்ற
” கேலி செய்வதாக எண்ணாதே ! இன்று நான்
சூரியனைப் பார்த்தாக வேண்டும் என்றாள் ! ”

40)“கண்டதில்லை இவ்வளவு உயர்ந்த மரம்
பின்னி முறுக்கிய ஒக் மரமோ ?
நிச்சயம் இறைவன் இருந்திட வேண்டிமிங்கு
ஏனெனில் கோபுரம் இருக்கிறது அல்லவா ? ”

41)எனது மகளின் இனிய முதற்கூடலுக்கு
நல்ல இடம் இது நான் கண்டு கொண்டேன்
வெள்ளுடை தரித்த தேவதைப் பெண்ணாய்ச்
சிறகு போல் வளைந்த தொப்பியும் தரிப்பாள் !

42)அந்தி மயக்கத்தில் தனித்து விடப்படுவோம்
நாங்கள் நடக்கத்தொடங்கியஅந்தப் பாதையில்
சின்னஞ்சிறு பறவை அதிர்ந்து ஒலித்தாலும்
நெஞ்சணைத்து முத்திடுவோம் நானும் என் காதலியும்!

43)உணர்விழந்து ஒருவர் கிடப்பதைப் போன்று
நிச்சலனமாய் உரைந்திருக்கும் ஏரிக்குச் செல்வோம்
துயறுற்றதோணியை மறைத்தங்கு ஒளித்து வைத்து
சோர்வுற்ற துடுப்புகளைக் கிடத்திடுவோம் சாய்வாக !

————————————————-

Series Navigation

author

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

Similar Posts