கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

சு.மு.அகமது


இதயத்துள் துளை விரிந்து
வழிகிறது இயலாமையின் பரிதவிப்பு

ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவத்தின்
பரிமளிப்பாய் அடக்குகிறது கடன்

பூக்களற்ற பெருவெளி போல்
வாசமிழக்கிறது மனது

இன்றும் நிலைத்து நிற்கிறது
ஒற்றை மரமாய் நட்பு
கடன் கொடுப்பவனோடு

கேள்வியின்றி பதிலுமின்றி
கோப்புகளற்று
அவசர உதவி புரியும்
கந்து வட்டிக்காரன் – என் நண்பன்

காலந் தவறினால்
வங்கி என்ன வாங்கி என்ன?
—————————-

இருளின் ஒரு பதத்தையாவது
வெளிச்சத்தில் படித்திடல் வேண்டும்

வசீகரிக்கும் அதன் குரூர அழகில்
வயப்படாமல் இருக்க
கற்றுக்கொள்ளல் வேண்டும்

கருமை தான் இருளென்றால்
வாழ்வின் வெறுமையும் கறுமை தான்

என்னை அறிமுகப்படுத்திய
இருளின் முகவரி தொலைத்து
வெளிச்சப்புழுதியில் உழன்று இருள்கிறேன்

இருள் கதவின் இடுக்கு வழி
கசியும் இருளில்
என் தேகம் மிளிரக் காண்கிறேன்

பூரணமாய் நான் இருளும் போது
வேர் படர்த்தி மண் கவிந்து
நான் அமிழ்கிறேன்

இருள் இருளாயும்
நான் இருளாயும்
இருளாகி இருள் நோக்கி உதிக்கிறேன்.
——————————

சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று

பேரலையின் ஆரவாரம்
தலையாட்டும் பெருந்தருவின் எதிர்வினை
செயலற்றுப்போய் மென்னியம் உதிக்கிறது

படர்வெளியில் விரல் பிடித்து
நடை பழக்கும் வாசம்
முத்தாத்தனின் மழிக்கப்படாத
முகப்படிமச் சாயலில்

ஆரம்பம் இப்படித்தான்…
புசிக்கப் பழக்கின கனிகள்
அழுகாதிருக்க
புசியப் பழகினதாய்

சுவைத்துப் பழகினவை
செறித்துப் போனதால்
திளைத்துப் போகும் அதன் உலைகள்

தெறிக்கும் துளிகளில் நான்
பெற்றது கையளவு
உன்னுள் கலவாதது உலகளவு

விந்தையின் மேலணியில்
நான் கற்றேன்
நீ கற்பித்தாய்
‘கற்ப’து பொதுவானது.
——————–
musu_7@sancharnet.in
—————–

Series Navigation

author

சு.மு.அகமது

சு.மு.அகமது

Similar Posts