பறவையின் தூரங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஊருணிக் கரையில் விழுந்து புரண்டு
தேடல் மேவிட காத்திருக்கின்றன வார்த்தைகள்
மழைச்சாரலின் ரசனையில்
ஏதோ ஒன்றின் வருகை குறித்த
நிறைவேறா காதலுடன் தனிமையின் காட்டுக்குள்
மெளனத்தின் தடயங்களை விட்டுச்செல்கின்றன.
சிறகுகளை பொருத்தி தாவிக் குதித்து
பறந்தோடிப் பார்த்து திரும்பவும்
மண்ணில் புதைத்துக் கொண்டு
பிறிதொரு சந்தர்ப்பத்தில் துளிர்விட்ட
செடியின் இலைகளாய் அசைதல் துவங்குகிறது.
பிரிவின் வலியும்
வலி மற்றொன்றாய் உருமாறும் தோற்றமும்
மீளாப் பயணத்தை மேற்கொள்ள
பறவையின் தூரங்கள் கடக்கப்படுகிறது

2)
அகமனப் பேச்சாய் விரியும் படிமங்கள்
உள்ளொடுங்கிய தயக்கம் நிறைந்த
கூச்ச சுபாவமுள்ள
பேதலித்துக் கிற்ங்கிய உலகமாய்
தன்னை வெளிப் படுத்த
எங்கும் நிறைந்தது வெளி
நேற்றின் மகிழ்வும் துக்கமும்
வெட்கமாய் பேசி
ஓடிப்போன ஞாபகங்களை
காற்றினுள் தழையவிடுகிறது
விரித்து அடுக்கடுக்காய் மடிக்கப்பட்ட
உணர்வுப் படிமங்கள்
இயல்பின் தவிப்பை அணிந்து
வாழ்தலின் பரப்பினுள் அலைதலுற்று
மிதக்கிறது மேலும் கீழும்.

Series Navigation

author

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts