கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்


மனத்தாபம்.

தொடைகளுக்குள் நிரந்தரமாய்த்
தொலைந்துவிட்டது போல்
முடக்கப்பட்ட அவனது
முழங்கால்களிரண்டும் தோன்றும்.

வலதுகைவிரல் மடிப்புகளால்
வாரப்படாது கோதிவிடப்பட்ட
முடிகளின் ஒருபகுதி – மாதர்
முக்காடிட்டதுபோல் தோன்றும்.

நுளம்புத் தொல்லை என்று
நூற்ற விளக்கை உயிர்ப்பித்து
நிமிர்ந்து கையில் அகப்பட்ட
நாசினியை விசிறும் போதும்,

பன்னிரண்டு மணிக்கு மேல்
பக்கத்தில்வந்து படுக்கும் போதும்
முழங்கால்களும் வலது கையும்
முடிகளின் ஒரு பகுதியும்,

அப்படித்தான் தோன்றும்!

அன்றுமவன் அப்படித்தான் படுத்திருந்தான்
அவனது ஒருகாலைத் தொலைத்துவிட்டு!
தொடைகளுக்குள் அல்ல
தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலிக்குள்!!


ஸஹர் உணவு

அதிகாலை நாலுமணியிருக்கும்
அங்கும் இங்கும்
அழகழகாய்ப் பரப்பிக்கிடக்கும்
அமுதுவகை மேசையிலே.

ஒரு பிடிபிடித்து
ஓரக்கண் நிமிர்ந்து பார்ப்பர்
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை.
நேரம் இருப்பின்
நெடிய வாழைப்பழங்கள்
நாலு உட்சென்றுவிடும்
நாழிகை ஆகுமுன்னே.

அதற்கும் மேலே
அரையவியல் முட்டையொன்று.
அதைக் கீழிறக்க
அப்பிள்ஜூஸ் வேறு
ஆஹா! இதுவல்லவோ ஸஹர் உணவு.

விழித்துப் பார்ப்பர்
விழி பிதுங்கும் –
விடிந்துவிட்ட சங்கதிகேட்டு
வீணானது நோன்பொன்றுதான்.
***

அலறி அடித்துக்கொண்டு
அண்ணார்ந்து பார்ப்பாள்
சுவரில் தொங்கும்
சுவர்க் கடிகாரத்தை – அது
சுட்டும் நாலரைமணிதனை.

அருகிற் படுக்கும் கணவன்
அவனருகில் அன்புச் செல்வங்கள்
அவசர அவசரமாய் அவர்களையெழுப்பி
அன்புமொழி பேசி அமுதூட்டி
ஆனந்தமாய் ஸஹர் உண்பாள்.

அதான் கேட்டதும்
அவள் சென்றிடுவாள் தொழுகைக்கு
அவர்களையும் பள்ளிக்கு
அனுப்பி விட்டு.

***

அரட்டி விடுவதற்கோ
அண்ணார்ந்து பார்ப்பதற்கோ
இங்கு கடிகாரம் ஒன்றுமில்லை,
இவர்களுக்குப் பிள்ளைகளுமில்லை.
தள்ளாத வயதில்
தயவு அல்லாஹ்தான்.

அகப்பட்டதை அகப்பையில்
அள்ளி எடுத்துண்டு
அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறி
ஆவலாய்க் காத்திருப்பர்
அதான் கூறும்வரை – சிலவேளை
அதான் கூறியுமிருக்கும்.

வாழ்க்கை

ஒற்றைக் கம்பியில்
ஒருக்கணித் தமர்ந்து
ஓரக்கண்ணால் காணும்
ஓராயிரம் காட்சிகள்.

நீண்ட தொலைவில்
நீள் பனையொன்று – அதன்
நிழல் வழியே
நிம்மதியாய் இருநாய்கள்.

ஆகாய உச்சியெட்ட
ஆலாக்கள் இரண்டு
அதன் பின்னே
அழகிய கிளிகள்பல.

வயலில் வயதான
விவசாயிகள் பலர்
வடிவாய்ச் செப்பனிட
வடிச்சலுக்காய் வாய்க்கால்களை.

கொங்கை குலுங்கிட
மங்கையர் பலர்
களை கொள்ளும்
கண்கொள்ளாக் காட்சிகள்பல.

சக்கரச் சவட்டுதலில்
சில புழுக்கள் – அதைக்
கொத்தித் தின்ன
கொக்குகள் பல.

வீதியால் வந்தவனை
வேருடன் பிடுங்கி
வயலில் விட்டெறிந்த
விபத்து ஒன்று.

பஸ் மிதிப்பலகையில்
பயணம்செய்த இளைஞன்
பரிதாபமாய் விழுந்ததை
பார்த்துச்சிரிக்கும் இளசுகள்.

வலதுகையை உரசிக்கொண்டு
விரைவாய்ச் செல்லும்
பாதுகாப்பு வாகனமொன்று
பாதசாரிக்கு பாதுகாப்பின்றி.

அழகழகாய் அணிவகுத்து
அவசரமாய் பறந்துவந்த
வாகனங்கள் அனைத்தும்
வந்த அரசியல்வாதிக்காய்.

இத்தனையும் பார்த்துரசித்த
இளைய காக்கை
மற்றக்காலை உயர்த்தியபோது
மரணம் மின்கம்பியில்..

மனக் கிலேசம்.

நித்திரையில் நான்
நாலுமுறை எழுந்திருப்பேன்.

பல்துலக்கிக் குளித்திட
பலமணி நேரம்
தலை துவட்ட
தலை முழுகிப் போகும்.

காலையுணவு ருசிக்காது
காலை வாரிவிடும்.
இஸ்திரிகை செய்யாஆடை
இன்றுமட்டும் என்றுசொல்லும்.

சைக்கிள் சாவியைத்தேடி
சலிப்புத் தட்டிவிடும்.
கடிகாரத்தைப் பார்த்தால்
கதிகலங்கிவிடும்.

வேகமாகச்சென்று பின்னர்
விழிபிதுங்கி நிற்பேன்.
எரிபொருள் தீர்ந்தது
என்மூளைக் கெட்டாது.

எப்படியோ சமாளித்து
எட்டிப்பிடிப்பேன் கந்தோரை.

வரவுப்பதிவேடு மட்டும்
வரிசையாயுள்ள புத்தகங்கள்மேல்
வலியச்சென் றமர்ந்ததுபோல்
வாவென்று கையசைக்கும்.

சிவப்புக்கோடு எச்சரிக்கும்
இன்றும்நீ ஷலேட்தானென்று.

முந்தநாள் சம்பவங்கள்
முழுவதையும் ஏப்பமிட்டதுபோல்
முகாமையாளர் வீற்றிருப்பார்
முகாரி என்மனதில்தான்.


நவீன மாணாக்கர்

ஒன்றுடன் ஒன்றைக் கூட்ட
இரண்டு வருமென்றார் வாத்தியார்
மூன்றும் வருமென்றான் ஒருவன்
நான்கும் வருமென்றான் இன்னொருவன்.

கணக்குப் புரியவில்லை
கணக்கு வாத்தியாருக்கு – ரியூஷன்
கணக்கோவென அவர்
எண்ணி விட்டார்.

விஞ்ஞான வாத்தியார் வந்தார்
ஒன்றும் ஒன்றும் இரண்டா?
மூன்றா? நான்கா? எனக்கேட்டனர்
ஏன்? ஏழாகியசங்கதி தெரியாதென்றார்.

கொல்லனெச் சிரித்தது
கும்மாளமிட்டு மாணவர் கும்பல்.

பெற்றவள் யாரோ
பிரித்துக் காட்டியவர் யாரோ
பட்டம் பெற்றதோ – புதுப்
பட்டம் பெற்றதோ வாத்தியார்.

கணக்குத் தெரியாக்
குணக்கு வாத்தியாரென.


தொலைந்துவிட்ட சொந்தங்கள்.

பொட்டிழந்து பூவிழந்து
புதுப் பட்டிழந்து
கட்டுப் பெட்டியுடன்
கடல்கடந்து சென்றீர்.

அமுதம் பொழியும் வானம்
அன்று பொழிந்ததெல்லாம் – உங்கள்
அன்புச் செல்வங்களின் உயிரை
அள்ளிச் செல்லும் குண்டுகள்தான்.

மழலைச் செல்வங்கள்
மறுசொல் உதிர்ப்பதற்குள்
மரணமெனும் தூரிகை
மாற்றியது வரலாறைத்தான்.

பரிதவித்து கண்முன்னே மாண்ட
பச்சிளம் பாலகர்தான் எத்தனையோ!
பாடையிலே கொண்டு சென்ற
பசும் பாவைகள்தான் எத்தனையோ!!

விதைத்தனர் வி~மிகள்
விந்தைமிகு பயிர்களை – அவை
விடிவதற்குள் முளைத்தனவே
விதவைகளாய் இத்தரையினிலே.

கண்டதுயர் கணக்கில்லை
கண்ணிற்கூட நீரில்லை
கண்ணாளன் மரித்தால்கூட
கலங்குதற்கு உங்களிடம்.

இத்தனையும் இழந்து
இத்தரை மறந்து
புறப்பட்டீர் புலம்பெயர்ந்து
புதுயுகம் படைத்திடவே.

தேன்மதுரத் தமிழோசை போதும்
தமிழரெனத் தலை நிமிர
இயல் இசை நாடகம் – புலம்பெயர்
இலக்கியங்கள் படைத்திடவே.

இத்தரையில் விட்டபிழை வேண்டாம்
எத்தரையும் எல்லோர்க்கும் சொந்தமென
உலகமயமாக்கலில் உங்கள் பங்கு
உயரட்டும் இமயம் வரை.

தொலைத்துவிட்ட சொந்தங்களை – உயர்
தொழில்நுட்பம் பெற்றுத் தருமென்றால்
தொடக்கி விடுங்கள் ஆய்வுகளை
தொலைவில் இருந்து கொண்டே.


சுனாமி – நல்ல தருணம்.

அழகிய அக்பர் கிராமம்
அன்பான மௌலானா வீட்டுத்திட்டம்
இன்னொரு இருபத்தைந்து மீனவர்திட்டம்
இன்றைய மக்பூலியாபுரம் (அன்றைய பஞ்சாப்) என

ஆண்டாண்டுகாலமாக எங்கள் முதியோர்
ஆதியில் தடம் பதித்த
சுவடுகளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
சுருட்டி எறிந்து விட்டாய்.

பணம் நகை பாத்திரங்கள்
பத்திரப் படுத்திய ஆவணங்கள்
வீடுவாசல் எதுவும் வேண்டாமென
வீதிக்கு ஓடிவந்த எம்மக்களை,

உடுத்த உடைகள் கூட
உடலில் காக்க விடாமல்
உக்கிரமாய்ப் பிய்த் தெடுத்து
உள்வாங்கிக் கொண்டாய் நீ!

பிறக்கப் போகும் பிள்ளையையோ
இறக்கப் போகும் தறுவாயையோ
கண்டுகொள்ளாமல் குருவிக் கூட்டுக்குள்
குண்டு வைத்ததுபோல் ஆக்கிவிட்டாய்!

ஆக்குவதும் அழிப்பதும் நீதான்
அவனியிலே அதற்கு இணையில்லை
எனவுணர்த்தவா ஆழிப்படைகளை அனுப்பி
அரைமணிக்குள் ஆக்கிரமித்து விட்டாய்!

ஆகாயம் கடல் தரையென
அதி நவீன ஆயுதங்கள்
அதிலும் உயர் தொழிநுட்பம்
அத்தனையும் இருந்தென்ன பயன்?

கடல் ஆகாயம் தரைகளையே
படைகளாக்கி ஆட்டங் காணவைப்பேன்
என நீ உணர்த்திவிட்டாய் –
அகிலத்தையே நடுநடுங்க வைத்துவிட்டாய்.

கடலில் கால் பதித்து
அலைகளை அள்ளி முத்தமிட்டு
அணைத்து புரண்டு விளையாடி
ஆனந்தப் பட்ட நாங்கள்,

ஆலை என்றதும் அலறி அடித்துக்கொண்டு
ஏறுதற்கு இடம் தேடுவதையும்
ஓடுதற்கு வழி பார்ப்பதையும்
வேடிக்கை பார்ப்பதற்கா எங்களுயிர் காத்தாய்?

இல்லையில்லை இது எச்சரிக்கை மட்டும்தான்
இன்னும் உன் தண்டனை இறங்கவில்லை!
இரவு பகலாகவும் பகல் இரவாகவும்
சூரியன் மேற்கிலும் விழிகள் உச்சியிலும்,

மாறும் நாள் வருவதற்குள் எங்களை
மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்
இது ஒரு நல்ல தருணமும்கூட
உன்னை நன்கு புரிந்து கொள்வதற்கு.
—————————————-
abdulgaffar9@gmail.com

Series Navigation

author

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Similar Posts