கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


ஒன்று : நிச்சயமின்மை

வெறுமையில் இருப்பதாக
சுய பிரஸ்தாபம் கொள்ளுமொரு நிலை
இனியில்லை
மையம் விளிம்பை காவுக் கொண்டு விட்டது
எந்த நேரத்திலும்
சூனியப் பிளவில் பிரவேசிக்க நேரலாம்
காற்றின் வேகத்தில் செல்லும்
மேகங்கள் கூட கரு கொண்ட பின்னே
பிரசவிக்கின்றன.
இது முன்னின்றலின் இயங்கா விதி
எந்த ஒரு தருணமும்
ஒரு பித்தனாகவோ
சித்தனாகவோ செய்யலாம்.
நிச்சயமின்மையில் சிக்கி
தவிப்பதாக எழுந்த அவிப்பிராயம் கூட
வெறுமையில் சென்று முடிகிறது
இனி சுய பிரஸ்தாபம் தேவையில்லை.


இரண்டு : நட்சத்திரங்கள் மறையுமா?

நேற்றைய நாளின் கடைசி
கணங்களில் உதித்திருக்கும் சில
நட்சத்திரங்களைப் பற்றி
சொல்லியாக வேண்டும்
நட்சத்திரங்களை இதற்கு முன்பு
அறிந்ததைப் போல இல்லை
என்று நம்புவதிலிருந்து தான்
இந்த நட்சத்திரங்களைப் பற்றி
சொல்லமுடியும்
ஒரு புழுக்கத்தில் உதித்த இவை
அசாதாரணமாக
சூரியனை விட பெரிதாக இருக்கிறது.
நான்கு திக்கிலுமாக நின்று
நான்கு வர்ணங்களில் ஒளியை
உமிழ்ந்து கொண்டிருப்பதாக
கடைசியில் கிடைத்த தகவல்கள் சொல்லுகின்றன
எனினும் ஒன்றை மட்டுமே
ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருக்கிறது
அவை மறையுமா என்று.


மூன்று : வேகவேகமாய் ஒரு வேகம்

ஒரு வேகம் சிறந்தது என்றுச் சொல்லப்பட
ஆயிரம் காரணங்கள் இருக்கிறது
அந்த வேகத்துக்கு முன்னால்
எதுவும் சென்றுவிட முடியாது
என்ற நம்பிக்கையும்.
வேகவேகமாய் ஒடிக்கொண்டிருக்கும்
அந்த வேகத்தைப் பற்றி ஓரிரு நாள்களுக்குள்
ஏதாவது முடிவுக்கு வரலாம்
ஆனால் வேகம் முடிவுக்கு வராது என்று தெரியாமலாயிருக்கும்
என்றோ துவங்கிய அந்த வேகம்
எங்கே செல்லுகிறது என்று
அவதானித்தே காலங்கள் மேலிருந்து கீழாக
விழுந்துக் கொண்டிருக்கிறது
ஒரு நிலையில் தான் வேகம் செல்கிறது
என்று சொல்வதற்க்கான நிலை
வேகத்திலிருந்தே பெறப்படுகிறது என்று
சொல்லமுடிந்தாலும்
வேகம் பற்றிய நிச்சயமின்மையே
மீண்டும் மீண்டும்
அதை பேசச் சொல்கிறது.

——————————–
mujeebu2000@yahoo.co.in

Series Navigation

author

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்

Similar Posts