கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

டான்கபூர்


உலகம் நசிந்து
மூட்டைப் பூச்சிகள்
என்னிதயத்தைக் கடித்துத் தின்னுகிறது.
இதயங்களில் வால் இருக்கும்
மூளையில் கொம்பு முளைத்திருக்கும்
மனிதர்கள் விழிகளை விழுங்கும் போது.

சூறாவளியால் சிக்குப்பட்ட கோழிக் குஞ்சாக
என் நினைவுகள்.
என் தூக்கம் மலையிலிருந்து
குதித்துச் செத்துக்கிடக்கிறது.
கனவுகளை பாம்புகள் தின்ன
சுவாசிக்கும் மனிதனாக மட்டும் நான் இருக்கிறேன்.
இந்த நசிந்த உலகத்தில் நான்
ஒருவனாக இருப்பதால்.

என் உலகமே!
உனக்கு சூடு சொரணை வராதா ?
சூரியன், சந்திரன், காற்று, நீர் அத்தனைக்கும்
எத்தனை ஒழுங்கு பார்த்தாய்.
அதனால்தான்
இன்னும் இந்த உலகம் மூச்சுவிடுகிறது.
இவை ஒழுங்கு தப்புவதற்கு முன்
பூனை கக்கிய உங்கள் இதயங்களைக் கழுவி
சுருண்டு படுத்து படமெடுக்கும்
பாம்பு மனசை எச்சிலாகத் துப்புங்கள்.

வண்ணத்துப் பூச்சிகளை
உங்கள் இதயங்களில் மேயவிடுங்கள்.
மேகத்தோடு பேசி,
வெள்ளிகளோடு விளையாடி
சந்திரைனக் கொஞ்சி
தென்றலில் நீந்தி
மலர்கள் மீது உறங்குங்கள்.

இரத்தக் கடலுக்குள் தூக்கிப் போட்டதால்
செத்துக்கிடக்கும் இந்த உலகம்
மீண்டும் சவாசிக்கிறதா என்று பார்க்க ?


ஒருத்தி

போதும் உன் சிரிப்பு.
பாராங்கல்லை தலையில் போட்டு
ஒரு மழலையின் சிரிப்பாகக் கழிந்த வாய்.
மல்லிகை மொட்டுக்கு ஒப்பானதாய்
விரியும் உன் சிரிப்பை
இதோ பாடசாலை சுவர் மறைவில் போடு.
தங்கு மடத்திற்கு மேல் ஏற்றி வை.
பயணி அழுவான்.
உன் கொண்டைக்கிளாத்தான்
கொண்டையில் விழுந்து.

வரும் பேரூந்தும் தவறிப் போகும்.
கையைக் காட்டு.
என்னை விடு.
என்னிதயத்தை விடு.
என் கண்களை விடு.
பின்னாலே வரும் நவிந்த துருப்பிடித்த வேனில் ஏறுகிறேன்.
நெருங்கி நொருங்கிப் போவது
காதலைப் போல எனக்குப் பிடிக்காது.

உன் சிரிப்பைப் போல
எனக்கானவை எல்லாமே தவறிப் போவதைப் போல
ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறக்கை.
ஒரு தும்பியின் வால்.
ஒரு மாலை வெயில்.
தவறிப் போகுமிடத்து
என் வேகநடையைக் காட்டுவேன்.
குதிரைக்கு ஒத்ததாய் ஓடுவேன்.
எருமையில் ஏறுவேன்.
உன் சிரிப்பைக் குறைக்கப்பார்.
என்காதலியைப் போல.


சூரியனின் இளமை நரையாகி

சூரியனின் இளமை எனக்குப் பிடித்தது.
என்மடிக்குள் விழுந்து முச்சுவிடும்.
மனிதனைக் கொய்து
புதைக்கத் தெரியாத அரசியல்வாதி.
பட்டவன் கையிலெல்லாம் அரிவாள் இப்போது.

பூக்கல்லின் வழியாக முதற் கதிரைப் பாய்ச்சுவது
எனக்குத்தான்.
சூரியனின் ஒரு கதிர்
எப்போதும் எனக்கு உரித்து.
என் கதிரையில் அமர்ந்து ஆறுதல்படுத்திய
நாட்களுக்கு எப்போதும் முட்கள் விதைத்ததில்லை.

சூரியன் கவலை கொள்வான்.
மேசைப் பேச்சுக்களின் நாற்காலி சுழன்று முடிவதில்
ஒரு மலரின் வாடலில் வேதனை தெரியும்.
மலர்களெல்லாம் மலர்வதும் உதிர்வதும் மிஞ்சுமோ ?

மாலையையும் காலையையும் அழகுபடுத்தும்.
அதன் தூரிகை என்னு}ர் வாசலில் கீறும்
கிளையிடையே விழும் கதிரின் லயிப்பில்
வேம்பு சிரிப்பதும்
தென்னையின் குருத்தில் தாலிகட்டிப் புணர்வதும்
நான் ரசிப்பவை.
ஒரு மிரளயம் தொடரும் வரை.

சூரியன் பிரசவித்த மழைக் குழந்தையின்
சிறு நீரில்
நான் குளித்து விளையாடிய காலம்….
பல அரசியல்வாதிகள் மேகத்தையம் வானத்தையும்
என் சூரிய நண்பனின் முகவரிக்கு விண்ணப்பித்து.

ஒரு கதிரின் பெறுமதியை
நான் காலை எழும்போது உணர்வேன்.
ஒரு துப்பாகியின் சத்தமோ
ஒரு வதந்தியின் மொழியோ என்னை அடையாத வரை….
பெருவிரல் அடையாளத்தையாவது இட்டு
மேசைப்பேச்சுக்கு சூரியனை அழையுங்கள்.
அவன் போடும் வெளிச்சத்துக்கு.


கிணற்றுத் தும்பி படியிறங்கி

காலையில் கதிரவன் வாசலில் மேய்வான்.
காகமும் பூனையும் சேவலும் அதனோடு.
பூமரம் மலர்த்தி பூக்களை
வாசலைப் பெருக்கும் பெண்ணையும் அணைக்கும்.
இலைகளில் படிந்த பனித்துளிப் பருப்பு
ஆவியாய் ஆவியாய் நாளையின் நாளுக்கு.

விடியுமா ?
வேர்விட்ட யுத்தத்தை நற்செய்தியாக்கி.

மாலையில் கதிரவன் கோடியில் நழுவி
கிளரும் பொன் வயல் வானத்தை.
வரும் என்று,
வரும் என்று,
கேடியில் மனம் வெதும்பி கறிவேம்புக் கன்றுகளும்,
பப்பாசி மரம் ஒன்றும்.
கதிரவன் கதிரில் கூதல் காயவோ ?
இல்லை.

நாளை விடியுமா ?
வேர்விட்ட யுத்தத்தை நற்செய்தியாக்கி.

நானாக என்ன செய்ய ?
முற்றமும் கோடியும், கோடியும் முற்றமும்.
என் நாட்கள் ஊர்கின்றன.
கதிரவன் கதிரோடு.

குறுக்குக் கோழிக்கு கூந்தலைக் கட்டி
விரட்டவும் பயமாக, பயமாக…
என் வெளி உலகம்
குடியிருக்கும் என் வளவாய் சுருங்கி… சுருங்கி….
நான் இருக்கின்றேன்.
கிணற்றுத் தும்பியாக படியிறங்கி.
என் வளவுப் பாசியில் தங்குகிறேன்.

நாளை விடியுமா ?
வேர் விட்ட யுத்தத்தை நற் செய்தியாக்கி.



மரங்கொத்தி வரலாம் இனி

தென்னையைப் போல வெறும் ஈக்குக்குடல்…
இவனிலிருந்து வராது.
இதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள்
உன் சொண்டில் வரும்.
நரம்புகளும் அதில் சிக்கும்.

உலாவப் பிறந்தவன் மனிதன்.
தென்றலை உடலுக்குக் குடில் கட்டிக் கொடுப்பவன்.
இயற்கையை கண்ணுக்கு விருந்தாளியாய் அழைப்பவன்.
ஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று
வளரும் மரம் போல நகராமல்
அடியைப் பதிக்கவும் அஞ்சிக்கிடக்கின்றான்.
தன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.

கடல் சார்ந்த இடம்.
வயல் சார்ந்த இடம்
அலுப்பூட்டிக் கிடக்கிறது.

மொத்தத்தில் இவன் ஜடம்.
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்.
கண்ணிகள் இவனில் புதைக்கப்படவில்லை.
தென்னையைக் கொத்திக் காயப்படுத்தி
அதன் உடம்பில் ஓவியம் வரைந்து
“போர்” ஒன்றைச் செய்து
இல்லறம் நடத்தியது போதும் குருவி….

மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்.
நம்பி.
துப்பாக்கி உன்னை நோக்கி இல்லை.
இவன் உடம்பில் வந்து தங்கு.
தோளில் நின்று எச்சில் அடி..
ஒரு “போரை” வடிவமைக்க இவன் நெஞ்சிலோ
முதுகிலோ நின்ற கொத்து.
மரமான இம் மனிதனின்.


தேர்தலில் குதியாத வேட்பாளனாக

நான் தேர்தலில் குதியாத வேட்பாளன்.
என் காடு தீப்பிடித்த போது
என் வானம் அழுது அணை உடைத்தது.
கறுப்பு நிலவுக்குள்.

என் மூச்சு சுழலும் காற்றையே சுவாசிக்க
என் கிடுகுகள்,
என் தகரங்கள்
சிறகோடு கிளம்பின.

ஏன் கார் புழுதியை கொளித்து
சேற்றை விசிறி
உழுத தெருவில் நான் தோற்றுப் போனதில்லை.
என் வாக்குகள் செதுக்கப்பட்டு நடப்படுகின்றன.
சந்தி மகிழந்;தது.

வாக்காளன் ஒரு வரம்பினுள்
துப்பிய நீராக பாய்கிறான்.
தந்திரம் பற்றிய பாடலை
அவனுக்கு நரி கற்றுக்கொடுத்தது.
இரவுகள் குமிக்கப்பட்டு.

சக்கர தேசத்திற்குள்
எவனும் நிமிர்ந்திட இயலா.
ஆகாயம் தட்டும் தலையில்.
உருட்டிடும் குண்டுமணியாக என் நனவுகள்
ஒரு தடைக்குள் விழிக்கின்றன.

பச்சைக்குள் பிடித்த புழுக்களையும்
நீலத்தில் படிந்த கறைகளையும்
சொண்டுகளால் பருகிக் கழிக்க
தேர்தலில் குதியாத வேட்பாளனாக.

அமைதியை ஒரு படுகுழி மரணமாய் பேச
கற்பனையிலேயும் எனக்குள் ஒரு அமைதி
தேசத்தை உருவாக்க
ஏந்த அடையாள அட்டையும் தேவையில்லை எனக்கு.

இலங்கை டான்கபூர்

deengaffoor7@yahoo.com

Series Navigation

author

டான்கபூர்

டான்கபூர்

Similar Posts