கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

விஜய் கங்கா


நகர் குறிப்புகள்

வெடித்த தென்னம்பிள்ளைகளின்
பலமற்ற அசைவில்
துலங்குகிறது
குன்றிய ஊட்டமும்
வந்து சேரா நீரும்

செவ்வக கதவம் திறந்ததும்
வீசும் வேப்பங்காற்றதில்
முன்பிருந்த நற்குணமணம்
வற்றியதுணருகிறது நாசி

பேறுக்காக புகலிடம்
கிடைக்காது
சாளர வலையில் துளையிட்டு
இல்லம் புகுந்து கூடு கட்டிவருகிறது
தாய்மையுற்ற தோட்டத்து அணில்

இரை தேடும் முனைவற்று
வீட்டின் பின்புறம் சிதறும்
உணவு பருக்கைகளை
பகிர்ந்துண்ண பழகிக்கொண்டன
காக்கைகளும் புறாக்களும்

குளக்கரையோரம் இயங்கும்
சுத்திகரிப்பு சாலையதின்
பகலை கரியாக்கும்
கரும்புகையை
இரவென எண்ணி
விழித்துக்கொள்கின்றன
கீழ்க்காட்டில் ஆந்தைகள்

தென்னையும் வேம்பும்
சாயும் வேளை
மேற்றிசையில்
அஸ்தமனமாகுகிறது
ஓர் சாம்பற் சூரியன்

***

குறுநிலமும் குறுநணியும்

வனம்சூழ் குடிலெங்கும்
விரைந்திடும் மாருதமும்

விரிந்த பூவிதழ் நுழைந்து
தேனுண்ணும் வண்டினமும்

மலரிடை சேர்க்கும்
மகரந்த துகள்களின்
தளராத சுழற்சிக்கு

தடைகள் அகற்றி
அருகாக அமையாத
குடியிருப்புகளுக்கு

தூரமாகும்
நீண்டுவரும்
சுவாசகாசமும்
நற்காற்று நுகராத
நாசியின் கிலேசமும்

****

ஒலிக்கோட்டில் ஓர் மாசுபுள்ளி

மெளனங்கள்
அடர்த்தியானவை

பெருகிவரும் நெரிசலில்
அரிதாய் கிடைக்கும்
தனிமையின் வரங்கள்
இச்சைக்களைந்து
மனதை மீட்டுத்தரும்
சீறிய உரங்கள்

ஒலியின் அளவுகோளில்
மென்மையின் பதங்களாய்
நடுப்புள்ளித்தொட்டு நிற்கும்
மொழியும் இசையும்
மெளனத்தைப் பிரிந்து

தூர செல்ல செல்ல
வன்மை பெருக்கியபடி
நரம்புகளின் அயர்ச்சிக்கு
வித்திட்ட வண்ணம்
ஓங்கி நிற்கும்
இரைச்சல்
ஒலியின்
எல்லைக்கோட்டில்-
இயந்திரங்களின் தொடர்
சப்த வடிவிலும்
வாகனங்களின்
இடையறாத ஓட்டத்தில்லும்
கேளிக்கை பேரொலிகளிலும்,

மனதை மாசுறுத்திவரும்
பெருநகர நாகரிகத்தின்
உப விளைவுகளாய்

***
cv_ganga@yahoo.com

Series Navigation

author

விஜய்கங்கா

விஜய்கங்கா

Similar Posts