இரு கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

மு. பழனியப்பன்


விஷயம்

விஷயம் இல்லாதவர்கள் இல்லை,
விஷயம் தெரியாதவர்கள் உண்டு,

எழுதத் தெரிவது
படித்து நினைவில் இருத்துவது
கணக்கு போடுவது
வருமானவரிக்கு ஏற்ப சேமிப்பது

குறைந்த செலவில் அதிக வசதி
தேவைக்கு ஏற்ப மனிதர்களின் பழக்கம்
வேலையை முடிக்க குழைவு

இப்படிப் பலப்பல விஷயங்கள்
இதைத் தெரியாதவர்கள் இருக்கலாம்
ஆனால் விஷயம் இல்லாதவர் எவரும் இல்லை

புத்தித் தெளிவிலும்
புத்திக் கூர்மையிலும்
வேகம்
கூடலாம் குறையலாம்

விஷயம்
சொல்லித் தெரிகிற விஷயம் இல்லை
சொல்லாமல் அறியப்படுகிற விஷயமும் இல்லை
இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருப்பது

இது இது விஷயம் எனத்
தெளிவு பிறக்காமலே
விஷயம் விஷயமாக இருக்கிறது

எனினும்
மனிதர்கள்
விஷயமாக இருக்கிறார்கள்



வில் + அங்கம் = வில்லங்கம்

வில்லங்கமான
ஆட்களைப் பற்றிய விபரக்குறிப்பு இது

இவர்கள்
அறிமுகமாகும் போது
மிக மென்மையானவர்களாகத் தோன்றக் கூடும்

விபரங்களைச் சேகரிப்பார்கள்

தேவையானவை
கிடைக்கும்வரை மெளனம்
இவர்களின் மொழியாகும்

பாரட்டுக்களை எதிர்பார்க்க முடியாது

தேவையானவை
கிடைக்காவிட்டால்
மென்மை வன்மையாகும்
விபரங்கள் விபரீதமாகும்
மெளனம் வெடித்துச் சிதறும்

ஒவ்வொருவருள்ளும் இவை
நிகழலாம்

ஏனென்றால் வில்லங்கம்
பழிவாங்கலின் தொடக்கம்

—-
muppalam2003@yahoo.co.in

Series Navigation

author

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts