அலறியின் மூன்று கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

அலறி


01. பூத்து பின் உதிர்ந்து

சக்கடிஸ. புக்கடிஸ..
சக்கடிஸ. புக்கடிஸ..
கடைசித் தறியின் குரலையும்
நெருப்புத் தின்றது
கடைசிசேணியனை கடன் கவ்வியது

ஊரெல்லாம் ஒரு காலம்
காய்த்து பூத்து குலுங்கிய மரங்கள்
தறிகள்
திடிரென பட்டுப் போனது

சமுத்திரம் வற்றி
கப்பல்கள் கவிழ்ந்தது போல
தறிமாலை இழுத்து மூட
சிலந்தி வலை பின்னியது
பஞ்சம் படை கொண்டது
சறுக்கால் நிலையடி அடுப்புக்கு இரையானது

கொள்ளிக்காரனை சில காலம் தேடவில்லை
படஅலகும் இருப்பிடப்பலகையும்
மாதக்கணக்கில் எாித்தும்
மலையாய் குவிந்தது

அண்டைநாட்டுச் சரக்கு
சந்தையில் மீனாகி மலிந்ததும் உண்மைதான்
முற்றத்து மல்லிகையை நாமும் முகரவில்லை

கச்சை துண்டாக கட்டியதும்
பிள்ளையின் கக்கா துடைக்கவும்
இறக்குமதி சாறன்தான்
பெருநாள்
சித்திரை பொங்கல் பண்டிகை நாளிலும்
இடுப்பில் வெளிநாட்டழகி

நெசவுத்தொழில் ஆறாய்த் தூர்ந்தது
மேட்டு வட்டை காணியை உப்பு தின்றது
கடலை மட்டும் ஆண்டவன் மூடவில்லை
பள்ளிக்கூடங்கள் திறந்து கிடப்பதால்
ஊாின் உசிர் இன்னும் உசும்புது

ஏன்றாலும்
காற்றோடும் மழையோடும் மூச்சோடும்
கலந்து
சக்கடிஸ. புக்கடிஸ..
சக்கடிஸ. புக்கடிஸ.
தறிகள் பாடும் சப்தம்
கேட்க வேண்டும்
உயிர்த்து
கேட்க வேண்டும்

02) சாணம் புதைந்த நிலத்தில்

மாடுகள் மேற்கில்
அசைபோட்டு நடந்தன
எங்கள் மாடுகள்

அந்திக்கு சற்று அப்பால்
சாிந்து கிடக்குது சூாியன்

மென்பச்சை கம்பளி போர்த்தி
நீண்டு படுக்குது
கதிர் பறிந்த வயல்வெளி
மூத்த வாப்பா முங்கி குளி;க்கும்
வாய்க்கால்
இடந்து நகா;கிறது
அருகு இரண்டும் அறுகம் புற்கள்

மேய்ந்த மாடுகள்
விறைத்துப் பால்தேங்கி நின்றன
அப்பக்கமாக

புல்லும் புதரும் மூடுண்டு
காடு பத்தி அடர்ந்து
ஏக்கா; கணக்கில்
எங்கள் வயற்காணிகள்;

பூங்குயிலின் பாடல்
காட்டிடை மறைந்து கேட்குது
மூத்தவாப்பா சிந்திய வியர்வை
சேற்றில் மண்டி மணக்குது.

பற்றைகள் செருக்கி
வரம்பு கட்டி உழுத களனிகள்
அவணக்கணக்கில்
நெல் விளைந்து சொாிந்த பூமி

மூடை மூடையாய் ஏற்றி
அாிக்கன் லாம்பு ஒளிப்புகாாில்
வண்டில்கள் அணிவகுத்ததை
மாடுகள் மறக்கவில்லை

வேட்டுகள் பறிந்து
சுற்றி வளைக்கும் இரவுகளில்
அடைக்கலம் கொடுத்து
அவித்துக் கொட்டிய சோத்து மணிகள்
அயத்துத்தான் போனது

எங்கள் மாட்டுச் சாணம்
ஆழப் புதைந்து
ஏங்கள் மண்வெட்டிகள்
கொத்திய நிலத்தில்
பாம்புகள் குடி கொண்டுஸ

ஒற்றைப் போகமேனும்
விதைத்துப் பார்க்க முனைகிறோம்
ஒத்து கொண்டு கை குலுக்குது
கைகளில் ஈரம் காய முன்படமெடுத்து சீறுது

எங்கள் மாடுகள்
எங்கள் நிலத்தில்
மேய்வதை உழுவதை
எதுவரை தடுக்கும்
புடையன் பாம்புகள்

03) தொடரும் ஆவேசத்துயரம்

பட்டிப்பூ பூக்காதுதிரும்
கபுறுஸ்தானில்
நடப்பட்டுள்ள மீசான்கட்டையில்
குந்தியழும் பறவையின் பாடல்
ஒரு கடல் துயரம் சுமந்து மழையாகி;றது
மழையாகி

இருள் விக்கித்து கவிய
காத்தான்குடி பள்ளிவாசலில்
சாிக்கப்பட்டவர்களின்
காயாத குருதியில் கலந்து
நிறமாறுகிறது
அழிஞ்சிப் பொத்தானை
ஏறாவூாில்
சதை கிழிக்கப்பட்ட குழந்தைகள்
கா;பிணித்தாய்மார்கள்
கதறியழும் குரலை
வெறித்து நின்ற மரங்களை
முறித்து சாய்க்கிறது
மூதூில் வழைச்சேனையில்
எாிக்கப்பட்டவர்களின்
சாம்பலில் படிந்து
கல்லாய் உறைகிறது.

கைகளை பிடுங்கி விட்டு
கால்கள் மட்டும் கொடுத்து துரத்திய
வடபுல முஸ்லி;ம்கள்
ஒலைக் குடிசைக்குள் கொட்டும் கண்ணீரை
உப்பளக் கரையில் நிறைத்து
கரையுடைக்கிறது

பாட்டன் சுவடுகள் ஆழப்புதைந்து
கலப்பையும் ட்ரக்டரும் பறிக்கப்பட்டு
வேர்களைப்பிடுங்கி வேலி அமைத்திருக்கும்
வயல் நிலங்களில் விழுந்து
ஆறாய் பெருக்கெடுக்கிறது

மீண்டும் அது முகிலாய் திரண்டு
மழையாகிறது
இப்படியே—
இப்படியே—

அலறி, இலங்கை

Series Navigation

author

அலறி

அலறி

Similar Posts