கவிதைகள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ஆ. மணவழகன்


தோழியரே… தோழியரே!!

தோழியரே! தோழியரே!
நலமா! நீங்கள் நலமா! ?

காலத்தின் கருவறையில்
கால்தடத்தைப் பதிக்க எண்ணும்
கவிஞைகளே(! ?)..
நலமா, நீங்கள் நலமா! ?

எந்தன் உணர்விற்குள் உறுத்தி நிற்கும்,
உங்கள் உள்ளம் துடைக்க சில கேள்வி!
எம் பண்பாட்டைக் காத்து நிற்க – இது
படை திரட்டும் ஒரு வேள்வி!

‘பெண்மொழி ‘ என்று சொல்லி – நீ
பெண்மையைப் படையல் வைப்பதா ?
உன்மொழி படித்த பெண்ணே – உன்
எழுத்தைத் தள்ளி வைப்பதா ?

அச்சம் தவிர்த்து ஆடை களைந்த நிலையை – நீ
அனைவர் முன்னும் அள்ளி வைப்பதா ?
கொண்டவனோடு கொண்ட உறவை – பார்
கொறிப்பதற்குக் கொடுத்து வைப்பதா ?

கழிப்பறை வாசகத்தை – நீ
கவிதை என்று சாற்றி வைப்பதா ?
காற்றினில் கலையும் மேகத்தை
‘காலச் சுவடு ‘களில் ஏற்றி வைப்பதா ?

ஆடைக்குள் மறைக்கும் அழகை
அட்டைப் படமாய் அரங்கேற்றுவதா ?
உச்சரிக்கக் கூசும் சொல்லை
ஊரையே நீ உச்சரிக்க வைப்பதா ?

இலக்கியத்தில் இடம்பிடிக்க – பெண்
இயல்பை நீ இழக்கலாமோ ?
‘பெண்மொழி ‘ என்று சொல்லி
பேய்மொழி பிதற்றலாமோ ?

வருங்காலம் உனக்கோர் இடத்தை
எப்படியும் வகுப்பதுண்டு!
வரலாற்றைப் புரட்டிப் பார்…காந்தியோடு,
‘கோட்சே ‘யும் இருப்பதுண்டு!

சங்கத்திலும் உள்ளதென்று – பொய்யைத்
தயங்காமல் உரைக்கின்றாய்!
சங்கத்தைக் கற்றதுண்டா ? – நீ
தங்கத்தைத் தொட்டதுண்டா ?

மலர் சேரும் வண்டிற்கு
மணிநா முடித்த மாண்புண்டு!
மான் பிணை கொண்டதென்று
மருவி நின்ற பெண்ணுண்டு!

நாரையே சாட்சி என்று
நவின்ற ஒரு நங்கை உண்டு!
அறத்தோடு நிற்றலென்ற
அற்றை நாள் மாண்புண்டு!

மரத்தை மூத்தாள் என்று
மன்னவனை மறுத்தாள் உண்டு!
சங்கத்தை சாட்சிக்கிழுக்கும்
சடமே! நீ தெளிவாய் கண்டு!

பண்பு கெட்ட உன்னிடம் – நான்
பண்பாட்டைக் கேட்கவில்லை!
உனைப் படிக்கும் வெளிநாட்டார்
உரைப்பரே!
எம் பெண்டிரையும் கேவலமாய்!!

உன்னிடத்தில் ஒன்று சொல்வேன்! அதை
உன்னவர்க்கும் உரைக்க மறவாதே!
‘எழுத்தில் பரத்தமை ‘ – அதை
இனிமேலும் தொடராதே!


பறவை தொலைத்த கூடு

தேடிக் கொண்டதில்லை – உற்றார்
தேடித் தந்த உறவு!
ஆலாய் நான் தழைக்க – ஆணி
வேராய் உந்தன் வரவு!
இன்றும் என் நினைவில்…
கதவிடுக்கில் நீ நின்றதும்,
கை மட்டும் தண்ணீர் தந்ததும்!
என் ஒவ்வொரு அசைவிலும்
அர்த்தம் உணர்வாய் நீ!
உன் பனிப் பார்வையில்
பக்குவம் அடைவேன் நான்!
சொல்லிப் புரிந்ததைவிட
சொல்லாமல் தெளிந்தது
ஏராளம்… நமக்குள்!
அதட்டியும்
அடிபணிய வைப்பேன் உன்னை…
தலைகுனிந்து மவுனமாய் நிற்பாய்,
என் அதட்டலுக்கும்…அவ்வப்போது
வெளிக்காட்டும் அன்பிற்கும்!
ஆசை முளைக்கையில்
அரும்பிய காதல்,
மீசை நரைக்கையில்
முழுமை கொண்டதோ ?!
கலவி தீர்ந்த நாளில் தான் – உண்மை
காதலை நாம் கண்டுகொண்டோம்!
கருத்தினில் ஒன்றாய்
கலந்து நின்றோம்!
எழுபதைத் தாண்டிய இன்றும்கூட..
மொழிபெயர்க்கத் தெரியவில்லை,
உன் மவுனத்தையும்
என் காதலையும்!
நான் இல்லாத ‘நீ ‘ க்கு
நாளும் வகுப்பெடுத்தேன்!
‘நீ ‘ இல்லாத ‘நானை ‘
எண்ணவும் நான் மறந்தேன்!
இதோ,
என் முன்னே
கூடிழந்த பறவையாய் நீ!
உன் முன்னே
பறவையைத் தொலைத்த கூடாய் நான்!
மணக்கோலத்தில்
மணவறை ஓரத்தில்
மெட்டி மாட்ட என் விரல் நீள
‘வெடுக் ‘கென்று காலை
இழுத்துக் கொண்ட உன் வெட்கம்….
நேற்று வரை உன்னோடு!
வெறும் நினைவு மட்டும்
இன்று என்னோடு!
நீரில் மூழ்குபவனுக்குத்தான் தெரியும்,
உயிரைவிட
கோவணத்தின் அருமை!
மானம் காத்தவள் நீ! – இன்று
மண்ணிற்குத் துணையாய்…
விண்ணிற்கு உறவாய்…
‘என் முன் வாய் திறக்க மாட்டாள் ‘
மார் நிமிர்த்திச் சொன்னதுண்டு!
மவுனம் மரணத்தின் கொடிது….
மண்டியிடுகிறேன் இன்று!
தடியூன்றி நான் வந்தால் – தினமும்
கையூன்றி எழுந்து நிற்கும் நீ…
உன் கால் பிடித்துக் கலங்கும்போதும்
காணாத உறக்கத்தில்…!
கலையாத மவுனத்தில்…!
உன்னோடு வாழ்ந்ததெல்லாம் – உன்
நினைவோடு வாழ்வதா! ? – இல்லை
மண்ணோடு புதைந்து
உன்னோடு கலப்பதா ?! – அருகே
விண்மீனாய்ிி முளைப்பதா ?!
கண்மூடிப் பார்க்கிறேன்….
உள்மனத்தின் உள்ளே,
உணர்வாய்…
என் உயிராய் நீ!
கண்திறந்து பார்க்கிறேன்….
சன்னலுக்கு வெளியே
என் வானமாய்…
காணும் வண்ணமாய் நீ!


manavazhahan_arumugam@yahoo.com

Series Navigation

author

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்

Similar Posts