கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

இளைய அப்துல்லாஹ்


ஆத்மார்த்தம்

—-
அவன் தர முடியாத எல்லாவற்றையும்
நீ தருகின்றாய் உள்உரமாக உன்னிலும் மேலானதை
என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில்
நான் திளைக்கும்படிஸ

என் எல்லா உணர்வுகளின்
நேரங்கள் பவித்திரமானவை
அவை அவனுக்கானவை ஆனால்
உன்னிடம் தான் இருக்கின்றன.

என் ஆகர்ஷிப்பை நீ சுவாசமாக்கியதனால்
என்னுள் நீ பஸ்ப்பமானாய்
உன்னை என்னுள் புகுத்தி
அல்லது பத்திரப்படுத்தி
எனக்குள்ளாகவே இருத்திக்கொள்வேன்.

எக்காலத்திலும்
அவன் உன்னாக ஆக முடியாது
நெடுங்காலமான சிறுமைகளை விட
உன் நொடிப்பொழுதும் திருப்தியும்
என்னோடு ஸ்பரிசிக்கும்.

எனது சுய சிந்தனையின் தெளிவிலும்
விகர்ஷிப்பிலும் உன்னுள் என்னை
செலுத்துவதை விரும்புகிறேன்.

அது உயிரில் உயிர் மீதான
ஒருவகை கேளிக்கை.

நான் எப்பொழுதும் நானாக
இருந்தபடிக்கு உன் நேசங்களை
எல்லாப்பொழுதிலும் சுதந்திரமாக உணர்வேன்.

ஏனெனில் நான் சுதந்திரமானவள்.


அது
—-
அந்த உற்பவிப்பு எல்லோருக்கும்
வாய்க்காதது.
ஒரு முகிழ்த்தல் போலத்தான்.
முகிழ்த்தல் என்பது எவ்வளவு அற்புதம.;

பூக்கள்,விதைகள்,குழந்தை,மனம்,என்றபடிக்கு
முகிழ்த்தல் அகலும்.
ஒரு மெனளத்துள்; ஆழ்வதும்
அதனை ஸ்பரிஸிப்பதும் ஒரு முகிழ்த்தல்தான்

ஒரு சூழலுக்கு இயைவதும்
சூழல் எமக்குள் புகுவதும் இன்பம்
மென்புல் வெளியில் மெதுவாய் இறகசைத்து
சிறு குருவி நுழைவதும் மென்மை

மனத்திடை சில நேரம் உதிர்த்தும்
மென் இழைகள்,நெகிழ்வுகள்,மெல்லியகாதல்,
ஒரு பச்சாதாபம் எல்லாமே
அற்புதம் நிகழ்த்தும் முகிழ்த்தல்கள்.

எரியும் தீயிடை ஊன் உருகுவதுமாகி
எந்த ஒப்பனையுமற்றதும்
எதிர்கால அச்சமின்மை பற்றிய உறுதியும்
உள் மனதில் அது பற்றிய ரீங்காரமும்
எப்பொழுதும் ஒரு வகை உச்சாய்ப்பில் கிளர்வதும்

வெண்பனியிடை மெல்லிதழ் தொடுவதாய்
உணர்வதும் எல்லாக்காலங்களும்
எல்லாப்பாதைகளும்
நந்தவனத்தை நோக்கியதாய்
அமைவது போலவும்

இருப்பது ஒன்றெனில்
அது காதல் தானே.


இளைய அப்துல்லாஹ்
இலங்கை

Series Navigation

author

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்

Similar Posts