மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

தமிழில் : சுகுமாரன்


ஐந்து
@

அந்த அறையிலிருந்த ஏழை
உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும்
அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும்
ஏற்றுக்கொண்டிருந்தது,
கடின இதயமுள்ள மரணமே,
இரும்புச் சிறகுள்ள பறவையே,
உன்னையல்ல.
ஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை
துணிவுடன் முன்வராத ஓர் அணுவை
ஒருபோதும் வியர்வையாக மாறாத ஒரு பனித்துளியை.
ஒருபோதும் அது மறுபடிப் பிறக்கவில்லை
இரங்கற்பாடல் பெறாத மரணத்தின் துகள், வெறும் எலும்பு,
உள்ளுக்குள்ளேயே நொறுங்கிப்போன ஒரு தேவாலயமணி.

அயோடின் நாறும் இந்தக் கட்டுகளை அவிழ்த்து
மரணத்தை மென்மையாக்கிய நோவுகளுக்குள்
என் கைகளை நுழைத்தேன்.
ஆன்மாவின் இடைவெளிகளைச் சில்லிடச்செய்யும்படி வீசும்
காற்றைத்தவிர
வேறு எதையும் அந்தக் காயத்தில் நான் சந்திக்கவில்லை.
—-
ஆறு
@

பூமியின் ஏணியிலேறி
முள்நிறைந்த காட்டுப்புதர்கள் வழியாக
உன்னை வந்தடைந்தேன், மாச்சு பிச்சு!

வெட்டுப்பட்ட படிகளால் உயர்ந்த நகரம்
பூமி அதன் இரவு உடைக்குள்
ஒருபோதும் ஒளித்துவைக்காத கடைசிப் புகலிடம்.
உன்னுள்
இணையாகப் போகும் இருவேறு மரபுகள் சந்திக்கின்றன.
அங்கே
மனிதனையும் வெளிச்சத்தையும்
தொட்டிலாட்டும் முட்களின் காற்று.

கல்லின் தாய், கழுகுகளின் விந்து.

மனித உதயத்தின் பாறைத்தொடர்.

ஆதிமணலில் புதைந்த மண்வெட்டி.

இதுதான் அந்த வாழ்நிலம்;
இதுதான் அந்த இடம்.
இங்கேதான்
செழித்த சோளப்பயிர்கள் நிமிர்ந்து வளர்ந்தன…
சிவந்த வந்தனம்போல மறுபடியும் தாழ்ந்துகுனிய.

மனிதர்களின் ஆசைக்கும்
அவர்களது கல்லறைகளுக்கும்
அன்னையருக்கும் அரசனுக்கும் வழிபாடுகளுக்கும் போர்வீரர்களுக்கும்
உடையணிவிக்க
செம்மறியாடுகளின் தங்கரோமம்
கத்தரிக்கப்பட்டது

இங்கேதான் இரவில்
மாமிசம்திணித்த கூட்டிலிருக்கும் கழுகுகளின் நகங்களும்
மனிதர்களின் கால்களும்
அருகருகே இளைப்பாறின.
விடியலில்
இடிமுழங்கும் காலடிகளுடன்
கலையும்பனிமூட்டத்தில் நடந்து
மண்ணையும் கல்லையும் தொட்டறிந்தார்கள்.
வரவிருக்கும் இரவையும்
வரவிருக்கும் மரணத்தையும்
அந்தத் தீண்டலில் அவர்கள் புரிந்துகொண்டிருக்கலாம்.

உடைகளையும் கைகளையும்
வெறித்துப் பார்க்கிறேன் நான்.
ததும்பி நிறையும் தொட்டிநீரின் சுவடுகளையும்
இதே கண்களால் பார்க்கிறேன் நான்.
பூமியின் கம்பளம்போலச் சரியும் பரப்பைப்
பார்த்து நின்ற ஒரு முகத்தின் ஸ்பரிசத்தால்
தேய்ந்துதேய்ந்து மென்மையான சுவரையும் பார்க்கிறேன்.
எனது இதே கைகளால்
எண்ணெய் பூசி மெருகிடப்பட்ட மரப்பலகைகள்
உடைகள், தோல், பாத்திரங்கள், சொற்கள், மது, ரொட்டித்துண்டுகள்…
எல்லாம் மறைந்துவிட்டன
மண்ணுக்குள் விழுந்துவிட்டன.

காற்று
எலுமிச்சை மலர்களின் விரல்களுடன்
உறங்கும் முகங்களைத் தொடவந்தது.
காற்றின் ஆயிரமாண்டுகள்
காற்றின் வாரங்கள்
காற்றின் மாதங்கள்
நீலக் காற்றின் இரும்புத்தொடர்களின் ஆயிரமாண்டுகள்
தனிமையில் நிற்கும் கற்களைக் கழுவ
மெல்லிய காலடிகளுடன்வரும் புயலின் ஓராயிரமாண்டுகள்.

—-
ஏழு
@

ஒரே இருட்குழியில் மடிந்தவர்களே,
ஒரே மலையிடுக்கின் ஆழத்து நிழல்களே,
உங்களது மகத்துவம் நோக்கி
உண்மையான, சகலத்தையும் விழுங்கும் மரணம்
இப்படித்தான்
துளைவிழுந்த பாறைகளிலிருந்து,
செந்நிற சுவர்ப்புடைப்புகளிலிருந்து,
அருவியாகப் பெருகும் வாய்க்கால்களிலிருந்து வந்தது.
ஓர் இலையுதிர்காலம்போல
நீங்கள் தடுமாறி ஒற்றை மரணத்துக்குள் விழுந்தீர்கள்.
இன்று, வெறும் காற்று
உங்களுக்காகத் துக்கப்படுவதில்லை.
உங்களது களிமண் கால்களை உணர்வதில்லை.
மின்னலின் கத்திகள் வானத்தை வெட்டியபோதும்
வலுவான மரம் காற்றால் வீழ்த்தப்பட்டு
பனியால் விழுங்கப்பட்டபோதும்
ஆகாயத்தை வடிகட்டிய
உங்கள் பாத்திரங்களை நினைக்கவில்லை.

அது உயர்த்திய கை சட்டென்று
சிகரங்களிலிருந்து காலத்தின் ஆழத்தில் எறியப்பட்டது.
நீங்கள் இப்போது இல்லை.
சிலந்தி விரல்கள், மெல்லிய இழைகள், பின்னப்பட்ட துணி…
நீங்கள்
என்னென்னவாக இருந்தீர்களோ, அவையெல்லாம்-
சடங்குகள், சிதிலமான சொற்கள்,
கண்கூசச் செய்யும் வெளிச்சத்தின் முகமூடிகள்…அவையெல்லாம்
உதிர்ந்து போயின.

எனினும்
கல்லிலும் மொழியிலும் நிரந்தரமாயிற்று ஒன்று.
உயிருள்ளதும் இறந்ததும் விறைத்ததுமான
ஒவ்வொரு கையும்
ஒரு குவளைபோல அந்த நகரத்தை உயர்த்தின.
ஏராளமான மரணங்களால்
தாங்கி நிறுத்தப்பட்ட அந்த மதில்,
ஏராளமான வாழ்வுகளால்
உராயப்பட்ட நெருப்புக்கற்களின் இதழ்கள்,
வாடாத ரோஜா, நமது வீடு, ஆண்டாஸ் மலைத்தொடர்கள்,
அதன் பனிபடர்ந்த எல்லைகள்.

களிமண் நிறக் கை
முழுவதும் களிமண்ணாக மாறியபோது,
தாக்கப்பட்ட சுவர்கள்மீதும்
கொத்தளங்கள் மீதும்
குறுகிய இமைகள் மூடியபோது,
நம்முள்ளிருந்த எல்லாரும்
மறுபடியும் வளைக்குள் ஒடுங்கியபோது,
மானுட விடியலின் சிகரங்களின்மேல்
கலையாத துல்லியமாக மிஞ்சியது:
எப்போதும் நமது மெளனத்தை நிறைத்துவைத்திருக்கும்
இந்த நீண்ட குவளை.
ஏராளமான வாழ்க்கைகளைக் கடந்த
இந்தக் கல்லின் வாழ்வு.

—-
மாச்சுபிச்சுவின் சிகரங்கள்

எட்டு
@

என்னுடன் வா, அமெரிக்கக் காதலியே!

என்னோடிணைந்து இந்த மர்மக்கற்களை முத்தமிடு.
உருபம்பா நதியின் வெள்ளிநீரோட்டம்
மகரந்தத்தை அதன் தங்கக்கிண்ணத்தில் பறந்துவிழச் செய்கிறது.
குருட்டுக்கொடிகளின் புதர்,
உறைந்த தாவரம்,கட்டறுபடாத பூமாலை – எல்லாமும்
இந்தப் பெட்டகத்தின் மெளனத்திலிருந்து
உயரப் பறந்துபோகின்றன.
பூமியின் சிறகுகளுக்கிடையில்
குறைபட்ட வாழ்வே வா,
அறையும் காற்றில் செதுக்கப்பட்ட ஸ்படிகமே,
கானக நீரே,
படையெடுப்புக்காக அணிவகுத்து நிற்கும்
மரகதங்களைப் பிளந்து
பனியின் விளிம்பிலிருந்து விழு.

ஆண்டாஸ் மலையின் நெருப்புக் கற்களிலிருந்து
இரவு சரிந்து
விடியலின் பாதம் தொடும்வரை
காதல்செய், காதல்செய்.
பிறகு வெளியே வந்து
பாடிக்கொண்டிருக்கும்
பனியின் குருட்டுச் சந்ததியைப் பற்றிச் சிந்தனைசெய்.

ஒலிக்கும் தறிகளின் வில்கமயுவே,
காயம்பட்ட பனிப்படலத்தின் வெண்நுரையில்
உனக்கு பிதுரார்ஜிதமாகக் கிடைத்த
இடிகள் முழங்கும்போது,
உனது தென்திசைக் காற்று
பனிமலை சரிவதுபோல உறுமி
ஆகாயத்தை எழுப்ப உயரும்போது,
உனது ஆண்டியன் சதுப்பிலிருந்து
ஒரு கணம் விடுபட்ட சொல்லை
என்ன மொழியில் உச்சரிப்பாய் நீ ?

குளிரின் மின்னலைக் கைப்பற்றியதும்,
கைவிட்டதும்,
மலைச்சிகரங்களில் அதைக் கட்டியிட்டதும்,
உறைந்த கண்ணீருக்கிடையில்
அதைக் கைக்கொண்டதும் யார் ?
மெல்லிய வாள்களின்மேல் அது சுழல்கிறது
அதன் பதமான சூலகங்களில் தாக்கப்படுகிறது
போர் வீரனின் படுக்கையறைக்கு இட்டுச்செல்லப்படுகிறது
அவனது
பாறைபோல இறுகிய முடிவுகளுடன் வேட்டையாடப்படுகிறது.

உனது மின்னல் வெட்டுக்கள்
கிசுகிசுப்பதென்ன ?
உனது ரகசியக்ககலமான மின்னல் வீச்சு
சொற்கள் நிரம்பிப் பயணம் செய்திருந்ததா ?
மிஞ்சியிருக்கும் உனது நுட்பமான நீரில்
அரைபடும் உறைந்த சொற்களாக,
கறுத்த மொழிகளாக, பொன்னிழைத் தோரணங்களாக,
அடியாழமில்லாத உதடுகளாக,
ஒடுக்கப்பட்ட அலறல்களாக
அலைவது யார் ?

தொலைதூர பூமியிலிருந்து நம்மைக் காணவரும்
பூக்களின் இமைகளை வெட்டியெறிவது யார் ?
நிலக்கரியின் பரப்பில் அவர்கள் சிதைந்து மடிய
அருவியாகத் துள்ளும் உனது கைகளிலிருந்து
இறந்த விதைகளைத் தட்டிச் சிதறச் செய்வது யார் ?

இந்தச் சங்கிலிகளின் கிளைகளைத்
தொங்கவிட்டது யார் ?
நமது விரகத்தை மீண்டும் புதைத்தது யார் ?

அன்பே, அன்பே,
விளிம்புகளுக்கு அருகில் வராதே!
புதையுண்ட தலையை வழிபடாதே!
தீர்மானங்களை முறிக்கும் தனது உறைவிடத்திலிருந்து
எல்லா செயல்களையும் காலம் தீர்க்கட்டும்.
இங்கே
மலைச்சரிவுகளுக்கும் பெருக்கெடுத்தோடும் நீருக்குமிடையில்
இந்தக் கணவாய்களுக்கு மத்தியில்,
ஒளி ஊடுருவும் படிமமாக வீசும் காற்றை
உயர்ந்த மலைகளைக் குடைந்தோடும் நீரோடையை
கசப்பு வாழ்த்துக்கள்கொண்ட பனித்துளியை
உள்வாங்கி
ஒவ்வொரு மலராக
அடர்ந்த வனத்தினூடே
படர்ந்திருக்கும் சாத்தானியக் கொடியை
மிதித்து விலக்கி மேலே ஏறி வா!

கல்லும் கானகமும்
பச்சைநிற நட்சத்திரத் துகள்கள்
தெளிந்த ஆகாயம்…
உயிருள்ள தடாகம்போலவோ
மெளனத்தின் புதிய தளம்போலவோ
மாண்டூர் பள்ளத்தாக்கு பிளந்து திறக்கிறது.

எனது வாழ்க்கைக்கு வா,
எனது விடியலுக்கு வா,
எனது தனிமையின் உச்சங்கலுக்கு வா.

வீழ்ந்த பேரரசு
இப்போதும் பிழைத்திருக்கிறது.
இந்தக் கற்தளத்தின் மேல்
சூறையாடப்போகும் கொள்ளைக்கப்பல்போல
கழுகின் நிழல் விரைகிறது.
—-

ஒன்பது
@

நட்சத்திரங்களால் சூழப்பட்ட கழுகு, மூடுபனியில் திராட்சைத் தோட்டம்.

கைவிடப்பட்ட பிரகாரம், குருட்டுக் கொலைவாள்.

நட்சத்திர ஒட்டியாணம், பரிசுத்த அப்பம்.

பாய்ந்திறங்கும் படிக்கட்டுகள், அளக்கமுடியாத கண்ணிமை.

முக்கோணமான உள்ளாடை, கல்லின் மகரந்தம்.

கருங்கல் விளக்கு, கல் அப்பம்.

உலோகப்பாம்பு, கல் ரோஜா.

புதைந்த கப்பல், கல் ஆதாரம்.

நிலவில் குதிரை, கல் வெளிச்சம்.

இரவு பகல் பிரியும் கால்வட்டம், கல்லின் ஆவி.

இறுதியான வடிவகணிதம், கல்லின் புத்தகம்.

காற்றின் சீறலுக்கிடையில் செதுக்கப்பட்ட பனிமலை.

மூழ்கிப்போன காலத்தின் பவளப்புற்று.

விரல்கள் தேய்த்து மென்மையாக்கிய கொத்தளம்.

சிறகுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கூரை.

கண்ணாடிக் கற்றைகள், புயற்காற்றின் அடித்தளங்கள்.

படரும் திராட்சைக்கொடிகளால் சிதைந்த சிம்மாசனங்கள்.

மலைச்சரிவில் நிலைத்து நிற்கும் புயற்காற்று.

நிச்சலனமான மரகத அருவி.

உறங்கியவர்களின் பாரம்பரிய மணியோசை.

கீழ்ப்படுத்தப்பட்ட பனித்திரளின் கைவிலங்கு.

சிலைகளில் நிமிரும் இரும்பு.

அடையமுடியாத மூடப்பட்ட புயல்.

சிறுத்தைப் பாதங்கள், இரத்தக்கல்.

உயரும் நிழல், பனியின் விவாத அரங்கு.

விரல்களிலும் வேர்களிலும் கொடியுயர்த்திய இரவு.

மூடுபனியின் ஜன்னல், இதயமற்ற புறா.

இரவின் தளிர்ப்படர்ப்பு, இடிமுழக்கத்தின் பிம்பம்.

மலைத்தொடரின் முதுகெலும்பு, கடலின் கூரை.

வழிதவறிய கழுகுகளின் கட்டிடவடிவம்.

ஆகாயத்தின் கயிறு, ஹூங்காரத்தின் உச்சம்,

இரத்த அளவு,செயற்கை நட்சத்திரம்.

உலோகக் குமிழ், ஸ்படிகத்தின் நிலவு.

ஆண்டாயப்பாம்பு, வாடாமல்லியின் நெற்றி.

மெளனத்தின் மாடம், களங்கமில்லா வீடு.

கடலின் மணமகள், தேவாலயத்தின் மரம்.

உப்பின் கிளை, கருஞ்சிறகுள்ள செர்ரி மரம்.

பனிமூடிய பற்கள், குளிர்ந்த இடி,

பயந்த நிலவு, பயமுறுத்தும் கல்.

குளிரின் சிகை, காற்றின் உராய்வு.

கைகளின் எரிமலை, இருண்ட அருவி.

வெள்ளி அலை, காலம் சேருமிடம்.

—-
sukumaran@sunnetwork.org

Series Navigation

author

சுகுமாரன்

சுகுமாரன்

Similar Posts