தமிழ்மணவாளன் கவிதைகள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

தமிழ்மணவாளன்


கடவுளர் குளம்

உழவாரப்பணிக்கான உத்தரவு வந்து

ஆழப்படுத்தும் வேலையை

அமைச்சரொருவர் தொடங்கி வைக்கிறார்

குதூகலமாய் சூழ்ந்து நிற்க

பிரமாண்டமானவக் கோயிலின்

மையத்தில்

ஏழாம் நூற்றாண்டு பேரரசரொருவர்

ஆன்மீகம் வளர்க்கத்தோண்டிய

குளக்கரையில்

அலங்காரங்களோடு ஆண்டவன்

ஊர்வலமாய்

வாத்தியங்கள் முழங்க

வாணவேடிக்கையோடு நன்னீராடும்

நாள்திருநாளாய்.

‘மழை நீர் சேமிப்போம்

உயிர்நீர் காப்போம் ‘

சேமிக்கத்தயாரான பிறகும்

பெய்யாத மழைக்கு பெரிதும் எதிர்நோக்கி

வரண்டதுகுளம் வானம் பார்த்து.

நான்காண்டுகள் ஆனது

நன்னீராடி

கர்ப்பக்கிரகத்தில்

அபிஷேகக் குளியல் அலுத்துத்தான் போகும்

மூழ்கிஎழுவதற்கும்

முலாம் பூசுதற்கும் இடையே உள்ள

வித்தியாசத்தில்.

தூர்வார, தூய்மைப் படுத்தி

வாகனங்கள் வழியே

கொண்டுவந்த தண்ணீர் நிரப்பி

திருவிழாவுக்குத் தயாரானது

கடவுளர் குளம்.

நிரப்பிய நீரில் நீந்திப் போயின

இரண்டு மீன்கள்

தம்பதி சமேதராய்

கரையில் நின்றவர்

கடவுளர்குளம் நிரப்பிய திருப்தியில்

பாடலாயினர்

‘ ‘அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி

நாடு செழிக்க நல்லமழை பெய்யணும்

கண்மாய் நிறைய கனமழை பெய்யணும் ‘ .

புதிய திறப்பு

—-

பின்புறம் விரிந்த பெருங்காட்சியரங்கில்

டொடங்கியது நாடகம்

அத்தனை துரிதமாய் மேடையை

மாற்றிடும் சாத்தியம் அபரிமிதமானது.

கண்ணெதிர் தூரப் பரப்பெங்கும்

பெரும்பள்ளங்கள்

மறைந்திருக்கக் கூடும் யாருமென்ற

அச்சத்தால் பயனில்லை

பின்னங்கால் எகிற ஓடுகிறேன்

துரத்தலின் அச்சம் அதனினும் கொடுமையானது.

வெகுதூரம் ஓடிய என்னுருவம்

என்னை விட்டு மறைய

வெல்வெட் துணி போர்த்திய

படுக்கையில் மெத்தென

வீழ்ந்து கிடக்கிறேன்.

சுவாசத்திடையே யாரோ

சன்னல் வழிபார்ப்பது

நிர்வாணமாய் நெஞ்சில் கவிழ

குப்புறப் படுத்துக் கொள்கையில்

கொலுசுகள் சப்தமிட

அவ்வப்போது குறுக்கும் நெடுக்குமாய்

சந்தனா

வந்து போய்க் கொண்டிருக்கிறாள்

உள்வந்தவளின் கைப்பற்றி

சிறைப்படுத்த

வெளிச்சம் வழிகிறது

புதிய திறப்பினூடே.

இயலாமை

—-

பொங்கிப் பிரகவித்து சிறுகுன்றென முன்னகர்ந்து

சோர்கிறது பேரலை

எதையோ சொல்ல நினைத்து

சொல்ல முடியாமல் போன கோபத்துடன்.

ராட்சச முயற்சியும் பலனின்றிப் போக

எழுந்த இயலாமையின்

இரைச்சலாய்

பிரமாண்டத்தின் செய்தியை

சேர்ப்பிக்கவியலாமல்

மார்பிலடித்தபடி மடிகிறது

சொல்வதற்கு தருணமும்

சொல்வதிலொரு லாவகமும்

மிகமுக்கியம்

வெகுநேரக் காத்திருப்புக்குப்பின்

திரும்ப எத்தனிக்கையில்

ஆற்றாமையில் சப்திப்பது தொடர்கிறது

சொல்லமுடியாமையின்

பெருஞ்சோகமும் இழப்பும்

எனக்குத்தான் தெரியும் உனக்கென்ன.

நதியுடன் வாழ்கிறவள்

—-

நதியின் கரையோரம் பிறந்து,அந்த

நதியுடனே வாழ்ந்து வருபவள் அவள்.

நூற்றாண்டுகளாய் வளைய வளைய

வந்து கொண்டிருக்கும் அவள் குறித்த கதைகள்

ஏராளமாய் கேட்டதுண்டு.

அகண்ட வெள்ளிப் பாயென

ஓடும் நதியில்

பலமுறை குளித்தெழுவாளாம்

இருகரை தொட்டோடும்

நீர்ப்பெருக்கின் குறுக்கே நீந்தி

கரையேறும் போதுதான் பெண்ணென தெரிவாளாம்.

நீருக்குள் இருக்கும் போது

மீனாகவே மாறிவிடுவாள் என்பதவளின்

நீச்சல் சிறப்பாலும் இருக்கக் கூடும்.

படித்துறையில் வழிந்தோடும் நீரில்

பாதத்தைத் தொங்க விட்டு

பச்சை நாணல்களைக் கொத்தாய்ப் பிடித்தபடி

நதியோடு சேர்ந்து ராகமிசைப்பதை

நாளெல்லாம் பார்த்திருக்கலாம் என்போருண்டு.

ஆடிப்பெருக்கில் ஆயிரமாயிரம் பேர்

குளித்தெழும் நாளிலிவள்

அரசியென குதூகலித்து நிற்பதும்,

கருவிழி உருட்டி

கன்னங்குழி விழ கபடமற்றுச் சிரிப்பதும்

நீரின் சுளிப்பென

சுழன்றோடித்திரிவதும் நினைக்கும் பொழுதே

சந்தோஷமானவை.

நீரிறங்க,

மனச்சோர்வு கொள்ளுமவள்

நடு ஆற்றில் ஓடும்

கொஞ்சம் தண்ணீரை அருகமர்ந்து

விரல் துழாவிக் கொண்டிருப்பாளாம்

கோடை நாளில்.

தண்ணீீரே இல்லாமல் போகுமோவென.

கவலையோடு. போனது

இப்போது

காய்ந்து கிடக்கும் மணல் வெளியாய்

நீர் போன பாதையெனும்

நினைவோடு நதியிருக்க

எங்கே போனாள் இங்கே வாழ்ந்தவள் ?

தூரத்தில் புள்ளியாய்.

அருகில் போய் பார்த்தால்

அவள் தான் கிடக்கிறாள்

காய்ந்த நாணல் கட்டென

விழிகளிலிருந்து உருவாகும் கண்ணீர்

விழுகிறது மணலில்

நதியின் ஈரமாய்.

(கரைதொட்டோடிய காவிரியின் நினைவுக்கு)

வயது நாற்பத்தி மூன்று

—-

எதற்கென இப்போது ‘ாபகமில்லை

என்னுடைய வயதைக் கேட்டாரொருவர்.

முப்பத்தொன்பது என்றேன் உடனே

முப்பத்தொன்பது… முப்பத்தொன்பது

இரண்டொரு நாளில் எனக்கொரு வாழ்த்து

நண்பரொருவர் ‘அனுப்பியிருந்தார்

‘நாற்பது வயதில் நலமுடன் வாழ்க ‘

மகிழ்ச்சி ஒருபுறம் மறைத்தேன் மறுபுறம்.

முப்பத்தொன்பது வயதெனச் சொல்லியே

மூன்று, நான்கு வருடங்கள் ஆனதும்

முடியாதினி மேலெனத் தோன்றிய ஒருநாள்

நண்பர் கேட்டதும், நாற்பத்தி மூன்றென்றேன்.

ஒருநாள் பொழுதில் ஏறிப்போனது

நான்கு வயதெனக்கு. பிறகென்ன

நாற்பது என்று சொல்வதென்றானபின்

ஒன்றென்ன, இரண்டென்ன, மூன்றென்ன.

உடனடியாக சிக்கல் இல்லை.

ஒவ்வொரு பத்தைத் தொடுகிறபோதும்

ஏற்படக்கூடும் இதுபோல் எண்ணம்.

என்றன் மனத்தில்; உங்களுக்கெப்படி.

(அதற்குத் தக தொகுப்பிலிருந்து)

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

author

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்

Similar Posts