வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

வெண்ணிலாப்ரியன்.


சித்திரை பத்து
பெளர்ணமி ராவுல
மொத்தச்சனமும்
குமிஞ்சி கெடக்கும்
மந்தமாச் சிரிக்கும்
அய்யனார் வாசல்லெ.

‘என்னப்பா இது ‘ன்னு
எதுக்கெடுத்தாலும்
சந்தேகம் கேக்கும்
அஞ்சாப்பூ காயத்ரிப்புள்ளக்கி
அணில் முட்டை காட்ட
கம்மாக்கரக்கி கூட்டிப்போயி
கன்னத்துல
முத்தங் கேப்பேன்
அணில் முட்டைக்கி அட்வான்ஸா!

ஆடிக்கொடையின்
அஞ்சாம் நாள் கருக்கலில்
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
பூசாரி மக பொன்னாத்தா
மஞ்சத்தண்ணி சிதறியடிக்க
‘தொம்மு தொம் ‘முன்னு
‘எல்லாம் ‘ ஆட சாமியாடுவா
கன்னத்துல போடத்தான்
கையெடுத்து
இடுப்பைப் பிடிப்பேன்
மானசீகமா.

நாலு பக்கமும் வாயப்பொளந்து
வம்பு பேசும் தகரச்செட்டு
கட்டம் போட்ட வேட்டித்துணிய
கம்புல கட்டி
காட்டுவான் படம்
ஆளான காயத்ரிப்புள்ள
அழகான குஞ்சம் வெச்சி
மெரள மெரள
தாவணியில் வருவா
கண்ணு ரெண்டும் படத்தப் பாக்க
கட்ட வெரல்
தொடையைச் சொரண்டும்
பாம்பு பாம்புன்னு
பதறி எழுந்தவ
எல்லாஞ் சரியாக
என்னப் பாத்து
குஞ்சத்தை நிமித்தி
கோபத்தைக் காட்டுவா.

ஊரடங்கிப்போன
ஒரு பேய் புழங்கும் சாமத்துல
ஒத்த வீட்டு நாயி கத்தும்
ஒவ்வொன்னையும் நெனச்சி நெனச்சி
பூனைப்பாதம் பொத்தி வெச்சி
முள்ளுவேலி தாண்டிக்குதிச்சி
முத்தங் குடுத்துட்டு வருவேன்
எல்லை காக்கும்
வீரன் மனைவிக்கு
இலவசமா.

சேரிச்சிம்ரன் செவத்தப்பொண்ணு
மூணு மாசம் முழுகாம
ஊருவெச்ச பஞ்சாயத்தில்
நா ஒருத்தன் தான்னு
அவ கையக்காட்ட
ஏழெட்டுப்பேர்க்கு
பழக்கம் அவள்ன்னு
நெஞ்சறிஞ்சு
சொன்னேன் சாட்சி
ஏஞ்செவத்தப்பொண்ணே சிம்ரனு
செஞ்சதெல்லாம் தப்பு
மன்னிச்சுக்கோ மகராசின்னு
இருட்டுக்கோழி சாட்சி வெச்சி
ஊர்ப்பயணம் பொயிட்டு
ஒண்டியா வரும்போது
சுடுகாட்டுல நின்னு சொல்வேன்
செவத்தப்பொண்ணு செத்தவாரம்.
சிரிக்கும்
என் பேய் மனசு.

எல்லாந் தெரிஞ்ச
நெறஞ்ச நெலவு
எடுத்துச்சொல்லும்
கணக்கு வெச்சி

தொடை பாத்து கிளர்ச்சியடையும்
அனிச்சையான
ஆண் குறியாட்டம்
எச்சில் விட்டு போன மச்சான்
மிச்சம் மீதிய மோந்து பாக்க
எந்திரிப்பான் நெஞ்சு தூக்கி

கவட்டுக்கம்புல இறுக்கி அழுத்தி
எலந்தக் கம்பால இழுத்து அடிப்பான்
இது எதுவுந்தெரியாத வெட்டியான்
எல்லாத்துக்கும் பரிசா.

வெண்ணிலாப்ரியன்.
yemkaykumar@yahoo.com

Series Navigation

author

வெண்ணிலாப்ரியன்.

வெண்ணிலாப்ரியன்.

Similar Posts