கவிதை

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

கோமதி நடராஜன்


எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
இருந்துதான் பார்ப்போமே.
விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித்
தூணாகத் துணை நின்றேன்.
அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான்
தப்பானவனானேன்.
அடிபட்டவனை அரவணைத்து
ஆறுதல் கூறி ஆற்றினேன்.
அவனை,அடித்தவனுக்கு நான்
ஆகாதவனானேன்
அழுதவனை அருகிலிருத்தி
விழிநீரைத் துடைத்தெறிந்தேன்.
அவனை அழவைத்தவனுக்கு நான்
அதிகப்பிரசங்கியானேன்.
ஒரே காரியத்தினால்,நான்,
ஒருவனுக்கு வேண்டியவனானேன்
மற்றொருவனுக்கு வேண்டாதவனானேன்.
‘எல்லோருக்கும் நல்லவனாக இரு ‘
எல்லோரும் சொல்கிறார்கள்.
ஒரு நாள்-
அடித்தவன் அடிபட்டு நின்றான்,
படட்டும் என்று ஓடவா ?
பக்கத்தில் சென்று தேற்றவா ?
அழவைத்தவன் அழுது நின்றான்
அழட்டும் என்று விடவா ?
அள்ளி அணைத்து ஆற்றவா ?
தள்ளிவிட்டவன், விழுந்து கிடந்தான்
கிடக்கட்டும் என்று போகவா ?
கிட்டே சென்று தூக்கவா ?
இவர்களுக்கு நண்பராகவா ?
அவர்களுக்குப் பகைவராகவா ?
இயலாத ஒரு காரியத்தை,எல்லோரும்
மிக எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள்
‘எல்லோருக்கும் நல்லவனாக இரு ‘
—-

ngomathi@rediffmail.com

Series Navigation

author

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

Similar Posts