இரு கவிதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

மனஹரன் – மலேசியா


சுவர்க்கம்
மனஹரன் – மலேசியா

நான் வீணைதான்

நீ

மீட்டிய பிறகு

தெரிந்து கொண்டேன்

உனக்கு

விரல்களே இல்லை

—-

மீண்ட சொர்க்கம்
மனஹரன் – மலேசியா

இன்னும் வெளிச்சங்கட்டும் வாலிபத்தை

வீட்டுக்குள் முடக்க வைப்பது

நியாயம்தானா ?

இன்னும்

பச்சை படரும் பருவதற்கு

பாசாணம் வார்ப்பது

முறைதானா ?

சொல்

வெள்ளையடிக்கும் முன்னே

வெளுத்துவிட்டதாய்

வாழ்க்கையை விரட்டுவது

சரிதானா ?

நம்மில்

பலரின் படுக்கையறைகள்

சாந்தி முகூர்த்தத்திற்குப் பின்

வாசம் வீசுவதில்லை

கரை கண்ட கட்டிலும்

அமுங்கி கிடக்கும் மெத்தையும்

மருத்துவமனையையல்லவா

ஞாபகத்திற்குக் கொண்டுவரும்

மங்கையர் பலர்

மாதவிடாய் நின்றதும்

தாம்பத்தியம் அற்றுப்போனதாய்

கருதி முடிக்கின்றனர்

பெண் பிள்ளை

பெரியவள் ஆனதும்

படுக்கையில்

அவளுக்குத் துணைச்செல்லும்

தாய் மார்களே

அவளுக்கு கூட்டல் என்றால்

உங்களுக்கு கழித்தலா ?

விடுபடும் சொந்தத்திற்காகச்

சொர்க்கத்தின் பாதைகளை

ஓரங்கட்டி வைப்பதா ?

முதல் முத்தம்போல்

முனகலெல்லாம்

தினம் தினம்

காதுக்குள்

ரீங்காரமிட வேண்டும்

ஒவ்வொரு காலையும்

வெட்கத்துடன்

விடிய வேண்டும்

ரெட்டை நரை கண்டவுடன்

பூஜையறை கதவுகளை

திறந்துவிட்டு

வாழ்க்கையை மூடி விடாதீர்கள்

படுக்கையறையும்

வாசம் வீசட்டும்

நாளொரு பூஜையும்

பொழுதொரு விரதமும் எடுப்பது

எந்தத் தாகத்தைத்

தீர்ப்பதற்காக ?

தினம்

முத்தமிழைப்போல்

முப்பாலைப்போல்

மும்முறையாவது முத்தமிடுங்கள்

சொற்கள் முடமாகி

அதரங்கள் உரசட்டும்

வாழ்க்கையின் விரசம்

உயிர் பெறும்

இறுக்கம் பெருகும்

இடைவெளி

விவாகரத்துப் பெற்று ஓடும்

வயதாகிவிட்டதென்று

நினைத்துக் கொண்டிருக்கும்

மனைவி மார்களே

மார்க்கச்சை அளவுகளைக்

குறைத்துக்கொள்ளுங்கள்

வயது குறைந்து நிற்கும்

படுக்கையறையில்

போர்வை இரண்டுபட்டால்

இறுக்கம் விலகி நிற்கும்

பிரிவு பிரிவு கேட்கும்

வயதாகிவிட்டதென

முடிவு செய்து விட்டவர்களே

திருமண விழாவிற்கு

இருவரும் செல்லுங்கள்

சாவுக்குப்போவதை

நிறுத்துங்கள்

அந்த வருத்தமே

பாதி வாழ்க்கையை

மென்றுவிடும்

வயதாகிவிட்டால் என்ன ?

கைகோத்து நடங்கள்

உள்ளங்கை ஸ்பரிசம்

உள்ளத்தில்

மீண்டும் பரிசம் போடும்

இருவரும்

ஒன்றாக உணவருந்துங்கள்

இருவரும்

ஒன்றாக படுக்க செல்லுங்கள்

இடைவெளி குறைந்து

உயிர் பிரியும்

வாழ்க்கை வாழ்வதற்கே

அதில்

குறைப்பதற்கும் முடக்குவதற்கும்

நாம் யார் ?

—-

kabirani@tm.net

Series Navigation

author

மனஹரன் மலேசியா

மனஹரன் மலேசியா

Similar Posts