இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

கி. சீராளன்.


ஒரு கவிஞனின் அகராதி

‘ ‘கவிதை ‘ ‘ என்பது காதல் வந்ததும்

தடுமாறும் வாக்கிய கோர்ப்பு

‘ ‘காதல் ‘ ‘ என்பது

கவிதை எனும் உளறலை

தூண்டிவிடும் மதுக்கஷாயம்.

‘ ‘நிலா ‘ ‘ எனப்படுவது

எல்லா கவிஞர்களுக்குமான

ஒரே காதலி;

எல்லா காதலிகளுக்குமான

ஒரே உதாரணம்;

எல்லா காதலிகளைப் போலவும்

மாதத்தில் ஒரேநாள்

சிரிக்கவைக்கும் பெளர்ணமி.

‘ ‘அழகு ‘ ‘ – காதல் குடிகொண்டபின்

எல்லாப் பெண்ணும், பொருளும்

காட்டும் பொலிவு.

‘ ‘முத்தம் ‘ ‘ – நிறைய நெருப்பை

உள்ளடக்கி

உரசிப் பார்க்கும் தீக்குச்சி.

‘ ‘ஊடல் ‘ ‘ – ஒருநாள் சந்தோஷ விளைச்சலுக்காய்

வருடமெல்லாம் காய்ந்து கிடக்கும்

வறட்சி.

‘ ‘காமம் ‘ ‘ – கரையேறியதும்

காணாமல் போகும் கானல் நீர்.

‘ ‘பயம் ‘ ‘ – எல்லாமும் முடிந்தபின்

தேவையின்றி உதிப்பது.

‘ ‘ஏமாற்றம் ‘ ‘ – எல்லாமும் முடிந்தபின்

மிஞ்சியிருப்பது.

‘ ‘கடற்கரை ‘ ‘ – ஜனசமுத்திரத்தின் நடுவே

தனிமையை அடையாளம் காட்டும்

மாயக் கம்பளம்.

‘ ‘தனிமை ‘ ‘ – என்பதொரு மாயை.

‘ ‘காத்திருப்பு ‘ ‘ – ஏமாற்றத்தை

உறுதி செய்துகொள்வதற்கான

கால அவகாசம்.

‘ ‘கண்கள் ‘ ‘ – செய்தி ஒளிபரப்பு

சாதனம்;

விட்டில்கள் வந்து மோதி

உயிரை மாய்க்கும் விளக்கு;

சிரித்தால் பல பாலைவனங்கள்

பூத்துக்குலுங்கும்;

நீர் சுரந்தால்

பல சாம்ராஜ்யங்கள்

மாண்டு போகும்.

‘ ‘சிரிப்பு ‘ ‘ – சின்னச்சின்ன

இடைவேளைகள்,

மூச்சுவாங்க.

‘ ‘அன்பு ‘ ‘ – மனிதக் கால்களில்

நங்கூரம்.

‘ ‘பூக்கள் ‘ ‘ – தனியே இருந்தால்

சுகந்தம்

தலையேறினால் விண்மீன்கள்.

‘ ‘திருமணம் ‘ ‘ – வாழ்வின்

மின்சாரம் பறிக்கப்படுவதற்கான

முகூர்த்தம்.

‘ ‘வாழ்க்கை ‘ ‘ – நிலக்கரி தீர்ந்துபோன

நெய்வேலி.

‘ ‘கனவு ‘ ‘ – திருமணமானவனுக்கு

மலரும் நினைவுகள்

காதலனுக்கு தடுமாறும் நினைவுகள்.

‘ ‘தபால்காரன் ‘ ‘ – மின்னஞ்சலில்

காணாமல் போன,

போன நூற்றாண்டின்

காதல் தூதன்.

‘ ‘மரணம் ‘ ‘ – எல்லா சாகசங்களையும்

தவிடுபொடியாக்கி

மனிதனை வெல்லும் நிஜம்.

எல்லா நிஜங்களையும்

பொய்யாக்கும் சூனியக்காரன்.

‘ ‘அகராதி ‘ ‘ – வார்த்தைகளுக்கு

பொருள் சொல்லி,

வாழ்க்கையை தொலைக்கும்.

‘ ‘நான் ‘ ‘ – நீ, நீங்கள், அவர்கள்,

இவர்கள், அது, இது, அவைகள்,

எல்லாற்றுக்கும் எதிரி.

….

(2)

.. சுவர்கள் – சித்திரமின்றி ..

பெரியப்பா வீடுமட்டும்

இன்னும் மாறவில்லை,

அவர் விட்டுச்சென்ற

தலைவர்களின் படங்கள்

சுவரெங்கும்,

அவர்களின் பெயரை

பிள்ளைகளுக்கும் இட்டிருந்தார்.

நீதிக்கதைகள்

நிறைய சொல்லுவார்,

லட்சியப் பாத்திரங்கள்

உதாரணம் காட்டுவார்,

வாழ்க்கைநெறி ஒன்றை

வாழ்ந்து காட்டினார்.

என்பிள்ளை தன்பெயருக்கு

காரணம் கேட்டால்

என்னசொல்வேன்!

வாழ்ந்தவர் யாரைச்சொல்லி

திசை காட்டுவேன்!

வாழ்ந்து காட்டும்

பாத்திரங்கள் தான் உண்டா

படைப்புகளில், திரைகளில்!

என் சுவரெல்லாம் வெறுமை.

—-
punnagaithozhan@yahoo.com

Series Navigation

author

கி.சீராளன்

கி.சீராளன்

Similar Posts