கி. சீராளன் கவிதைகள்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

கி. சீராளன்



நாளை

பெருத்த கல்லொன்று

மோதுமென்றார்கள்

பூமியில் பலதேசம் நாசம் என்றார்

வந்தது பிரளயம்

எனப்பயந்தார்.

கோயிலெல்லாம்

ஆறுகால பூஜை

காத்துக்கிடந்தார்

உயிரை கையில் பிடித்த

மனிதர்.

பூஜை முடிந்தால்

வேலையை பார்க்கலாம்,

தாமதமானதில் சலித்துக்கொண்டார்

பக்த கோடி.

கரண்ட்டுக்கு பணம் கட்டுவதில்

தொடங்கி

டெலிபோன் பில்,

குடும்ப அட்டையில்

கெளரவ முத்திரை,

வாக்காளர் பட்டியல் திருத்தம்.

பிள்ளைக்கு

பள்ளியில் பணம் கட்ட

அல்லது

திட்டு வாங்க

வண்டிக்கு

முடிந்துபோன இன்ஷூரன்ஸ் மீட்க

படுத்திருக்கும் அப்பனுக்கு

மருந்து வாங்க

பாரியாளுக்கு வாங்கிய சேலை மாற்ற

ஆயிரம் வேலையிருக்கு செய்ய,

இந்த பூஜை முடிந்தால் தேவலை.

நாளை….


மறந்து போனார்கள்

ஐந்து வேளை சினிமா பார்த்து

அயர்ந்து போயினர்

குழாய்களின் கேபிள்களால்

நரம்புகள் கட்டுண்டு

மனிதர்

போராடும் குணம்

மறந்து போயினர்

சுற்றிலும் பெட்ரோல் பெய்கையில்

முரண்டுபண்ணவும் தோணவில்லை

பஸ்ஸின் கூரையை பிய்த்துக்கொண்டு

ஒரு ஹீரோ வரவே காத்திருந்தார்

அவன் அருளாசிக் கனவில்.

தீண்டியபின்தான் தெரிந்தது

தீ.

யாரும் வரவேயில்லை

மொத்தமாய் மாண்டுபோயினர்.

punnagaithozhan@yahoo.com

Series Navigation

author

கி.சீராளன்

கி.சீராளன்

Similar Posts