தவம்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

வை.ஈ. மணி


ஐந்தையும் குழைத்து ஐம்பு லனாக்கி
ஐந்தையும் அவனிக் களித்து மனிதர்
போற்றிடும் இறைவன் புதிர்போல் பாரில்
சேற்றினில் முளைக்கும் செந்தா மரைபோல்
உடலெனும் அழுக்கை உறையாய்ப் பூண்டு
குடத்தினுள் விளக்காய் குன்றி நின்றான். (1)

வலையினில் விழுந்த விலங்கைப் போலும்
புலன்களின் வலுத்த பிடியில் சிக்கி
நாடகம் நிகழ்த்தும் நோக்கம், புறத்தில்
தேடியு மறியத் தளைத்த மனிதன்
அறிவினை யளித்து அகத்தி லமர்ந்த
இறைவனை எளிதில் உணர்வ தற்கே. (2)

கடலினி லெழுந்து கரிய முகிலாய்
கடலுடன் தண்ணீர் கூடல் போன்று
பூரணன் படைப்பில் புகுந்து வாழ்வை
போரெனச் செய்து பற்றை அகற்றி
அகவுயிர் முழுமை யடைந்து தன்னில்
தொகுத்திட ஆதரித் தருளு கின்றான். (3)
—-
ntcmama@pathcom.com

Series Navigation

author

வை ஈ மணி

வை ஈ மணி

Similar Posts